இதனடிப்படையில் இப்பொழுது பொருளாதார வர்த்தக மையங்கள் மாவட்டங்கள் தோறும் 200 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டவுள்ளன.
அதன் ஒரு அம்சமாக வரவு - செலவுத் திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இது மாவட்டத்திற்கானதா...? அல்லது மாகாணத்திற்கானதா...? என்ற சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராது இழுபட்டுக் கொண்டே செல்கிறது.
மத்திய அரசும் இன்று வரை இதற்கான ஒரு முடிவை அறிவிக்காமல் தமிழ் மக்கள், தமிழ் அரசியல் சக்திகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களை கூறு போட்டு பிரதான பிரச்சனைகளில் இருந்து ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தையும் திசை திருப்பி பிரிந்தாளும் சூழ்ச்சிகள் ஊடாக அனைத்து குற்றங்களிலும் இருந்தும் தன்னை காப்பாற்றி கொள்ள முனைகிறது.
பொருளாதார கேந்திர நிலையம் அல்லது அதனுடன் ஒட்டிய வர்கத்த மையம் என்ற ஒன்று வருகின்ற போது அதிலும் குறிப்பாக கேந்திர மையத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஒன்றாக அது அமைக்கப்படும் போது துறைசார்ந்த வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் கொள்கை முடிவெடுத்து அமைப்பதே சாலச்சிறந்தது.
இப்படிப்பட்ட பார்வை தமிழ் பேசும் அரசியல் சக்திகளிடம் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி பலமாக எழுகின்றது. அரசியல் என்பது சமூக, பொருளாதார நலன்களை உள்ளடக்கிய ஒன்று.
ஆனால் எமது அரசியல்வாதிகளிடம் இந்த இரண்டும் இல்லாமல் வாய் சொல்லிலான தேசிய உணர்வு என்ற சொற்பதம் மட்டுமே இருக்கிறது.
ஒரு தேசத்தை கட்டியெழுப்புவது என்பது தனது சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எத்தகைய ஒரு திட்டத்தையும் எமது தற்போதைய தமிழ் அரசியல் தலமைகளிடம் காணமுடியவில்லை.
ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் சில இயக்கங்கள் தமது அரசியல் திட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுயசார்பு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், ஒரு அரசு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் வெளிநாட்டு கொள்கைகள் வகுப்பதில் எத்தகைய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பன தொடர்பாகவும் நன்கு சிந்தித்திருந்தன.
அத்தைகய அமைப்புக்களில் இருந்து ஜனநாயக வழிக்கு திரும்பியவர்களும் சரி, ஆரம்பம் முதலே தம்மை மிதவாதிகளாக காட்டிக் கொண்டவர்களும் சரி இன்றைய சூழலுக்கு ஏற்பவும் எதிர்கால அரசியலை முன்னெடுத்து செல்லும் வகையிலும் எத்தகைய திட்டத்தையும் கொண்டிருக்காமல் இருப்பது தமிழ் மக்களின் துரதிஸ்டமே.
தற்போதைய சூழலில் ஒட்டுமொத்த நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கின்ற வேளையில் ஒரு திறந்தவெளி பொருளாதார சந்தையின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான கொள்கையை மத்திய அரசு வகுத்து செயற்பட்டு வருகின்றது.
இந்த கட்டமைப்புக்குள்ளேயே வடமாகாண சபையும் இணங்கி செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆகவே ஒரு பொருளாதார மத்திய நிலையம் என்பது மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்பவே மாகாண சபையும் செயற்பட்டு, மாகாணசபை தன்னுடைய நிர்வாகத் திறமையின் ஊடாக தனக்கான பொருளாதார சந்தைதையும், பொருளாதார வர்த்தக கேந்திரத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.
இந்தப் பின்னனியில் வடக்கு மாகாணத்திற்கான அல்லது வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையமும் எமது நிர்வாகத்திறைமையை வெளிப்படுத்தி உலக சந்தையுடன் போட்டியிடக் கூடிய திறமை இருப்பதை பறைசாற்றுவதாக அமைய வேண்டும். இதற்கு ஒரு இடம் தேவைப்படுகின்றது.
இந்த இடம் எதிர்கால அபிவிருத்தியையும், விரிவாக்கத்தையும் ஏனைய கைத்தொழில் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வழிகாட்டுவதாக அல்லது உறுதுணை செய்வதாகவும் அமைய வேண்டும். அத்தைய ஒரு இடமானது ஒரு நிபுணர் குழுவை அமைத்து துறைசார் வல்லுனர்களுடன் நன்கு ஆலோசித்து கொள்கை வகுத்து தீர்மானிக்கப்பட வேண்டும்.
அதன்போது மாகாண முதலமைச்சரும், பிரதமரும், சம்மத்தப்பட்ட மத்திய, மகாண அமைச்சர்களும் கலந்துரையாடி இடத்தின் சாதக பாதகங்களை ஆராய்ந்து முதலாவதாக கொள்கை முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னரான விடயங்கள் அனைத்துமே நடைமுறை சார்ந்த விடயங்கள். இவைகளை அடைவதற்கு திட்டமிடல் சரியாக இருந்தாலே போதுமானது.
