மக்களுடைய கருத்தை கேட்டறிவது முக்கியம்


கடந்த சில தினங்களுக்கு முன்னால் ஆலயமொன்றுக்குச் சென்றேன். அங்கு மூன்று  நான்கு பெரியவர்கள் அந்த மாலைப் பொழுதில் மர நிழலில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தனர்.

இவர்கள் கூடியிருந்து என்ன கதைக்கிறார்கள் என்று மறைந்திருந்து கேட்டேன். அவர்கள் கதைத்தது இதுதான்.

இப்போது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓர் உடன்பாட்டுக்கு வருவதாகத் தெரியவில்லை என தகவல்கள் வெளிவருகின்றன.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை எப்படியும் கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

எனினும் இப்போது வெளிவருகின்ற தகவல்களின்படி ஏதோ ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தான் எல்லாவற்றையும் எதிர்ப்பது போலத் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

இவ்வாறு ஒருவர் சொல்ல; மற்றவர் அப்படியானால் ஐக்கிய தேசியக் கட்சி எல்லாம் தருவதற்குத் தயாராமோ என்று கேட்டார்.

இப்ப வருகிற செய்திகளைப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சி அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு சம்மதம் போலவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் எல்லாவற்றையும் குழப்புவது போலவும் காட்டிக் கொள்ளப்படுகிறது.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் சொன்னார் ஐயா, இதெல்லாம் அரசியல் இராஜதந்திரம். ஐக்கிய தேசியக் கட்சியைக் காப்பாற்ற வேணும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. 

அதற்காகச் செய்யக்கூடியது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு உடன்பட்டு வராதது போலத் தகவல் பரப்புவதுதான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அறிக்கைகளைப் பார்த்தால் அவை ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக இருப்பதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆளுங்கட்சி என்றோ  ரணில் விக்கிரமசிங்க பிரதமர் என்றோ தெரியாதது போல எங்கள் தரப்பு நடந்து கொள்கிறது. 

மாறாக இடைசுகம் ஜனாதிபதி மைத்திரிக்கு  எதிராகக் கருத்துரைப்பதைக் காண முடிகிறது. இதைக் கேட்ட நான் உண்மையிலேயே அதிர்ந்து போனேன்.

நாங்கள் இவ்வளவு தூரம் நுணுகிப் பார்க்கவில்லை. ஆனால் ஆலயத்தின் மரநிழலில் இருந்து கதைக்கும் இப்பெரியவர்கள் அரசியல் நகர்வுகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்துள்ளனர் என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அச்சந்தர்ப்பத்தில் இன்னொரு பெரியவர் சொன்னார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு நிறைந்த மதிப்பு கொடுப்பவர்.

அவருடைய கருத்துக்களைச் செவிமடுத்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பவர்.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு  முதலமைச்சர் விக்னேஸ்வரனைக் கண்ணில காட்டக்கூடாது.

முன்னர் ஒருமுறை முதல்வர் விக்னேஸ்வரனுடன் நான் கதைப்பதில்லை. அவருடன் இனி  ஒருபோதும் கதைக்கமாட்டேன் என்றெல்லாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேட்டி கொடுத்தவர். 

அப்ப கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை யாருடைய பக்கம் நிற்கும் என்பது தெரியும் தானே. அதுதான் அரசியலமைப்பை ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சி எதிர்ப்பது போன்ற காட்டாப்பு.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் உடன்பாடில்லை என்பது தான் உண்மை.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila