மகிந்த தரப்புக்கு வெள்ளி திசை எதிர்க்கட்சித் தலைமை பறக்கும்


பேரினவாத அரசியல் இராஜதந்திரத்தைக் கற்றுக் கொள்ளாத தமிழர்கள் எப்போதும் சிங்களவர்கள் வைக்கும் பொறிக்குள் விழுந்து போவதுதான் வழமையாகிவிட்டது.

கோழியாகப் பிறந்தால் கிடைத்த குப்பைகளைக் கிழறுவதுதான் விதியாகிவிடுவது போல தமிழ் அரசியல்வாதிகளும் சிங்கள அரசியல் இராஜதந்திரத்துக்குப் பலியாகிப் போவதுதான் விதியாயிற்று.

விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்கள் அவர்கள் அழிய வேண்டும் என நினைத்தனர். புலிகள் அழிந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்பதை அவர்களால் ஊகித்தறிய முடியவில்லை.

அவர்கள் நினைத்தது போல இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் தீட்டிய சதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாது போயிற்று.

விடுதலைப் புலிகள் தோற்று விட்டனர். அவர்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டனர் என்றவுடனேயே இலங்கை அரசு விடுத்த முதலாவது செய்தி, 

இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை. பயங்கரவாதமே இருந்தது. அதுவும் அழிக்கப்பட்டு விட்டது. இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாக இருந்தது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்தவர்கள் ஆட்சியாளர்களால் மெல்ல மெல்ல கைவிடப்பட்டனர்.

புலிகள் இருந்தபோது நீங்கள் எங்களுக்குத் தேவைப்பட்டீர்கள். புலிகளை எதிர்ப்பதற்கு உங்களை நாங்கள் பயன்படுத்தினோம். 

ஆனால் இப்போது புலிகள் இல்லை. பின்னர் எதற்கு நீங்கள் என்பதாக கதை முடிக்கப்பட்டது. கூடவே ஆட்சி மாற்றம் ஏற்பட, புலிகளுக்கு எதிரானவர்கள் முழுமையாக செயலிழந்தனர்.

அதேவேளை புலிகளுடன் தொடர்புடையவர்கள் போல பாசாங்கு செய்தவர்கள் நல்லாட்சியுடன் ஒட்டிக் கொண்டனர்.

இத்தகைய மாற்றங்கள் எதிர்பார்க்கக் கூடியவையே. பொதுவில் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாக உள்ளவர்கள், சம்பந்தப்பட்டவர் பதவியை இழந்து விட்டால் செத்த மாட்டில் உண்ணி கழன்றது போல எட்டச் சென்றுவிடுவர்.

இப்போது நல்லாட்சியுடன் ஒட்டி நிற்கும் தமிழ் அரசியல் தரப்பு நினைக்கிறது தாம் மிகப் பெரிய இராஜதந்திரிகள் என்று.

மகிந்த ராஜபக்ச­ தரப்புக்குக் கிடைக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இது கெட்டித்தனமல்லவா என்பது இவர்களின் நினைப்பு.

ஆனால் நல்லாட்சியின் நினைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இல்லாது செய்ய வேண்டும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் தீர்மானங்களை இம்மியும் அமுல்படுத்தாமல் தப்பித்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்கள்,  வன்னிப் போரில்  அதிக குற்றம் இழைத்த படையினர் இவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதாகும்.

இதற்காக தமிழ் அரசியல் தலைமைக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை கொடுப்பதே ஒரே வழி என முடிவு செய்து சம்பந்தர் ஐயாவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.

இப்போது ஐ.நா சபையில் இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் கூட்டமைப்பின் ஆதரவோடு கிடைத்துள்ளது.

இனி அவ்வளவுதான். இரா.சம்பந்தர் பாராளுமன்றத்தில் பேசுவதென்பதே முடியாத காரியம். இன்னும் கூறினால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் விரைவில் பறிபோகலாம். அப்போதுதான் தெரியும் சிங்களவர்களின் இராஜதந்திரம் எப்படி என்று.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila