முதலில் இரணில் விக்கிரமசிங்கி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக செய்தி வந்தது. பின்னர் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக மாதுலுவாவே சோபித தேரர், சந்திரிகா குமாரதுங்கா இருவரது பெயரும் அடிபட்டன. ஆனால் இவை எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. இரணில் விக்கிரமசிங்கி கடந்த 20 ஆண்டுகளாக சந்தித்த தேர்தல்களில், 2001 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் நீங்கலாக – தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்துச் சாதனை படைத்துள்ளார். சந்திரிகா குமாரதுங்கா ஜனாதிபதியாக இருந்த போது எதையும் வெட்டிப் பிடுங்கி வேரோடு சாய்க்கவில்லை. பதவியில் இருந்து இறங்கிய பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் அவருக்கு செல்வாக்கு இருக்கவில்லை. ஜனாதிபதி பதவி போனவுடன் அவரை மகிந்த இராஜபக்சே மிகச் சுலபமாக ஓரங்கட்டி ஒதுக்கி விட்டார். கடந்த 9 ஆண்டுகாலமாக அரசியல் பாலைவனத்தில் முகவரியே இல்லாமல் இருந்தார். இப்போதுதான் மீண்டும் அரசியல் மேடைகளில் வலம் வரத் தொடங்கியுள்ளார். ஜனாதிபதி இராஜபக்சே இன்னும் இரண்டாண்டு காலம் பதவியில் நீடித்திருக்கலாம். சனவரி 26, 2010 இல் நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டதால் அவர் சனவரி 2016 மட்டும் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் இவர் முந்திய 6 ஆண்டுப் பதவிக்காலம் முடியுமுன்னர் தேர்தலில் நின்று வென்று வந்ததால் இராஜபக்சே கேட்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றம் இவரது பதவிக் காலத்தை நொவெம்பர் 2016 மட்டும் நீடித்தது. இராஜபக்சே உட்பட யாரும் எதிர்பாராத வகையில் மைத்திரிபால சிறிசேனா தனது அமைச்சர் பதவியை நொவெம்பர் 21 அன்று இராஜினாமா செய்தார். இராஜினாமா செய்த கையோடு அவர் தன்னை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகவும் அறிவித்தார். இந்த அறிவிப்புத்தான் இராஜபக்சேயின் தேர்தல் வெற்றியை சடுதியாகப் பெரிய கேள்விக் குறியாக்கியுள்ளது. 1951 இல் பொலன்னறுவையில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த மைத்திரிபால சிறிசேன பொலனறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் படித்து 1973 ஆம் ஆண்டில் டிப்புளோமா பட்டம் பெற்றார். 1971 ஜேவிபி புரட்சியின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் டிப்புளோமா பட்டம் பெற்றார். மைத்திரிபால சிறிசேனா இராஜபக்சேயின் அமைச்சரவையில் நல்வாழ்வு அமைச்சராக இருந்தவர். 1979 இல் அரசியலில் நுழைந்த இவர் 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் 2014 நொவெம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புகளை வகித்து வந்தார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள் இருந்துள்ளார். சந்திரிகா ஆட்சிக் காலத்தில் அவரது வலதுகை போல் விளங்கியவர். எனவே சிறிசேனா அவர்களது கட்சி தாவல் இராஜபக்சேக்கு பெரிய சறுக்கல் என்பது மட்டுமில்லை பெரிய அறைகூவலும் ஆகும். அவர் உட்பட இதுவரை அரசு தரப்பில் இருந்து 4 அமைச்சர்கள், 3 துணை அமைச்சர்கள், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்குத் தாவியுள்ளார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் அரசின் பலம் 161 இல் இருந்து 147 ஆகக் குறைந்தது மட்டுமல்ல அரசு 2/3 பெரும்பான்மையையும் இழந்துள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த இராஜபக்சே இப்படியான பின்னடைவைச் சந்திக்கவில்லை. எதிர் அணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுப்பதில் வல்லவரான இராஜபக்சே இப்படி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், உறுப்பினர்களை இழப்பது அவரது கோட்டை ஆட்டங்கண்டுள்ளதைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல காற்று மாறி எதிர்ப் பக்கம் வீசுவதையும் காட்டுகிறது. ஆனால் இந்தக் கட்சித்தாவல் ஒரு வழிப் பாதை அல்ல. எதிர்க்கட்சியில் இருந்தும் இராஜபக்சே விரித்த வலையில் சிலர் விழுந்துள்ளார்கள். இதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர் ஐ.தே. கட்சியின் செயலாளர் திஸ்ச அத்தனாயக்க ஆவர். இவர் அந்தப் பக்கம் தாவினவுடன் சிறிசேனா வைத்திருந்த நல்வாழ்வு அமைச்சராக நியமிக்கப்பட்டு விட்டார். ஆளும் கட்சி அத்தநாயக்காவுக்கு 50 கோடி கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதனை மறுத்த மகிந்த இராஜபக்சே ஒரு கோப்பை கோப்பி மட்டும் கொடுத்து அவரை இழுத்துவிட்டதாகச் சொன்னார். இந்தக் கட்சி தாவல்களினால் ததேகூ நீங்கலாக எஞ்சிய கட்சிகள் உடைபட்டு வருகின்றன. ஜாதிக கெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பொது பல சேனா, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் கட்சி (சரத் பொன்சேகா) போன்ற கட்சிகள் உடைபட்டுள்ளன. இந்தத் தேர்தலில் இராஜபக்சே தனது வெற்றிக்குத் தனக்கும் தனது கட்சிக்கும் உள்ள சகல வளங்களையும் பயன்படுத்துவார் என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இருக்கத் தேவையில்லை. ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பது போல இராஜபக்சே அரச கருவூலத்தில் இருந்து பணத்தை அள்ளி இறைத்து இருக்கிறார். அலரி மாளிகையில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு விருந்து கொடுக்கப்படுகிறது. தெரிந்தெடுக்கப்பட்ட ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்கு 450 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும் இந்த நிதி கொடுக்கப்படும். இது ஒரு மறைமுக இலஞ்சம் என்பது சொல்லாமலே விளங்கும். ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதி என்ற போர்வையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 30 மில்லியன் ஒதுக்கப்பட்டு வந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 5 மில்லியன் மட்டுமே கொடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி தோல்வி என்பதையிட்டு ஆராய முன்னர் 2010 இல் நடந்த தேர்தல் பெறு பேறுகளை கவனத்தில் கொள்வது நல்லது. அந்தத் தேர்தலில் போட்டியிட்ட இராஜபக்சே மற்றும் சரத் பொன்சேகா பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு பின்வருமாறு அமைந்திருந்தன. இந்தத் தேர்தலில் காணப்படும் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் பெரும்பான்மை தமிழ் – முஸ்லிம் மக்களது வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கு விழுந்த போதும் அவர் தோல்வி அடைந்தார். காரணம் பெரும்பான்மை சிங்கள – பவுத்த மக்களது வாக்குகள் இராஜபக்சேக்கு கிடைத்தன. இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் தமிழ் – முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை மற்றும் நுவரேலியா ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே சரத் பொன்சேகா இராஜபக்சேயை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றார். எஞ்சிய 16 மாவட்டங்களிலும் இராஜபக்சே கூடுதலான வாக்குகளைப் பெற்றார். கீழ்க்கண்ட அட்டவணை இந்த மாவட்டங்களில் நடந்த வாக்களிப்பைக் காட்டுகின்றன. ஆக சரத் பொன்சேகாவுக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் வாக்களித்தும் அவர் 18,42,749 வாக்குகளால் தோற்றார். இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டும் என்றால் 2010 இல் நடந்த தேர்தலில் தமிழ் முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கவில்லை என்பதாகும். ஆனால் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை (2,33,190) விட 2013 இல் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் ததேகூ க்கு விழுந்த வாக்குகள் அதிகரித்துள்ளது. 2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் ததேகூ க்கு 353,595 வாக்குகள் கிடைத்தன. 2012 இல் கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் ததேகூ க்கு 193,827 வாக்குகள் கிடைத்தன. ஆக மொத்தம் ததேகூ இன் வாக்கு வங்கி 546,422 எட்டியுள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கை 313,132 (134.28%) வாக்குகளால் அதிகரித்துள்ளது. இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 516,989 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 236,449 பேரும் ஆக மொத்தம் 753,438 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 700,697 (93%) தமிழ் வாக்காளர் ஆவர். கிழக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின்படி மட்டக்களப்பில் 358,205 பேரும், அம்பாரையில் 456,942 பேரும் திருகோணமலையில் 251,690 பேரும் ஆக மொத்தம் 10,66,837 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள். இதில் சுமார் 426,734 (40%) தமிழ் வாக்காளர் ஆவர். எனவே வட கிழக்கில் மொத்தம் 11,27,432 தமிழ் வாக்காளர் இருக்கிறார்கள். இவர்களில் 789,202 (70%) தேர்தலில் பங்கு பற்றக் கூடும். அதில் 552,441பேர் ததேகூ ஆதரிக்கிற வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடும். வட கிழக்குக்கு வெளியே 200,000 தமிழ் வாக்காளர்கள் எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களிக்கக் கூடும். ஆக மொத்தம் 752,441 பேர் சிறிசேனாவுக்கு வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. சிறிசேனா தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் மேலதிகமாக 47,058,61 வாக்குகள் கிடைக்க வேண்டும். 2010 தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு 41,73,185 வாக்குகள் விழுந்தன. நாடுமுழுதும் உள்ள வாக்காளர் எண்ணிக்கை 147,52,168 ஆகும். இதில் 74% (2010 தேர்தல்) வாக்களித்தால் 109,16,604 தேறும். வெற்றி பெறுவதற்கு இதில் பாதி வாக்குகள் 54,58,302 தேவைப்படும். மொத்த வாக்குகளில் சிங்கள – பவுத்த வாக்குகள் 76,41,622 (70%) ஆகும். கடந்த 2010 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த இராஜபக்சேக்கு 60,15,934 ( 57.38 %) வாக்குகள் விழுந்தன. இம்முறை அவர் வெல்ல வேண்டும் என்றால் சிங்கள – பவுத்த வாக்குகள் உட்பட குறைந்தது 54,58, 302 (50 %) வாக்குகளை அவர் பெற்றாக வேண்டும். இதை எழுதும் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்தத் தரப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்கிறது. இராஜபக்சேக்கு எதிரான ஒரு முடிவை எடுத்தால் அமைச்சர் பதவிகளைத் துறக்க வேண்டும். அதற்கு தலைமை தயாராக இல்லை என்பது வெளிப்படை. சாதகமாக வாக்களிக்க முடிவெடுத்தால் இராஜபக்சேயின் இனவாதத்துக்கு பலியாகி வரும் முஸ்லிம் பொது மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அகில இலங்கை மக்கள் கட்சியைப் பொறுத்தளவில் அதன் தலைவர் றிசாட் பதியுதீன் இராஜபக்சேயை ஆதரிக்க முடிவு எடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தளவில் இராஜபக்சே அதன் ஆதரவைக் கேட்கமாட்டார். கேட்டாலும் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். ததேகூ இன் ஆதரவு தேவையில்லை என்று சிறிபால டி சில்வா போன்ற ஐமசுமு அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். எதிர்தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இனச் சிக்கல் பற்றி மவுனம் சாதிக்கிறார். ததேகூ இன் ஆதரவைக் கேட்டால் அதனை இராஜபக்சே தனது இனவாத அரசியலுக்குப் பயன்படுத்துவார் என்ற நியாயமான பயம் சிறிசேனாவுக்கு இருக்கிறது. ஆதரவு கேட்காதபோதே சிறிசேனாவுக்கும் – ததேகூ க்கும் இடையில் இரகசிய உடன்பாடு இருப்பதாக இராஜபக்சே தேர்தல் மேடைகளில் பேசி வருகிறார். மேலும் இனச் சிக்கலுக்கான் தீர்வு பற்றி இராஜபக்சே வாய் திறக்க மாட்டார் என நம்பலாம். காரணம் அவரைப் பொறுத்தளவில் இனச் சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டது. இராஜபக்சே இந்தத் தேர்தலில் போரில் வி.புலிகளைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடியதைக் காரணம் காட்டி வாக்குகளை அறுவடை செய்யமுடியாது. காரணம் அது பழங்கதையாகப் போய்விட்டது. பொது வேட்பாளர் சிறிசேனாவை தேர்தலில் மேற்கு நாடுகள்தான் நிறுத்தியுள்ளன, இது நாட்டுக்கு எதிரான மேற்கு நாடுகளின் சதி என்கிறார். அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பு, நாட்டின் உறுதிப்பாடு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றைச் சொல்லியே தனக்கு வாக்களிக்குமாறு சிங்கள – பவுத்த வாக்காளர்களைக் கேட்கிறார். ஆனால் மக்கள் இந்தத் தேர்தலில் விலைவாசி ஏற்றம், ஊழல், வீண்செலவு, இராட்சத அமைச்சரவை, குடும்ப ஆட்சி, சொத்துக் குவிப்பு போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். ஆளும் கட்சி சரி, எதிரணி சரி தங்கள் தேர்தல் அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. மைத்திரிபால சிறிசேனாவைப் பொறுத்தளவில் தான் வெற்றி பெற்று வந்தால் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை முதல் நூறு நாட்களில் நடைமுறைப்படுத்துவதாகக் கூறுகிறார். (1) குடியாட்சி, நல்லாட்சி, சட்ட ஆட்சி, ஊடக சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் ஜனநாயக கோட்பாடுகளை, மனித உரிமைகளை நிலை நாட்டுவது. (2) ஊழலை ஒழிப்பது அல்லது கட்டுப்படுத்துவது. (3) அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நீதித்துறை, காவல்துறை, பொது சேவை போன்றவற்றை நடுநிலைப் படுத்துவது. (4) 18 ஆவது சட்ட திருத்தத்தை ஒழித்துவிட்டு 17 ஆவது சட்ட திருத்தத்தை மீளக் கொண்டுவருவது. (5) விருப்பு வாக்குகள் மூலம் வெற்றிபெறுவோரை தெரிவு செய்வதில் மாற்றம் கொண்டு வருவது. இப்போதுள்ள முறைமையில் கோடீசுவரர்கள், கருப்புப் பணம் வைத்திருப்போர் மட்டும் தேர்தலில் நின்று வெற்றிபெற முடியும். (6) ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை (ஜனாதிபதி பதவியை அல்ல) குறைப்பது. (7) எல்லாக் கட்சிகளும் அடங்கிய தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது. அதன் பிரதமராக இரணில் விக்கிரமசிங்கி நியமிக்கப்படுவார். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பொசியுமாப் போல் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கும் ஓரளவாவது அனுகூலமாக இருக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் குடிமக்கள் எல்லோரும் ஒரே விலை, ஒரே நிறை என்ற சமத்துவம், சமநீதி, சமவாய்ப்பு பேணப்பட்டால் பல சிக்கல்கள் தாமாகத் தீர்ந்துவிடும். வழக்கம் போல் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் சில அமைப்புக்கள் குட்டையை குழப்பி வருகின்றன. இந்த அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் எதிர்மாறான யோசனைகளை முன்வைத்துள்ளன. (1) 2005 ஆம் ஆண்டுபோல இந்தத் தேர்தல் சிங்கள தேசத்தில் நடைபெறும் தேர்தல். அதில் தமிழர்களுக்கு அக்கறையில்லை. எனவே தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். (வி.புலிகள் இராணுவ சம பலத்தோடு இருந்த ஒரு காலகட்டத்தில்தான் உத்தியோகப்பற்றற்ற புறக்கணிப்பை மேற்கொண்டார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.) (2) தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டும். அதன் மூலம் தமிழர்களது அபிலாசைகளை பன்னாட்டு சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்வாக்காளர்கள் இராஜபக்சேக்கு எதிராக வாக்களித்து தங்கள் அபிலாசைகள் என்ன என்பதைக் காட்டியுள்ளார்கள். (3) தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமையின் கீழ் தமிழர் தரப்பு வட கிழக்கில் நேரடி வாக்களிப்பு நடத்துமாறு கேட்க ஐ.நா. அவையைக் வேண்டும். (4) இராஜபக்சே வெல்ல வேண்டும். அல்லது அவரை வெல்ல வைக்க வேண்டும். அப்போதுதான் மேற்குலக நாடுகள் தொடர்ந்து தமிழர் தரப்பை ஆதரிக்கும். எதிரணி வேட்பாளர் வென்றால் மேற்குலக நாடுகள் தமிழர்களை கைவிட்டு விடும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அமைத்துள்ள ஆணைக் குழுவின் அறிக்கையை கிடப்பில் போட்டுவிடும். மகிந்த இராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று வந்தால் என்ன நடக்கும் என்பதை இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். இராஜபக்சே மீண்டும் வெற்றிபெற்று பதவியில் தொடர்ந்தால் என்ன நடக்கும்? (1) தமிழ்மக்கள் மீது இராணுவத்தின் மேலாண்மை இறுக்கமடையும். (2) வடக்கிலும் கிழக்கிலும் தனியார் காணிகள் இராணு முகாம்கள் அமைக்க, விவசாயம் செய்ய, ஹோட்டல்கள் கட்ட, பவுத்த கோயில்கள் எழுப்ப அடாத்தாகப் பறிக்கப்படும். (3)சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்படும். அதன் மூலம் இப்போதுள்ள குடிப் பரம்பல் மாற்றியமைக்கப்படும். (4) வட மாகாணசபையின் இயக்கத்துக்கு மேலும் முட்டுக் கட்டைகள் போடப்படும். சிங்கள இராணுவ ஆளுநர் சி.ஏ. சந்திரசிறி மூலம் ஏற்கனவே சபை நடவடிக்கைள் பேரளவு முடக்கப்பட்டுள்ளன. சபை நிறைவேற்றிய நிலையான நிதியம் பற்றிய சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. (5) காணாமல் போனோர், ஆண்டுக் கணக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள், பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்கள், கைம்பெண்கள், இடம்பெயர்ந்து முகாம்களில் ஆண்டுக் கணக்காக அல்லல்படும் மக்கள் மற்றும் சிறுவர்கள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட மாட்டாது. தென்னிலங்கை மக்கள் முன் எப்போதும் இல்லாத மாதிரி இராஜபக்சேயின் கொடுங்கோல் ஆட்சியை – குடும்ப ஆட்சியை – அகற்றத் தயாராகி வருகிறார்கள். சிங்கள அறிவுப் பிழைப்பாளர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழக மாணவர்கள் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அதன் எதிரொலியே ஊவா மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் நடந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வாக்குப் பலம் பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. இரண்டு ஆண்டு காலம் இருக்க அவசர அவசரமாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அது முக்கிய காரணம் ஆகும். எனவே தமிழ் மக்களைப் பொறுத்தளவில் இந்தத் தேர்தல் மூலம் இராஜபக்சேயின் சர்வாதிகார – கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்துள்ளது. தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் வட கிழக்குத் தமிழர்களின் வாக்குப் பலம் தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கலாம் என்ற நிலை எழுந்துள்ளது. இதனை ததேகூ கவனத்தில் கொள்ளும் என நம்பலாம். மகிந்த இராஜபக்சேக்கு எதிராகத் தமிழ்மக்கள் ஒருமித்து வாக்களித்தால் இலங்கையில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம். |
மகிந்த இராஜபக்சேக்கு எதிராக தமிழ்மக்கள் ஒருமித்து வாக்களித்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்! - நக்கீரன்
Related Post:
Add Comments