தமிழர் தாயகத்தில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ந்து வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வாழ்வாதார உதவிகள் இன்றியும், கல்வி கற்பதற்கும், உயர்தர கல்வியை தொடர முடியாமலும், மருத்துவ தேவைகளை உரிய முறையில், உரிய நேரத்திலும் பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் உயரிய நோக்கில் "மக்கள் நலன் காப்பகம்" எனும் நிறுவனம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அதன் செயற்குழு தெரிவித்துள்ளது.
இவ் நிறுவனமானது தமிழர் தாயகத்தில் வாழும் மக்களின் நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு அவர்களை ஆரோக்கியமான சமூகமாகக் கட்டிவளர்க்கும் உயரிய நோக்குடனும், தாயகத்தில் வாழும் எம் மக்களும், புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகளும் ஒன்றாக கூட்டிணைந்த செயற்பட வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து "மக்கள் நலன் காப்பகம்" People Welfare Association - PWA எனும் நிறுவனம் உருவாக்கம் பெறுகின்றது.
தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கிராம மட்டங்களில் இருந்தும் செயற்பாட்டுக் குழுக்கள் உருவாக்கம் பெற்று, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அதற்கான நடுவப்பணியகம் கிளிநொச்சியில் நிறுவப்படுகிறது. வருகின்ற 18/03/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு பணியகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இப் பணியகம் ஆனது ஏற்கனவே எம் தாய்நிலப்பரப்பு எங்கும் செயற்பாட்டுக்கு கொண்டிருக்கும் மனிதநேய மற்றும் சமூகப் பணிகளோடும், அதனைச் சிறப்புற ஆற்றிக்கொண்டிருக்கும் தாயக, புலம்பெயர் அமைப்புக்களோடும் ஒன்றிணைந்து பணியாற்றும் எனவும் தெரியவருகிறது.
இதற்கான தங்கள் அனைவரதும் இதயபூர்வமான நல்லாசிகளுடன் நீங்கள் ஒவ்வொருவரும் உரிமையோடு இப்பணியில் இணைந்து செயற்படுவதோடு உங்கள் பேராதரவை “மக்கள் நலன் காப்பகம்” வரவேற்று வேண்டிநிற்கின்றது. என அவர்கள் விடுத்துள்ள குறுந்தகவல் செய்திக் குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.