கோமகன் கட்டுநாயக்காவில் வைத்து மீண்டும் கைது!


arrest-slk.polce_21

பிந்திய செய்தி…….
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அவருக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது விமான நிலையப் பொலிஸாரால் இன்று நண்பகல் 12 மணியளவில் கைது செய்யப்பட்ட கோமகன் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் ஆறு மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை தவறாமல் விசாரணைக்கு சமூகமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை 6.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இவருக்கான பயணத் தடையை நீதிமன்று தளர்த்தியிருந்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்திற்கு எந்த அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே பொலிஸார் கைது செய்திருந்தனர்.


தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் இன்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் செய்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்றபோது, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விமான நிலைய காவல்துறையினர்; நண்பகல் 12 மணியளவில் அவரைக் கைது செய்தனர்.
பயங்கரவாதத் தடுப்பு காவல்துறையினரால்; கடந்த 2010ம் ஆண்டின் ஓகஸ்ட் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் தென்னிலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கோமகன் கடந்த 2016ம் ஆண்டின் பெப்ரவரி 29 ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் ஆலய வழிபாட்டுக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு ஜீலை மாதம் இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது அவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவரைக் கைது செய்த காவல்துறையினர் அங்கு இடம்பெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து விடுதலை செய்திருந்தனர்.

இதனையடுத்து பயணத் தடை நீக்குமாறு கொழும்பு நீதிமன்றில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.தவராசா ஊடாக கோமகன் மனுத் தாக்கல் செய்தார். விசாரணைகளை மேற்கொண்ட நீதிமன்று வெளிநாட்டுக்கான பயணத் தடையை நீக்கியிருந்தது.

இந்நிலையில், இன்று அவர் இந்தியாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சென்றார். 2.40 மணிக்கு பயணிக்கும் சிறிலங்கன் எயார்லைன் விமானத்தில் பயணிப்பதற்கு அவர் அனுமதியைப் பெற்றிருந்தார்.

இன்று மதியம் 12 மணியளவில் விமான நிலையம் சென்ற அவரை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பயணத் தடை நீக்கப்பட்டமை தொடர்பாக நீதிமன்றினால் வழங்கப்பட்ட ஆவணங்களை அவர் காண்பித்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு மற்றும் குடிவரவுத் திணைக்களத்திற்கு நீதிமன்று அறிவித்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila