கிளிநொச்சி சந்தை எரிந்ததா? எரியூட்டப்பட்டதா? விசாரணை வேண்டும்

kili-market-fire

யுத்தத்திற்குப் பின்னர் கிளிநொச்சி சந்தையில் ஏற்பட்டிருந்த தீ பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. 100க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த எந்த வசதியும் இல்லாமல் எல்லாமும் எரிந்து போகும் வரை எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தீயின் கோரத் தாண்டவம் அரங்கேறி முடியும் வரை அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கரைச்சி பிரதேச சபைக்கு சட்ட ரீதியாக தீயணைப்பு வாகனமொன்றை வழங்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போதும், இதுபோன்ற அனர்த்தங்கள் நடக்கின்றபோது அதைக் கட்டுப்படுத்தவும், சேதங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் என்ன ஏற்பாடு என்பதற்கு இதுநாள் வரை தீர்வு காணப்படவில்லை. யுத்தத்தில் பெரிதும் சிதைவடைந்திருந்த கிளிநொச்சி நகரத்தில் இப்போது இடிபாடுகளுடன் கட்டிடங்களைக் காணமுடியவில்லை. பிரதான வீதியானது கொழும்பு வீதிகளைப்போல் அழகாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதிய தோற்றத்துடன் வியாபார நிலையங்கள் நாளாந்தம் முகம் காட்டுகின்றன. ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதா என்று கவனித்தால் இல்லை என்பதையே இந்த தீ பற்றிய சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது. புடவைக் கடைகள், காலணி வியாபார கடைகள், அழகு சாதனைப் பொருட்கள் வியாபார கடைகள் என்பவற்றொடு மிக அதிகமாக எரிந்து போனது பழக்கடைகள். குடைகள் எரிந்து போனதால் ஏற்பட்ட நஷ்ட்டம் எவ்வளவு என்பதை இதுவரை உறுதியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை. ஆனாலும் கோடிக்கணக்கில் அழிவு ஏற்பட்டிருக்கலாம் என்று வர்த்தகர்கள் கூறியிருக்கின்றார்கள். கரைச்சி பிரதேச சபையின் தற்போதைய மதிப்பீட்டின்படி 125 கடைகள் எரிந்து போனதில் சுமார் 225 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தெரிவிக்கின்றது. வர்த்தக நிலையங்களை நோக்கி சுகாதார பரிசோதகர்கள் வருகின்றபோது ஆயிரம் குற்றங்களை கண்டுபிடித்து அதற்கு சட்டத்திற்கு அமைவாகவும், அதற்கு மேலாகவும் அறவீடுகளை பெற்றுச் செல்கின்றனர். சில வேளைகளில் கொடுக்கல் வாங்கல்களில் இணக்கம் ஏற்படாவிட்டால் வழக்குகள் வரை பிரச்சினை தலைதூக்கி விடுகின்றது. அதேபோல் பிரதேச சபையினர் தவறாமல் வரிகளைகளும் அறவிடு செய்கின்றனர். இத்தனையும் செய்து திரட்டப்படும் நிதியிலேயே அரசாங்க அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றார்கள், வடக்கு மாகாண சபையினர் சம்பளமும், சலுகைகளும் பெறுகின்றார்கள். வரிப்பணம் வழங்கும் மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளை செய்துகொடுப்பதும், அனர்த்தங்களின் போது அதிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குவதும் இதே அதிகாரிகளினதும், மாகாண சபையினரதும் கடமைப்பொறுப்பாகும் என்பதையே இன்று கிளிநொச்சி மக்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். யுத்தப் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களாக கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் அபிவிருத்தி என்பதும், மீள் எழுச்சி நடவடிக்கைகள் என்பதும் நகரப் பகுதியை மட்டும் அழகாக தூக்கி நிறுத்துவதாக இருக்க முடியாது. கிராமங்களில் வீடுகள் வசதியாக கட்டிக்கொடுக்கப்படாமலும், கைம்பெண்களாக இருக்கும் பெண்களின் பொருளாதாரத்துக்கு உதவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படாமலும், வீதிகள் செப்பனிடப்படாமல் கிறவல் வீதிகளில் செம்புழுதியுடன் போராடும் மக்களுக்கும், பாடசாலை பிள்ளைகளுக்கும் ஒரு விடிவை ஏற்படுத்தாமலும், குடி தண்ணீருக்கு பல கிலோ மீற்றர்கள் அலையும் அவலத்திற்கு முடிவு கட்டாமலும், துயரங்களைச் சுமந்து தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றுக்கு தீர்வுகான்பதற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தவிர்த்து எஞ்சிய 35 சட்டங்களும் போதுமானது என்று பொதுமக்கள் முன்வைக்கும் விமர்சனங்களையும் நாம் புறமொதுக்கிவிட முடியாது. ஏன் என்றால் மாகாண சபைக்கு இருக்கின்ற அதிகாரம் என்பது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு மட்டும்தான் போதுமானதா என்ற கேள்வி மக்களிடம் இருக்கின்றது. கிளிநொச்சி சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வங்கிகளில் கடன்பெற்றே வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள். ஆகவே அவர்களின் நஸ்ட்ட ஈடுகள் தொடர்பாகவும், கடன்களை இரத்துச் செய்வது, அல்லது வட்டிகளை இரத்துச் செய்வது தொடர்பாகவும் மாகாண சபை நிர்வாகம் தங்களுக்கு உதவ வேண்டுமென்று பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் தமக்கு நிரந்தர சந்தைக் கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டு மீண்டும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும்வரையும் தமக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். தீயினால் எரிந்து கருகிப்போய் காட்டிசியளிக்கும் சந்தைப் பகுதியை பார்வையிடுவதற்கு வருகை தந்திருந்த வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதாகவும், நஷ்ட்ட ஈடுகளை வழங்க மாகாண சபையிடம் நிதி இல்லை என்றும், உதவும் நிறுவனங்கள் ஊடாக உதவிகளைப் பெற்று இரண்டொரு மாதங்களில் நஷ்ட்ட ஈடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கின்றார். மாகாண அரசிடம் பணம் இல்லாவிட்டால் மத்திய அரசிடம் பெற்றுத் தாருங்கள். இதுபோன்ற அனர்த்தங்கள் தென் இலங்கையில் நடைபெற்றால் அந்த மாகாண சபையோ, மத்திய அரசோ இவ்வாறு தம்மிடம் பணம் இல்லை என்றும் யாரிடமாவது உதவி பெற்று தர முயற்சிக்கின்றோம் என்றும் பொறுப்பற்று பதிலளிப்பதில்லை. அவர்கள் உடனடியாகவே உதவிகளையும், நஷ்ட்ட ஈடுகளையும் வழங்கி விடுகின்றார்கள். யாரும் இரண்டொரு மாதங்கள் வரை நஷ்ட்ட ஈடுகளுக்காக எரிந்துபோன சாம்பருக்குள் இருந்து அழுது கொண்டிருப்பதில்லை என்று தமது அதிருப்திகளை வர்த்தகர்கள் வெளியிட்டார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு கிளிநொச்சிக்கு தீயணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், சந்தைக் கட்டிடத்தை நிரந்தரக் கட்டிடங்களாக அமைத்துத் தர வேண்டும் என்றும் வர்த்தகர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இதற்கிடையே சந்தைக்கட்டிடப் பகுதிக்குள் எவ்வாறு தீ பரவியது? மின்சார கசிவா? அல்லது சதிகாரச் செயலா? என்பதை ஆராய வேண்டும். சந்தைக் கட்டிடப் பகுதிக்கு அருகாமையில் பிரதேச சபையினர் கழிவுப் பொருட்களை தீயிட்டு அழித்ததாகவும் வர்த்தகர்கள் கூறியிருக்கின்றார்கள். அவ்வாறெனின் அங்கிருந்து தான் தீ காற்றில் பறந்து வந்து பற்றிக்கொண்டதா? அல்லது இந்த தீ அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு வைக்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கும் விடை காணப்படுவது அவசியமாகும். ஈழத்துக் கதிரவன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila