பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்! மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று இரவு பொலிஸ் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு திராய்மடு பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நீண்ட காலமாக வர்த்தகர் ஒருவர் அடாவடித்தனங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று குறித்த வர்த்தகரினால் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன், வர்த்தகர் மீது ஆத்திரம்கொண்ட மக்கள் அவரை தாக்கியுள்ளனர். இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்த்தகரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், கைதுசெய்யப்பட்ட வர்த்தகர் இன்று பிற்பகல் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். மேலும், குறித்த வர்த்தகரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆறு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இந்நிலையில் குறித்த வர்த்தகரை கைதுசெய்யுமாறும், கைதுசெய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
எனினும், கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்ய வேண்டும், வர்த்தகர் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் பொது மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இதேவேளை குறித்த வர்த்தகரை கைதுசெய்யும் நோக்கில் பெருமளவான பொலிஸார் திராய்மடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila