வடக்கின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுதும் கோரிக்கை மடல்


அண்மையில் வலம்புரி ஆசிரியர் பீடத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது. அந்த அழைப்பை பொறுப்பான பதவியில் இருக்கக்கூடிய ஓர் அன்பர் எடுத்திருந்தார். வடக்கின் முதலமைச்சரை விக்கி என்று வலம்புரி  தனது செய்தித் தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. 

இதனை தவிர்த்து முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எனக் குறிப்பிடுமாறு அவர் தன் கருத்தைப்  பதிவு செய்திருந்தார்.

வலம்புரிப் பத்திரிகையில் விக்கி என்று வருவது வருத்தம் தருவதாகவும் அவர் தனது ஆதங்கத்தை முன்வைத்திருந்தார். 

வலம்புரிப் பத்திரிகை எப்போதும் நடுவு நிலையோடு தன் பணியை செய்து வருகிறது. அதேவேளை வலம்புரிப்பத்திரிகை என்பது பொது மக்களினுடையது. அதை ஒருபோதும் தங்களுடையதாக நிர்வாகம் கருதியதில்லை. 

அதனால் தான் வலம்புரி தர்மத்தோடு தன் பணியை தொடர முடிகிறது. 
பத்திரிகை எங்களுடையது. நாங்கள் எதையும் எழுதுவோம் என்று செயற்பட்டால், பின்னாளில் அது எங்களை வாட்டும்; வருத்தும்; வதைக்கும் என்ற தர்மத்தை நாங்கள் ஒரு போதும் மறந்ததில்லை. 

சிலர் நினைக்கலாம் வலம்புரிக்கு தாக்கி எழுதத்தெரியாது என்று; உண்மை அதுவல்ல. தர்மத்திற்குப் பயப்படுகிறோம்; நீதிக்குப் பயப்படுகிறோம். 

பத்திரிகை நடத்துகின்ற ஒரு பெரும் சந்தர்ப்பத்தை இறைவன் நம்மிடம் தந்திருப்பதால் அவனுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் அந்த இறைவனுக்குப் பயப்படுகிறோம். ஆகையால் தான் வலம் புரிக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் - செயற்படுகின்றவர்களின்  செய்தியையும் வலம்புரி பிரசுரிக்கின்றது. அது பத்திரிகை தர்மம் என்று கருதுகிறது. 
இது ஒரு சிறுகுறிப்பு. இந்தக்குறிப்பின் இடைச் செருகல் எதற்கானது என்று நீங்கள் கேட்கலாம்.

வலம்புரி யாரையும் எதிராய் பார்ப்பதில்லை யாரையும் கொச்சைப்படுத்த நினைத்ததும் இல்லை. விக்கி என்ற சொற்பதம் ஓர் அன்பருக்கு ஏற்படுத்திய தாக்கத்தை நினைத்தபோது அதிர்ந்து போனோம்.

முதலமைச்சர் மீது எங்கள் மக்கள் கொண்டுள்ள மதிப்பு, மரியாதை, கெளரவம் கண்டு நெகிழ்ந்து போனோம்.

இதை முதலமைச்சரும் அறியவேண்டும் என்பதற்காகவும் இவ்விடத்தில் குறிப்பிடுகின்றோம். 
அட! எதிர்க்கட்சித் தலைவருக்கு ... என்று எழுதிவிட்டு ஏதோ சொல்கிறீர்களே! என்றவாறான உங்கள் முகச்சுழிப்பும் தெரிகிறது. 

ஆம், வடக்கு மாகாணத்தின் கெளரவ எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா அவர்களே! உங்களிடம் இருக்கக்கூடிய திறமைக்கு முதற்கண் பாராட்டுக்கள். அதேவேளை அண்மைக் காலமாக நீங்கள் முதலமைச்சருக்கு எதிரான தலைவராக செயற்படுவது போன்ற தோற்றப்பாட்டை அவதானிக்க முடிகின்றது. பொது மக்களும் இது பற்றி பிரஸ்தாபிக்கின்றனர். 

கூட்டமைப்பின் கொழும்புத்தலைமையின் வழிப்படுத்தலில் நீங்கள் முதலமைச்சரை எதிர்ப்பதாக பேசப்படுகிறது. அதற்கான சான்றாதாரங்களும் இருக்கவே செய்கின்றன. 

ஆக, முன்பு போல் ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுங்கள். விக்கி என்று குறிப்பிட்டதில் கூட வேதனைப் படுபவர்கள் நம் மக்கள் என்றால், முதலமைச்சரை நீங்கள் எதிர்ப்பது உங்கள் எதிர்கால அரசியலுக்கு நல்லதல்ல. மற்றையவர்கள் உங்களைப் பயன்படுத்துவதற்கு இம்மியும் இடம்கொடுத்து விடாதீர்கள். 

முடிந்தால் உங்கள் மீது நல்ல நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ள முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பணிக்கு உந்துசக்தியாக இருங்கள். அதுதான் நன்மை பயக்கும். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila