கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கும் பணிகள் நேற்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்
இவ்விடயத்தில் அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங்குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் கடற்படையினரால் கப்பல் நங்கூரமிடுதல் மற்றும் மீன்பிடி இறங்குதுறை அமை க்கப்பட்டு வருகிறது.
மேற்படி இறங்குதுறை அமைக்கப்பட்டு தொழிற்படுமாயின் கீரிமலை கடற்கரையில் இடம்பெறுகின்ற அனைத்து புண்ணிய காரியங்களும் மாசுபடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.
அதாவது கண்டகி தீர்த்த கரையில் இடம் பெறும் மகாசிவராத்திரி தீர்த்தம், ஆடி அமாவாசை தீர்த்தம், மற்றும் நாளாந்தம் பெருமளவு மக்கள் தமது இறந்தவர்களின் ஆத்ம சாந்தி நிகழ்வுகளான அந்தியேட்டி மற்றும் பிதிர்கடன் நிகழ்வுகள் என்பன இறங்குதுறையின் செயற்பாட்டினால் மாசுபடும்.
ஆகவே உடனடியாக இறங்குதுறை அமைப்பதை நிறுத்தி சைவத் தமிழ் மக்களின் புனித பிரதேசத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவ வேண்டும் என இந்து அமைப்புக்கள் பல கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பாக தமது எதிர்ப்பை ஒரு சிறு போராட்டமாகவும் நடத்தியிருந்தனர்.
யாழ் மாவட்ட அரச அதிபரும் குறித்த பகுதியில் இறங்குதுறை அமைக்கும் பணியை நிறுத்துமாறு அறிவித்திருந்தார். அத்துடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி குறித்த பகுதியில் இறங்குதுறை அமைக்க மாட்டோம் என உறுதி அளித்திருந்த நிலையில் குறித்த பகுதியில் நேற்றைய தினம் இறங்குதுறை அமைப்பதற்கான வேலைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் ஆடிய அமாவாசை நாளாக இருப்பதால் பக்தர்கள் அதிகமாக வரவுள்ள நிலையில் குறித்த பகுதியில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்வது அடாத்தான செயல் எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த செயற்பாட்டினை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.