ஒரு காலத்தில் இருந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்று இல்லை என்பதாக நிலைமை மாறிவிட்டது. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக இன்றைய பொருளாதாரத்தின் தேவை காரணமாகக் கடினமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நேரப்பற்றாக்குறை என்ற விடயம் அனைவரையும் ஆக்கிரமிக்கவே செய்கிறது.
தவிர, இயந்திரவாழ்வு என்ற சக்கரத்துக்குள் எங்களை நாங்களே விழுத்திக் கொண்டோம்.
கையடக்கத் தொலைபேசியை ஒரு அரை மணிநேரம் நிறுத்தி வைக்க முடியாத அளவில் மனப்பதற்றம் பலரையும் ஆட்கொண்டுள்ளது.
வீதிகளில் வாகனம் செலுத்தும்போதும் தங்களை மறந்து தொலைபேசி உரையாடலை செய்கின்ற போதைத்தனம் அதிகமாக ஏறிவிட்டது.
இதனால் விபத்துக்களும் உயிரிழப்புக் களும் என்ற துன்பம் சதா நடக்கிறது.
ஆன்மிக சிந்தனை அடியோடு இல்லாது விட்ட நிலையில், சண்டித்தனங்களும் சர்வாதிகாரப் போக்குகளுக்கும் குறைவில்லை.
சண்டித்தனம் உள்ளவர் பக்குவமானவர்களுடன் மோதத் தலைப்படுகின்றனர்.
உபத்திரவம் வேண்டாம் என்று ஒதுங்குகின்றவர்களைப் பலயீனமானவர்களாகக் கருதி அவர்களுக்குச் சதா தொல்லை கொடுக்கின்ற நிட்டூரம் நடந்து வருகிறது.
நிலைமை இதுவாக இருக்கையில், மனித வாழ்வை நெறிப்படுத்துகின்ற ஆன்மிகமும் ஆலய வழிபாடுகளும் பொருளாதாரத்தின் மையங்களாக மாறிவிட்ட துயரத்தை நினைக்கும்போது இதயம் கருகிக் கொள்ளும்.
அந்தளவுக்கு எதற்கும் பணம் என்பதாக ஆன்மிகச் சூழல் மாறிவிட்டது.
நிலைமை இதுவென்றால் இல்லை, அரச தனியார் நிறுவனங்களில் நிலவுகின்ற கருத்து முரண்பாடுகள், அரச பணியை செய்வது என் கடமையும் தர்மமுமாகும் என்ற நினைப்பு இல்லாமல், நான் அதிகாரி ஆகையால் நான் சொல்வதைத்தான் அனைவரும் ஏற்கவும் பின்பற்றவும் வேண்டும் என்ற கர்வத்தனங்கள் தலை உச்சியில் நின்று உலுப்புகின்றன.
இதற்கு மேலாக, சில அமைப்புகளும் தனி நபர்களும் குழுமங்களும் தத்தம் சொல்லுக்கு ஆடாதவர்களை விமர்சிக்கவும் இடமாற்றவும் திறமையானவர்களைத் திறமையற்றவர் என்று நாக்கூசாமல் கூறவும் தலைப்பட்டுள்ளனர்.
இதனால் அர்ப்பணிப்போடும் தர்ம சிந்தனை யோடும் சேவை புரிகின்றவர்கள்; சேவை புரிந்தவர்கள் மனக்கவலையுடன் இருப்பதைக் காணமுடிகின்றது.
இவைதான் என்று மட்டும் கூறிவிட முடியாத அளவில், போதைப்பாவனை எங்கள் இனத்துக்கே ஈனம் செய்வது என்று கங்கணம் கட்டி நிற்கிறது.
ஆக, ஒட்டுமொத்தத்தில் தர்மம், இறைநம்பிக்கை, பாவபுண்ணியக் கருத்துக்கள் என அத்தனை அறக் கோட்பாடுகளும் செயலிழந்து எங்கள் வாழ்வை நிர்மூலமாக்குகின்றன.
இவை தொடர்பில் அனைவரும் கருத்தூக் கம் கொள்ளாவிட்டால், நிலைமை அதலபாதாளத்துக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியாதென்றாகிவிடும்