நம்பியிருந்தார் தலையில் மண்ணைக் கொட்டுதல் முறையோ!


 ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு இப்போது எப்படி நடந்து கொள்கிறது என்பதை வெளிப்படையாகக் காணமுடிகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் கூட்டம் கூட்டி இலங்கை அரசுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது.

கால அவகாசம் கொடுத்தால் தமிழ் மக்களின் கதி அந்தோ என்றாகிவிடும் என தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூகம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் கோரிக்கை விட்டிருந்தும் அதுபற்றி இம்மியும் கவனம் செலுத்தாமல் கால அவகாசம் வழங்குவது என்ற தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றியிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு இப்போது தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் தமிழ் மக்களிடையே கொதிப்பை - எதிர்ப்பை ஏற்படுத்தும் தோரணையில் நடந்து கொள்கிறது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தில் போர்க்குற்றம் எதுவும் நடைபெறவில்லை, பின்பு எதற்காக படையினரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

படையினர் மீது போர்க்குற்ற விசாரணை செய்யப்பட வேண்டும் என்றால் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றத்தை யார் விசாரணை செய்வது என்பதும் அவரின் கேள்வியில் உள்ளடங்கியுள்ளது.

சிங்கள அரசியல்வாதிகளில் ஒரு நல்ல மனிதர் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்படியாக மாறுவார் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நியாயம் உணர்ந்தவர் என்று கருதப்பட்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மிகப் பெரிய கருநாகம் போல நஞ்சைக் கக்கி விட்டுச் சென்றுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உடல், உள, சமூக, ஆன்மிக நிலைகளில் மிகவும் ஆரோக்கியம் குன்றியுள்ளனர்.

இந்நிலையில் போர்க்குற்றம் நடக்கவில்லை.  குற்றம் இழைக்காத படையினரை எவ்வாறு விசாரிப்பது என்றெல்லாம் கேள்வி எழுப்பி தமிழ் மக்களின் மனங்களை ரணமாக்கி விட்டுச் சென்றுள்ளார்.

ஒரு சுகாதார அமைச்சர், நல்லவர் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்த ஒருவர் இப்படி நடந்தது மிகப்பெரிய அநீதி. தமிழ் மக்கள்  ஜீரணிக்க முடியாத கருத்து.

விடுதலைப் புலிகள் இழைத்த போர்க் குற்றம் தொடர்பில் யார் விசாரிப்பது? என்று கேட்பது எந்தவகையில் நியாயமாகும். 

வன்னிப் போரில் விடுதலைப் புலிகளின் அமைப்பை அதன் தலைமையை, கட்டமைப்பை அழித்த பின்பு அவர்கள் செய்த போர்க் குற்றத்தை யார் விசாரிப்பது எனக் கேட்டால் நாங்கள் சொல்லக்கூடிய பதில்,
தமிழ் மக்கள் மீது போர்க்குற்றம் இழைத்தவர்கள் அழிந்திருந்தால்; அதைச் செய்த ஆட்சியாளர்கள் மாண்டிருந்தால் நாங்களும் போர்க்குற்ற விசாரணை தேவை என்று கேட்டிருக்கமாட்டோம் என்பதாகவே இருக்கும்.

எதுஎவ்வாறாயினும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்று கூறி நம் அரசியல் தலைமை நமக்கு வினையாக இருக்கும் போது மற்றவர்கள் என்ன கதைத்தாலும் அமைதியாய் கேட்பதைத் தவிர வேறுவழி ஏதுமில்லை. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila