பழிக்கு பழி - கிழக்கு மக்களை விலைபேசிய மைத்திரி

இலங்கையில் தமிழினத்தை அழித்து விட்டும் தமிழ் இனம் என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை என்பதை மஹிந்தவுக்கு பிறகு மைத்திரி நிரூபித்துவிட்டார்.
ஆளுநர் நியமனத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையாண்டுள்ள யுத்தி தமிழ்தே சிய கூட்டமைப்பின் மீது கொண்ட கோபத்தை பழிக்கு பழி தீர்க்கவே என்பது வெளிப்படையான உண்மையென்பதை தமிழ் மக்கள் அறிவர்.
ஆளுனர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமேயுள்ளது என்ற அரசியலமைப்பு சட்டங்களை தனிப்பட்ட கோபங்களுக்காக "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக" வாக்களித்த கிழக்கு தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகத்தை செய்துள்ளதால் சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் தமிழர்களை காலம் காலமாக எதிரியாகவே வைக்க முனைவதை உணர்த்துகின்றனர்.
தற்போது கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் ஆயுட்காலம் ஏறத்தாள ஒருவருடம் மாத்திரம் உள்ள நிலையில் புதிய ஆளுநர்களின் நியமனத்தின் தேவை அவசியமற்ற சூழலில் ஏன் இந்த மாற்றம்? எதற்காக? நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை அரசியல் பழிவாங்கலை தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நிகழ விட மாட்டேன்.
இவ்வாறு பதவியேற்பில் சூழுரைத்தவரே இன்று சிங்கள ஆட்சியாளர்களுக்குரிய குணவியல்புகளை வெளிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி தமது விருப்பத்துக்கு அமைவாக நியமனத்தையும் செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருந்த ஹிஷ்புல்லாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வேண்டுமென்றே இராஜினாமா செய்து கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை விதைக்கும் அவருக்கு பதவி வழங்கி இருப்பது தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது கொண்ட காழ்புணர்ச்சியை ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் வெளிப்படுத்தி சாதித்து விட்டார் என்பதே நிதர்சனம்.
கிழக்கு மகாண வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்போமானால் ஆளுநராக இதுவரைக்கும் தமிழ்பேசும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த எவருமே நியமிக்கவில்லை.
கிழக்கில் ஆட்சி மொழியாக தமிழ்மொழி இருப்பதனாலும் தமிழ் மக்கள் மீது தார்மீக நன்றியுணர்வோடு கிழக்கு ஆளுநராக நியமித்திருப்பின் ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றபோது அவருக்கு அந்த நல்ல எண்ணம் ஏன் வரவில்லை நல்லாட்சி என்ற பெயரில் கடந்த 2018 அக்டோபர் 25 வரை இடம்பெற்ற ஆட்சியில் கூட எண்ணம் உதயம் பெறவில்லை போலும்.
சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு இதுவரை நியமனம் செய்ய மனம் வராத ஜனாதிபதிக்கு தற்போது கிழக்கு மக்கள் மீது திடீர் பாசம் வந்ததையிட்டு பலத்த சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த 52 நாட்களில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தன்னிச்சையான பிரதமர் மைத்திரி நியமனம் நாடாளுமன்றத்தை சட்டத்துக்கு முரணாக கலைத்தமை அது தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சட்டரீதியான செயற்பாடு மூலமாக மீண்டும்
ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டமை, மீண்டும் பிரதமராக ரணிலை தெரிவு செய்ய தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை என்பதெல்லாம் ஜனாதிபதி மைத்திரிக்கு எரிச்சல் ஊட்டும் சம்பவங்களாக அமைந்திருக்கலாம்.
அதற்காக எஞ்சிய ஒரு வருடமாவது அதற்காக பழிதீர்க்கும் படலமாக கிழக்கு மகாண ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது என எண்ணத் தோன்றுகிறது.
தற்போது நியமனம் பெற்ற ஹிஷ்புல்லா மீது தமிழ் மக்கள் அச்சம் கொள்ள காரணம் அவரின் கடந்த கால செயற்பாடுகளில் சில தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தோற்றுவித்திருந்தமையாகும்.
குறிப்பாக மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை கிழக்கு தமிழர்களிடையே கொதி நிலையை தோற்றுவித்துள்ளது.
இனவாத சிந்தனை கொண்டு செயற்படும் ஒருவரை அதுவும் கடந்த காலங்களில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது இருப்புக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டமாவடியில் இந்து ஆலயத்தை அகற்றி அதில் கடைகளை அமைத்தது அதற்காக ஒரு நீதிபதியை தாமே இடம் மாற்றியதாக பகிரங்கமாக இனவாத கருத்தை கூறியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.
அதைவிட மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் போத்தல்களில் குடிநீர் நிரப்பு தொழிற்சாலை அமைப்பதற்காக அப்பகுதி மக்களின் சம்மதம் இன்றி நிறுவுவதற்கான முயற்சி மேற்கொண்ட விடயங்களும், காணிகள் கொள்வனவு ரிதிதென்ன பல்கலைக்கழகத்திற்கு சட்டவிரோதமான இயந்திரங்களை களவாடியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள ஒருவரை ஜனாதிபதி கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்தமை தமிழ் மக்களை பழிவாங்கும் செயற்பாடாகவே நோக்கப்படுகிறது.
மேலும் இவை தொடர்பாக சில அதிருப்திகளும் புதிய ஆளுநர் மீது தமிழ் மக்களின் பார்வையும் உண்டு.
இந்த விடயங்கள் தொடருமானால் எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தற்போது உள்ள ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படுமோ என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.
இந்த காரணங்களால் மட்டுமே ஆளுநர் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி பக்கச்சார்பாக செயற்படாத ஒருவரை கிழக்கு மகாண ஆளுநராக நியமித்து இருக்கலாம் என்ற கருத்து கிழக்கு மகாண தமிழர்கள் மத்தியில் உண்டு.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பும் முழுமையாக இருந்தது அப்படி இருக்கும் நிலையில் கிழக்கு மகாண தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்துக்களை அறியாமல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆலோசனை பெறாமல், கிழக்கு மகாண ஆளுநராக ஹிஷ்புல்லாவை ஜனாதிபதி நியமித்தது அவரின் சுயநல அரசியல் செயற்பாடு என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக வந்த மைத்திரிபால சிறிசேன இவ்வாறு நடந்து கொண்டதன் ஊடாக "மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாக " யுத்தத்தாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மேலும் அரசியலதிகாரம் கொண்டு அடக்கிவிட முயல்கின்றன.
ஆளுநர் நியமனத்தின் மூலம் கிழக்கில் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்கும் சில தமிழ் முன்னாள் பிரதியமைச்சர்கள் மறைமுக வரவேற்பினை செய்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
பிரதமர் விடயத்தில் உயர் நீதிமன்று வரை சென்று பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை மீட்டு அழகு பார்த்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆளுனர் விடயத்தில் காட்ட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசை.
இவற்றை வழமை போல் காலசுழற்ச்சியின் பக்கத்தை விட முனையுமெனில் கிழக்கில் கூட்டமைப்பின் எதிர்கால இருப்பிற்கான விஸ்வரூபம் விம்பமாகவே மாறும்.
கடந்த கால முதலமைச்சர் பதவியினை தாரைவார்த்ததை போன்று வரலாற்று தவறினை செய்யுமெனில் இனி வரப்போகும் தேர்தல் பந்தயங்கள் முடமான குதிரையாகவே போகும்.
ஊழலின் மொத்த உருவம். கையை பிடித்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர் என முஸ்ஸிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹகிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை நிரூபிக்கும் வகையில் ஆளுநரின் நியமனத்திற்கெதிராக மாகாணம் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு கிழக்கு தமிழர்கள் தயாரான செய்தி கேட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேரில் சென்று கையை பிடித்து மூவின மக்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் ஆளுநராக இருப்பதாக உறுதியளித்தார்.
இதில் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு பயந்து சாணக்கியரின் காலை பிடித்து சமாளிக்க பார்க்கின்றார். கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் தமிழ் மக்களை பழிதீர்க்கும் எண்ணக்கருவோடு இனத்துவேசம் பேசும் ஒருவருக்கு ஆளுநர் பதவியை ஜனாதிபதி வழங்கியிருக்கின்றமை கிழக்கு தமிழ் மக்கள் வீதியில் இறங்கி உரிமை கோரும் அளவிற்கு ஜனாதிபதியின் நல்லாட்சியில் நம்பிக்கையிழந்துள்ளனர்.
இந்த விடயம் ஆளுநர் விடயத்தில் மறு பரிசீலணை செய்ய வழிகோரும் என அரசியல் விமர்சகர்கள் புதிய கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலக கோரி மாகாணம் தழுவிய எதிர்ப்பொலிகள் இன்று காலை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் டயர்கள் எரித்தும், கடையடைப்பு செய்தும் எதிர்ப்பினை வெளிகாட்டி வருகின்றனர்.
புதிய ஆளுநர் நியமனத்தின் பின் அரசின் வால் பிடிக்கும் சில கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது பழி சுமத்தி வரும் வேளையில் கிழக்கு ஆளுநர் விடயத்தில் மௌனமாக இருக்கின்றமை வடக்கில் தமிழர்களின் விடயத்தில் காட்டும் அக்கறை போல் கிழக்கு மக்கள் விடயத்தில் கூட்டமைப்பு இதய சுத்தியோடு இல்லை எனும் ஒரு மாயையை தோற்றுவிக்கும். இது கிழக்கின் அரசாங்கத்தின் எடுபிடிகளுக்கு ஊதுகுழலாக மாறிவிடும்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கி இருக்காவிட்டால் நான் இப்பொழுது மண்ணுக்குள் இருந்திருப்பேன். என வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி விசுவாத்தை வெளிப்படுத்திய மைத்திரிபால சிறிசேன நன்றிக்கடனாக இனவாதத்தின் ஒட்டுமொத்த ரூபத்தை ஆளுநராக நியமித்து தமிழ் மக்களின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார்.
புதிய கிழக்கு ஆளுநருக்கு எதிராக தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்பலைகள் சில தினங்களில் கிழக்கில் ஆர்ப்பரிக்கும் சிங்கள தேசத்திலும் தமிழ் மக்களிடையேயும் நல்லாட்சி என செயலாற்ற காகித கப்பல் பருவ பெயர்ச்சியுடன் அள்ளுண்டு சென்றுள்ளது.
இருக்கும் ஒரு வருட ஜனாதிபதி பதவியில் பழிவேண்டும் படலம் மஹிந்தவுக்கு ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்ட புதிய பிரதமர் பதவி போன்றே ஆளுனர் நியமனம் என்பதில் ஐயமில்லை.



Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila