கருத்தறியும் செயலணிகள் மாயமான்களாகுமா?


இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து எத்தனையோ பேச்சுவார்த்தைகள் இந்த நாட்டில் நடந்தாயிற்று. 
தந்தை செல்வா - பண்டா ஒப்பந்தம் முதல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் வரை அனைத்தும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கானது.

இருந்தும் அவை எதுவும் இன்று வரை சாத்தியப்படாமல் போயிற்று. தமிழ் மக்களுக்கு எதையும் கொடுத்துவிடக்கூடாது என்ற மனநிலையில்  இருக்கக் கூடிய சிங்கள ஆட்சியாளர்களால் இன்றுவரை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை.

இனப்பிரச்சினைக்கு தீர்வு தாருங்கள் என்றால் தமிழனை அழி என்று படைகளுக்கு உத்தரவு விடுவதும் காலத்திற்குக் காலம் பேரினவாதிகளை ஏவிவிட்டு தமிழ் மக்களை தாயகத்தில் அழிப்பதுமே நடந்து வருகிறது.

இதன் உச்சக்கட்டமாக தமிழின அழிப்பை கடந்த ஆட்சியாளர் செய்து முடித்தனர். அவர்கள் செய்த இன அழிப்பு சர்வதேச நாடுகளினதும் மனித உரிமை அமைப்புகளினதும். கவனத்தை ஈர்த்தபோது, ஜெனிவாவுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இலங்கை அரசிற்கு ஏற்பட்டது.

ஒரு நாட்டிற்குள் வாழ கூடிய ஒரு இனத்தை துவம்சம் செய்துவிட்டு ஜெனிவாவில் பதிலளிப்பது சாத்தியம் இல்லை என்றவுடன் தமிழ் அரசியல் தலைமைக்கு பதவியைக்கொடுத்து நடந்தது நடந்தாயிற்று இனி நடப்பதைப் பார்ப்போம் என்பது போல சொல்லிவைக்க, தமிழ் மக்கள் நம்பியிருந்த தமிழ் அரசியல் தலைமை தன்னினத்திற்கு மகா கொடுமைத்தனத்தை செய்யும் வகையில், போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தாமல் பேசாமல் விட்டுவிட்டது. இந்த அபத்தம் நடந்தபோதும் தமிழ் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். 

அந்த நீதி கிடைப்பதாக இருந்தால் சர்வதேச நீதிபதிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தபோது இவற்றை திசை திருப்பி ஜெனிவாவில் சமாளிப்பு நாடகத்தை அரங்கேற்ற மக்களின் கருத்தறியும் செயலணிகளை இலங்கை ஆட்சியாளர்கள் வடபுலத்திற்கு ஏவிவிட்டுள்ளனர்.

இவ்வாறு ஏவப்பட்ட மக்கள் கருத்தறியும் குழுக்கள் தமிழ் மக்கள் வழங்கிய கருத்துக்களை திரிபுபடுத்தி அறிக்கையாக சமர்ப்பித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இது அவர்களின் கடமைகளில் ஒன்றாகக் கூட இருக்கலாம். 

இது தவிர இத்தகைய செயலணிகளில் இடம் பெறுபவர்கள் ஒரு பக்க சார்புடையவர்களாக இருப்பதையும் காணமுடிகின்றது.

தமிழ் பெயர்கொண்டவர்கள் இச் செயலணிகளில் இடம்பெற்றிருந்தாலும் அவர்களிடம் தமிழ் பற்று உள்ளதா? அவர்களுக்கு தமிழ் பேசத் தெரியுமா? தமிழர்களின் நிலைமைதான் தெரியுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

எது எப்படியாயினும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டபோது தமிழ் உறவுகள் அழுது அழுது வழங்கிய சாட்சியங்கள் இந்த அரசுக்கு போதாது என்றால், வடக்கிற்கு வரும் செயலணிகள் மாய மான்களாகவே இருக்கும் என்பதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். 

அதாவது தமக்கு சார்பானவர்களிடமிருந்து எடுக்கும் தகவல்களை  ஜெனிவா சமாளிப்புக்குப் பயன்படுத்தும் பொருட்டே செயலணிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தீர்மானிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila