யாழில் உள்ள தந்தை செல்வா நினைவுத் தூபி, உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்
தூபி நாவற்குழி சிங்கள குடியேற்ற பகுதி உள்ளிட்ட இடங்களில் வெசாக் வெளிச்ச வீடுகளை இலங்கை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
நாளை மற்றும் நாளை மறுதினம் வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே பெருமளவிலான இராணுவத்தினர் வெளிச்ச வீடுகளை அமைத்து வருகின்றனர். வீரசிங்கம் மண்டபம், முனியப்பர் கோவில் அமைந்துள்ள வீதிகளில் பெருமளவிலான பௌத்த கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.
இவ் வெசாக் கூடுகள் ஒவ்வொன்றையும் யாழ்.மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு படைப் பிரிவுகளும் அமைத்து வருவதோடு, குறித்த வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கும் இராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந் நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு பௌத்த கொடிகளை கட்டி பறக்கவிட்டுள்ளமைக்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தியாகராஜா மற்றும் பசு பதிப்பிள்ளை ஆகியோர் நேற்றைய தினம்; கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இலங்கை முழுவதும் பௌத்த நாடு என்று காட்டுவதற்கும், சிங்கள குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் ஊக்குவிப்பதற்குமே இவ்வாறான வெசாக் கொண்டாட்டங்கள் வடக்கில் பரவலாக நடத்தப்படுகின்றன. இதனை இராணுவத்தினரே முன்னின்று செய்கின்றனர். இதை தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழல் முழுவதும் வெசாக் தின கொண்டாட்டங்களுக்காக வெசாக் கூடுகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.