3 ஜனவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:56 ஜிஎம்டி
இலங்கையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி, இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணி வரை நடந்துள்ள 333 அசம்பாவித சம்பவங்களில் 270 சம்பவங்கள் தொடர்பில் ஆளுங்கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
41 சம்பவங்கள் தொடர்பில் அடையாளம் தெரியாத தரப்பினர் மீதும் 16 சம்பவங்கள் தொடர்பில் எதிரணியினர் மீதும் குற்றம் சாட்டப்படுவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமான சிஎம்ஈவி (CMEV) அமைப்பு கூறுகின்றது.
மொத்த சம்பவங்களில் 191 சம்பவங்கள் பாரதூரமான சம்பவங்களாக பதிவாகியுள்ளன.
பெருமளவிலான அசம்பாவிதங்கள் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பதிவாகியுள்ளன. 'வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் போல மக்கள் திரண்டு வந்து வாக்களித்தால் வன்முறைகளை முறியடிக்கலாம்': பாக்கியசோதி சரவணமுத்து 'கடந்த 24 மணிநேரத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் வன்முறைகளையும் அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டவிழ்த்துவிட்டு எதிரணியினரை பிரசாரத்தில் ஈடுபடவிடாமல் தடுத்துவருகின்றனர்' என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
பல வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியிருக்கிறார். இதுபற்றி கருத்துக் கூறிய பாக்கியசோதி சரவணமுத்து, 'வெறும் கைதுகள் மட்டும்போதாது. அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு, முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று கூறினார்.
'தேர்தல் சட்டங்களை மீறுவோரையும் வன்முறைகளிலும் முறைகேடுகளிலும் ஈடுபடுவோரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்களுக்கு பொறுப்பாளிகளாக்கப்பட வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
பெருந்திரளாக சென்று வாக்களிப்பதன் மூலமே வன்முறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மக்கள் பதில் அளிக்க முடியும் என்றும் சரவணமுத்து தெரிவித்தார்.
'வன்முறைகளுக்கு மத்தியிலும், கடந்த 2013-ம் ஆண்டு செப்டெம்பரில் நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலைப் போல பெருமளவிலான மக்கள் திரண்டுவந்து வாக்களித்து இப்படியான வன்முறைகளை நிராகரிப்பதாக கூறமுடியும்' என்றும் இலங்கையில் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து கூறினார்.