ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ். விஜயத்தை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ். பட்ரிக் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்று யாழ். விஜயம் செய்யவுள்ள நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் பட்ரிக் சந்தியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்சிஸின் தலைமையில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷமெழுப்பியவாறு அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பட்ரிக் சந்தியிலிருந்து பட்ரிக் கல்லூரி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போதிலும் அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதியுடன், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.