பெளத்த மதத்துக்கே முன்னுரிமை புதிய அரசியலமைப்பால் நாடு பிளவுபடது! பாராளுமன்றில் பிரதமர் ரணில் உரை

நாட்டை பிளவுபடுத்துவதற்கோ அல்லது பெளத்த மதத்துக்கு உரித்தான பிரதான இடத்தை இல்லாமல் ஆக்குவதற்கான ஏற்பாடுகளோ புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியது. இதன்போது அங்கு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக வழிநடத்தல் குழுவும் 6 உப குழுக்களும் நியமிக்கப்பட்டன.

வழிநடத்தல் குழு மற்றும் உப குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
சூரி ரத்னபால, ஒஸ்டின் புள்ளே, ஏ.எம். நவரத்ன பண்டார, செல்வக்குமாரன், கும்தா குணரத்ன, கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, ஹிரான் அன்கடெல், அஷோக குணவர்தன மற்றும் சமிந்த்ரி சபரமாது ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கு அமைய, பாராளுமன்றம் மற்றும் இரண்டாம் பிரதிநிதிகள் சபை என இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக சபை அமைய வேண்டும்.
5 வருட பதவிக்காலத்திற்காக 233 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், இரண்டாம் உறுப்பினர் சபை 55 உறுப்பினர்களைக் கொண்டதாக அமைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொகுதிக@டாக 140 உறுப்பினர்கள் தெரிவாவதுடன், மேலும் 76 பேரைத் தெரிவு செய்வதற்கான அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதுடன், அரசாங்கம் மற்றும் முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

ஜனாதிபதியை நியமிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்படுவதுடன், பாராளுமன்றம் மற்றும் இரண்டாம் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் அரைவாசிக்குக் குறையாத வாக்குகளால் ஜனாதிபதி தெரிவு செய்யப்படல் வேண்டும்.

பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் ஜனாதிபதிகட்சி அரசியலில் ஈடுபட முடியாது என்பதுடன், சுயாதீனமாக செயற்படவேண்டும்.

அடிப்படை உரிமை மற்றும் ரிட் கட்டளைச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு இயலும் என நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும்.

கூட்டாக பாராளுமன்றத்திற்குப் பொறுப் புக் கூறும் அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை பெறக்கூடியவர் என தாம் கருதுபவரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.
ஏதேனுமொரு கட்சி பாராளுமன்றத்தில் அரைவாசிக்கும் மேலாக ஆசனங்களைக் கைப்பற்றுதல், தேர்தலில் போட்டியிடும் போதே பிரதமர் வேட்பாளரை பெயரிடல் வேண்டும். பிரதமர் வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், மீண்டும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை, அவ்வாறு நியமிக்கப்படும் பிரதமர் அந்தப் பதவியை வகிக்க முடியும்.

அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை முப்பதைவிட அதிகரிக்கக்கூடாது என்பதுடன், அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயற்பட வேண்டும்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை, அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, விடயப் பரப்புக்களை தீர்மானிக்கும் அதிகாரம் பிரதமருக்குரியதாகும்.

மாகாணத்தில் நடத்தப்படும் மக்கள் தீர்ப்பின் பின்னர் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் சட்டமூடாக, இரண்டு அல்லது மூன்று மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாக பிரகடனப்படுத்த முடியும் என மாகாண சபைகள் தொடர்பில் குறிப்பிடப்படும் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் இந்த ஆவணத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அரசியல் கட்சி மற்றும் நிபுணர் குழுக்களின் ஆவணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila