எனது வீட்டின் மீதான தாக்குதல் சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது! அமைச்சர் அனந்தி சசிதரன் உறுதி!



வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடாத்தப்பட்டிருந்த தாக்குலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் குறித்த எனது குற்றச்சாட்டு ஆதாரபூர்வமானது. அதில் எள்ளவும் ஐயமில்லை என்பதனை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்தேன். தேர்தலுக்கு முன்னரும் பின்னருமாக என்மீதும் எனது வீட்டின் மீதும் தாக்குதல் முயற்சிகளும் அச்சுறுத்தல் முன்னெடுப்புகளும் நடைபெற்றிருந்தது யாவரும் அறிந்ததே.
2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19 ஆம் திகதி மாலையிலும் வாக்களிப்பிற்கு முந்தைய நாளான செப்ரெம்பர் 20 ஆம் திகதி அதிகாலையிலும் எனது வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்திருந்த வன்முறைக் கும்பல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தது. இத்தாக்குதலில் வீட்டு தளபாடங்கள் சேதமாக்கப்பட்டதுடன் அதனை தடுக்க முற்பட்டவர்களையும் தாக்கி காயப்படுத்திச் சென்றிருந்தார்கள்.
இச்சம்பவத்தின் போது வன்முறையாளர்களின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்திருந்தவர்களில் ஒருவரான திரு கே.சுகாஸ் அவர்கள் சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் சட்ட ஆலோசகராக கடமையில் இருந்தவர். அந்த வகையில் சம்பவம் குறித்து ஆதாரபூர்வமான முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி உறுப்பினர்களும் இராணுவ சீருடை அணிந்திருந்த நபர்களும் இணைந்தே எனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இது முற்று முழுதான உண்மையாகும். அதுகுறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நானே நேரடியாக சட்சியமளித்துள்ளேன்.
இந்நிலையில், என் வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதல் மற்றும் என் மீதான அச்சுறுத்தல் ஆகியவற்றின் பின்னணியில் என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்த தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று நம்புவதாக அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தேன். விடுதலைப் புலிகள் சார்பில் என் மீது அதிகரித்திருந்த அபரிமிதமான மக்கள் ஆதரவினை பொறுத்துக் கொள்ள முடியாது, என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவர்களே எனக்கெதிராக உள்ளடி வேலைகள் செய்திருந்தமை காலம் கடந்து அவர்களாலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில்தான் எனது மேற் குறித்த ஐயப்பாடு அமைந்திருந்தது.
நிலமை இவ்வாறு இருக்கையில், எனது இவ் ஐயப்பாட்டின் அடிப்படையில் தமது கட்சியினர் மீதான குற்றச்சாட்டை மறுதலித்து தம்மை புனிதர்களாக பிரகடனப்படுத்தும் முயற்சியாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை அமைந்துள்ளது. கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில் எனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தமை ஆதாரபூரவமான உண்மையாகும்.
இச்சம்பவத்தில் என்சார் கட்சிக்கும் தொடர்பிருக்கலாம் என்ற எனது ஐயப்பட்டினை முன்னிறுத்தி மறுதலிக்க முனைவது எந்தவித்திலும் நியாயமில்லை. மாகாண சபை உறுப்பினராக தெரிவாகிய பின்னர் நடைபெற்ற மாகாண சபை அமர்வுகளுக்கு நான் மோட்டார் சைக்கிளில் சென்று வரும்போது வட்டுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜீவன் என்பவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார். இது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி சார்பில் தெரிவாகியிருந்த கௌரவ மாகாண சபை உறுப்பினர் தவராசா அவர்கள் ஊடாக கட்சியின் செயலாளர் நாயகம் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.
உடனடியாக சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினரை அழைத்து இது போன்ற தொந்தரவை மேற்கொள்ள வேண்டாம் என்று செயலாளர் நாயகம் அவர்கள் எச்சரிக்கை செய்ததாகவும் இனிமேல் அவ்வாறு எதுவும் நடைபெறாது எனவும் கௌரவ மாகாண சபை உறுப்பினர் தவராசா அவர்கள் எனக்கு தெரிவித்திருந்தார். அதற்கமைய குறித்த அந்த நபரின் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடு அதன்பிற்பாடு இல்லாதிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை கௌரவ மாகாண சபை உறுப்பினர் தவராசா அவர்களும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நன்கறிவார்கள்.
இது ஒருபுறமிருக்க, அரசியல் சிந்தனை எதுவும் இல்லாது இருந்த என்னை எழிலனின் மனைவி என அடையாளப்படுத்தி, அரசியலில் இணைத்த தமிரசுக் கட்சி என் மீது அடாத்தான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது ஜனநாயகமற்றது என்பதுடன் மக்கள் விரோத செயற்பாடுமாகும். கட்சி மற்றும் அரசியல் ரீதியாக என்மீது மேற்கொண்டுவரும் நெருக்கடிகள், தனியே என்னை அரசியல் ரீதியில் பாதிப்படையச் செய்யும் நோக்கத்திற்கப்பால், போரின் பாதிப்பிற்குள் இருந்து வந்தவள் என்ற அடிப்படையில் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து ஆதரவு தந்த, தந்துகொண்டிருக்கும் மக்களுக்கும் எதிரான நடவடிக்கையாகவே அமைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila