யுத்தத்தின்போது இறந்தவர்கள் மற்றும் காணாமல்போனோர்களின் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வீடுகளுக்கு தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவிரினர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக போரின் போது கணவன்மாரைக் கொண்ட குடும்பப் பெண்களையே விசாரணையென அழைத்து துன்புறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றன.
இதற்கு உதாரணமாக, அண்மையில் லெப்.கேணல் கலையழகனின் மனைவி விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டார். நல்லாட்சி அரசாங்கம் எனச் சொல்லும் அரசாங்கத்திலும் அச்சுறுத்தல்கள், கடத்தல்கள், கைதுகள் என சட்டவிரோதமான அனைத்துச் செயற்பாடுகளும் நடைபெற்றே வருகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இதைவிட, தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்லும் முன்னாள் போராளிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், இதனால் தாம் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்வதற்கு அச்சப்படுவதாகவும் முன்னாள் போராளிகள் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.