“வடக்கு மாகாணத்தில் இயங்கிய பெரியளவிலான தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். எனவே அவற்றை மீளவும் ஆரம்பித்து உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்” இவ்வாறு அரச தலைவரிடம் நேரில் வலியுறுத்தினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
மாகாண முதலமைச்சர்கள் மாநாடு வட மத்திய மாகாணத்தின் ஹபரணப் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் , அதிகார சபைகளின் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போதே மேற்படி கோரிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர் முன்வைத்தார்.
“பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை , பரந்தன் உப்புக் கூட்டுத் தாபனம் , ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிலகம் என்பன இன்றுவரை ஆரம்பிக்கப்படவில்லை. அவற்றில் பணியாற்றிய பணியாளர்கள் இன்று தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமத்தின் மத்தியில் வாழ்கின்றனர். வறுமையால் சிலர் இறந்தும் விட்டனர்.
அவர்களுக்குக்கூட மாற்று ஏற்பாடுகள் கிடையாது. எனவே அந்தத் தொழிற்சாலைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கா னோருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். அவற்றை மீள ஆரம்பிக்க கொழும்பு அரசு ஆவன செய்ய வேண்டும்.
பெரியளவிலான தொழிற்சாலைகளை மீள இயக்குவதில் கொழும்பு அரசுக்கு நெருக்கடி நிலமைகள் காணப்பட்டால் அவற்றுக்குரிய நிதியை வழங்கி, தொழிற்சாலைகளை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.