ஆனால் அது இப்பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் நடைபெற்றதாக தெரியவில்லை. ஒரு போட்டி போடக் கூடிய பொருளாதார கேந்திர நிலையத்தை உருவாக்குவதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் வடபகுதிக்கு வருவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அவர்களுடைய வருகையின் போது ஒரு இடத்தில் பொருட்களை இறக்கிவிட்ட பின்னர் அங்கிருந்து வேறு பொருட்களை கொண்டு செல்வதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறனதொரு மையத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு ஓமந்தையே சிறந்தது என்று 2010 ஆம் ஆண்டு நிபுணர் குழுவால் அடையாளப்படுத்தப்பட்டது. அது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
இன்றைய சூழலை பார்க்கையில் தென்பகுதியில் இருந்து வருபவர்களுக்கு வடமாகாணத்தின் நுழைவாயிலாக இருக்கக் கூடிய வவுனியாவே ஒரு பொருத்தமான இடமாக அமையும். இடவசதிகளைப் பார்க்கின்ற பொழுதும், தமிழ் வர்த்தக விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொள்ளுமிடத்தும் ஓமந்தை பொருத்தமானதாக இருக்கும். அடையாளமிடப்பட்ட இடமானது எதிர்கால விஸ்தரிப்புக்கு இடமளிப்பதாக இருக்கின்றது.
மேலும், வடமாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் கைத்தொழில் முனைவோர் எனப் பலரும் எதிர்காலத்தில் அமையக் கூடிய காகேசன்துறை துறைமுகம் மற்றும் முல்லைத்தீவு துறைமுகம் ஆகியவற்றின் ஊடாக தமது பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கும் ஓமந்தை பொருத்தமானதாக அமையும்.
தென்பகுதியில் இருந்து வருகின்ற உற்பத்திப் பெருட்களையும், வடபகுதியில் இருந்து வருகின்ற உற்பத்திப் பொருட்களையும் பரிமாற்றம் செய்யும் கேந்திரமாக ஓமந்தை இருக்குமாக இருந்தால் வடபகுதியைச் சார்ந்த அனைவருக்கும் ஒரளவுக்கேனும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். பிரயாசை உள்ளவர்கள் போட்டி போட்டு முன்னேற வழிவகுக்கும்.
இவ்வாறு பல விடயங்களை நாம் அடுக்கிக் கொண்டே போக முடியும்.வியாபார நுணுங்களையும் தொழில் இரகசியங்களையும் நன்கு அறிந்தவர்கள் ஒமந்தையின் உடைய முக்கியத்துவத்தை புரிந்து செயற்படுவார்கள். ஓமந்தையில் அமைப்பதை எதிர்க்கும் மத்திய அமைச்சர்கள் இந்த நுணுக்கத்தை தெரிந்ததால் தான் தமது நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வடமாகணத்திற்கு கொடுத்ததாகவும், தமது நலன்சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என கருதி செயற்படமுனைகிறார்கள்.
வேறு சிலர் குறுநில அரசியல் தேவைகளை முன்னிறுத்தி இதனை எதிர்க்கிறார்கள். இதனையே அவர்களின் செயற்பாடுகளில் இருந்து அவதானிக்க முடிகிறது. மறுபுறம் தற்போது மாங்குளம் தொடர்பாகவும் பேசப்படுகிறது. வடக்கைப் பொறுத்த வரை மாங்குளம் என்பதும் சிறந்த இடம் தான். அதில் சந்தேகம் இல்லை. விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் கூட வடக்கின் மையமாக மாங்குளத்தையே கருதி செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆனால் அவர்களின் நிர்வாக மையம் கிளிநொச்சியிலேயே அமைந்திருந்தது.
வடமாகாணத்தினுடைய தலைமைச் செயலகம், அமைச்சுக்களின் மையங்கள் என்பன எதிர்காலத்தில் மாங்குளத்தில் அமையவுள்ளதாக தகவல்கள் உள்ளது. அத்தகைய ஒரு சூழலில் மாகாணத்தின் அனைத்து திணைக்களங்களும் மாங்குளத்திலேயே அமையப்பெறும். இதனால் மாங்குளம் இடநெருக்கடியையும், சனநெருக்கடியையும் சந்திக்க நேரிடும். இவ்வாறான நிலையில் பொருளாதார மத்திய நிலையத்தையும் மாங்குளத்தில் அமைப்பதால் எதிர்கால விஸ்தரிப்பின் போது விவசாயம் தவிர்ந்த ஏனைய உற்பத்தி பொருட்களை உருவாக்குவதற்கான தொழில்சாலைகளை அங்கு உருவாக்க முடியாதநிலை வரும்.
இது தொடர்பில் தூரநோக்கி அபிவிருத்தியில் சிந்திக்கப்பட வேண்டும். இதனால் விவசாயம் தவிர்ந்த உள்ளூர் கைத்தொழில்களையும் உள்ளடக்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்வற்கான பொருத்தமான இடம் ஓமந்தையே. அதனை அண்டிய பகுதிகளில் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக உற்பத்திப் பொருட்களை செய்வதற்கான தொழில்சாலைகளை நிறுவதற்கும் இடவசதி உள்ளது. அதற்கு மாகாணசபையும் முன்வரவேண்டும்.
இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உடைய தலைவர் தனது எதிர்கட்சித் தலைவர் பதவியை பயன்படுத்தி மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இத்தகைய அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் மாகாண சபை மேற்கொள்வதற்கு வழிசமைக்க வேண்டும்.