வருமான வரி பரிசோதகர் என யாழில் பணம் பறிப்பு - இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது

 யாழ்ப்பாணத்தில் வருமான வரி பரிசோதகர்கள் என கூறி நகைக்கடையொன்றின் உரிமையாளரிடம் பணம் பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினரை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றது.

சம்பவம் தொடர்பில் நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். 

குறித்த சந்தேகநபரே , நகைக்கடையில் அமைவிடம் , கடை உரிமையாளரின் விபரங்கள் என்பவற்றை ஏனைய சந்தேக நபர்களுக்கு கூறி திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கண்டியில் இருந்தே வாகனத்தில் ஏனையவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்ததாக கூறப்பட்டதை அடுத்து, கண்டிக்கு விரைந்த பொலிஸ் குழு கண்டியில் வைத்து வாகன சாரதி உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். 

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கொழும்பில் தலைமறைவாக உள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொழும்புக்கு சென்ற பொலிஸ் குழு கொழும்பில் வைத்து இருவரையும் கைது செய்தனர். 

கண்டி மற்றும் கொழும்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் யாழ்ப்பாணம் கொண்டு வந்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த ஐந்து சந்தேக நபர்களில் கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இரு இராணுவ புலனாய்வாளர்களும், தெற்கில் உள்ள அரசியல் கட்சி ஒன்றின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அதேவேளை , நகைக்கடை உரிமையாளரிடம் பறித்த 30 இலட்ச ரூபாய் பணத்தினையும் 06 நபர்களும் தலா 05 இலட்ச ரூபாய் வீதமாக சமமாக பங்கிட்டு கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்களிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தின் பின்னணி 

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றது.

நகை கடைக்குள் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று சிவில் உடையில் சென்று , தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என கூறி கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணைகளை மேற்கொள்ள முதல் ,கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் எடுத்துக்கொண்டும் , கடையின் உரிமையாளர் மற்றும் , கடை ஊழியர்களின் தொலைபேசிகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர். 

பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும் , கணக்கில் காட்டாத பெருமளவான பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

அதனை தொடர்ந்து கடையினை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் காணப்பட்ட நகைகள், கடையில் இருந்த 30 இலட்ச ரூபாய் பணம்  என்பவற்றை தாம் எடுத்து செல்வதாகவும் அவற்றினை தமது அலுவலகத்திற்கு வந்து உரிய பற்று சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றினை எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். 

நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகம் கொண்டு வருவதாக கடை உரிமையாளர் கூறி அவற்றை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்த போது , நகைகளை நீங்கள் கொண்டு வந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள் , பணத்தினை நாம் எடுத்து செல்கின்றோம் என கூறி பணத்தினை எடுத்து சென்றுள்ளனர்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila