யாழ்ப்பாணத்தில், இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் கீரிமலையில் சிறீலங்கா அரசாங்கம் மீன்பிடித்துறைமுகத்தை அமைக்க எடுத்த தீர்மானம் சினத்தை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) ஆடி அமாவாசைத் தினத்தையொட்டி கீரிமலையில் நடைபெற்ற பிதிர் கடன்களைத் தீர்க்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் பிதிர் கடன் நிறைவேற்றும் பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரம் ஏக்கர் மக்களின் காணிகளுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின் பிரபல்யம் மிக்கதும், மீன்வளம் மிகுந்ததுமான மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்துள்ள பொதுமக்களின் காணிகளையும் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் போராடி வருகின்றார்கள்.
1990ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் பாலாலியை அண்டிய பிரதேசங்களான மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய பிரதேசங்களிலிருந்து மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது குறிப்பிட்ட ஒரு பகுதியே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி துறைமுகத்தையும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களையும் மீளக் கையளிப்பதாகக் கூறிக்கொண்டு, அதன் அருகில் உள்ள இந்துக்கள் புனிதமாகக் கருதும் தலமாகிய கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொள்வது கண்ணியமற்ற செயலாகும் என வடமாகாண முதலமைச்சர் சாடியுள்ளார்.
எந்த மதத் தலங்களாயினும் மதங்களின் புனிதம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற முறையில் கீரிமலையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் இதனைப் புரிந்துகொண்டு மாற்றுத் திட்டங்களை முன்வைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளையில் கீரிமலையில் மீன்பிடித்துறைமுகம் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.