நான் கூறி அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை! வடக்கு முதல்வர் சாடல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அம்மையார் ஜனாதிபதியாக பதவி வகித்த போது வடக்கு மக்களின் தேவைகளை அறிய முடியாத நிலை காணப்பட்டது.
எனினும், தனது சேவைக்காலம் முடிவுற்று ஓய்வு பெற்றுள்ள நிலையில் எம் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை மகிழ்வைத் தருவதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில், வேலணை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார், 2015 ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிக்கா அம்மையார் அவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையாகப்பாடுபட்டார்.
அந்த தேர்தலின் போது தமிழ் மக்களின் அமோக வாக்குகளாலேயே இப்புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.
அதற்கான நன்றிக் கடனாக அம்மையார் அவர்கள் எம் மக்கள் மீது அன்பு பாராட்டுகின்றார் என்று நாம் நினைக்க இடமுண்டு.
சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவும் அவர் உதவி புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
போர்க்குற்ற விசாரணை உரியவாறு பாரபட்சமின்றி நடைபெற்றால் தான் தேசிய ஒருமைப்பாடும் நல்லிணக்கமும் உருவாகலாம் என்பதை நான் கூறி அம்மையார் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
நடந்து முடிந்தனவற்றிற்குப் பரிகாரம் காணாமல் எமக்கு எவ்வளவுதான் நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் அவை எம்மைத் திருப்திப்படுத்தாது என்பதை அன்புடன் அம்மையாருக்குச் சொல்லி வைக்கின்றேன்.
சமாதானத்துக்கான முன்னுரிமை அச்சுவார்ப்புருவின் (Peace building Matrix) பிரதியொன்று எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நிலைமாற்றத்துக்கான நீதிமுறை Transitional Justice), நல்லிணக்கம் (Reconciliation), ஆட்சிமுறை (Governance), மீள்குடியேற்றமும் நிரந்தரத் தீர்வும் (Resettlement and Durable Solutions) என்ற தலையங்கங்களின் கீழ் குறித்த கருத்தாவணம் அமைந்துள்ளது.
அதில் போர்க் குற்ற விசாரணை சம்பந்தமாகவோ அதனை வழிநடத்துதல் சம்பந்தமாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குதிரைக்கு முன் கரத்தையைப் பூட்டுவது போல் குறித்த ஆவணம் இருக்கின்றது. ஆகவே இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பத்து வருடங்கள் கடமையாற்றிய சந்திரிக்கா அம்மையார் இந்தக் குறையைத் தீர்க்க வழிவகுக்க வேண்டும்.
சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். சர்வதேச வழக்கு நடத்துநர்களை உள்ளேற்க வேண்டும், சர்வதேச போர்க்குற்றங்களை எமது அரசியல் யாப்பின் 13 (6)ஆம் சரத்தின் கீழ் எமது சட்டவாக்கத்துடன் சேர்த்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்து நீதியான, போர்க்குற்ற விசாரணையை உறுதி செய்யாது, வெறும் பொருளாதார நன்மைகளை எமது மக்களுக்கு அளிப்பது அவர்களை விலைக்கு வாங்குவதாக அமையும்.
போர்க்குற்றங்கள் யார் இழைத்திருந்தாலும் அவற்றைக் கண்டு பிடித்து நியாயம் வழங்கி, நீதியை நிலை நாட்ட வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.
நீங்கள் இப்பகுதி மக்களின் துன்ப துயரங்களை நேரில் கண்டு உணர்ந்தவர் என்ற வகையில் இவர்களின் துன்ப துயரங்களை துடைப்பதற்கு தங்களின் மேலான அரசியல் பலத்தினையும் செல்வாக்கினையும் பயன்படுத்த வேண்டும்.
அதன் மூலம், கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெயர்ந்து முகாம்களில் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி துன்பச் சூழலில் வாழ்கின்ற எமது மக்களை மீண்டும் அவர்களின் சொந்த நிலங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேணடும்.
அத்துடன், அவர்களின் விவசாய நிலங்களை மீளக் கையளிப்பதற்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலையை எய்தக்கூடிய வகையில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கும் முயலவேண்டும் என்று அன்புடன் கூறி வைக்கின்றேன்.
மேலும், சந்தேகத்தின் பேரில் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டு சிறைக்கூடங்களில் வாடுகின்ற எமது இளைஞர் யுவதிகளை விடுவிப்பதற்கும், இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் போயிருப்பதாகக் கருதப்படும் போராளிகள் தொடர்பான விபரங்களை கண்டறிவதற்கும் ஒரு தாயார் என்ற விதத்தில் முயற்சிப்பீர்கள் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றார்கள்.
அவர்களின் நம்பிக்கையை வெல்லக்கூடிய வகையில் நீங்கள் தொடர்ந்தும் எம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila