நாட்டில் தேர்தல் பேரிகை கிட்டவாகக் கேட்கிறது

பாராளுமன்றக் கலைப்பு செல்லுபடியற்றதென்பதோடு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்று ஆட்சி நடப்பதாக இருந்தாலும் அதிகாரம் உள்ள ஜனாதிபதியுடன் பகைத்துக் கொண்டபின், அரசாட்சியை சுமுகமாக நடத்துவதென்பது முடியாத காரியமே.

இந்நிலையில் விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது.

பொதுத் தேர்தலை நடத்துங்கள்; நாங்கள் வென்று காட்டுகிறோம் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ தரப்பின் கோரிக்கை.

தென்பகுதியில் மக்கள் ஆதரவு தமக்கு உண்டு என்பது அவர்களின் அறிவிப்பு.
இந்நிலையில் பொதுத் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயங்குமாக இருந்தால் அது கட்சியின் சுயகெளரவத்துக்கு இழுக்காக அமையும்.

எனவே பொதுத் தேர்தலுக்கு நாங்களும் தயார் என்ற அறிவிப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி தெரிவித்தே ஆக வேண்டும்.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இது காறும் ஆதரவாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் எனக் கூறமுடியாது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே எதிர்க் கட்சித் தலைவராக இருப்பார் என்பது கூட்டமைப்பினரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால் அந்த நம்பிக்கை அறுந்துவிட்டது. சபாநாயகர் கரு ஜயசூரிய தனது நடுநிலைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில், மகிந்த ராஜபக்­வை எதிர்க் கட்சித் தலைவராக அறிவித்துள்ளார்.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம் பந்தருக்கு வழங்கியபோது அது தொடர்பில் மகிந்த ராஜபக்­ அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.

இதற்கான முக்கிய காரணம் இரா.சம்பந்தரை எதிர்க்கட்சித் தலைவராக இருத்துவதன் மூலம் போர்க்குற்ற விசாரணை தொடர்பான அவர்களின் கோரிக்கைகளை மெலினப்படுத்த முடியும் என்பதாகும்.

மகிந்த ராஜபக்­ தரப்பின் எண்ணப்பாடு கனகச்சிதமாக நிறைவேறியது என்பதையும் இங்கு கூறித்தானாக வேண்டும்.

ஆனால் இப்போது பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவது தவிர்க்க முடியாது என்ற கட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமதாக்குவது என்ற முடிவில் மகிந்ததரப்பு உறுதியாக இருக்கிறது.

அதேநேரம் பாராளுமன்றக் கலைப்புக்கு நீதிமன்றப்படி ஏறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தர் ஐயாவின் எதிர்க்கட்சிப் பதவி நீக்கப்பட்டமை தவறு எனக் கூறி நீதிமன்றம் ஏறப்போவதில்லை என்பதும் தெளிவு.

நிலைமை இதுவாக இருக்க, கூட்டமைப்பின் ஆதரவோடு தாம் தொடர்ந்தும் ஆட்சி நடத்துவதானது சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும் என்பதால்,
பொதுத்தேர்தல் என்ற இடத்துக்கு செல்வது கட்டாயமானதாகிறது.
இதனை உறுதிப்படுத்துவதாக தமிழர் தாயகத்திலும் வாக்குச்சுவிகார ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila