கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக, கட்சியின் உறுப்பினரும், மத்திய குழு உறுப்பினருமாகிய திருமதி அனந்தி சசிதரனை, கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கின்றது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கத்தினால் அனந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
மூன்று காரணங்களைச் சுட்டிக்காட்டி, அவை தொடர்பில் அனந்தியின் கவனம் ஈர்க்கப்படுவதாகவும், அவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இம்மாதம் 11 ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
‘நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) பொது எதிரணி வேட்பாளர் திரு.மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுத்தது.
‘இதன் அடிப்படையில் எமது கட்சியினர் பணியாற்றினர்.
‘நீங்கள் கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக அறிக்கைகள் விட்டமையாலும். பத்தரிகையாளர் மாநாடு நடத்தியமையாலும், பிரசாரம் செய்தமையாலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியுள்ளீர்கள்.
எனவே, நீங்கள் இன்றிலிருந்து கட்சியின் உறுப்புரிமை, கட்சியின் மத்தியி செயற்குழு உறுப்புரிமை என்பவற்றினின்று இடைநிறுத்தப்பட்டுள்ளீர்கள் என்பதை இத்தால் தங்களுக்கு அறியத் தருகிறேன். ஊங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் விலைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்' என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் தனக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அனந்தி, அது குறித்து இப்போதைக்கு கருத்து எதனையும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார்.
வடமாகாணசபை உறுப்பினராகிய அனந்தி சசிதரன், விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
யுத்தம் முடிவடைந்தவுடன், பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் என்று உறுதியளித்து, யுத்தத்தில் எஞ்சியிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு அரசாங்கம் கோரியிருந்தது.
இதனையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராக எழிலனும் சரணடைந்தார். எனினும் அதன் பின்னர் தனது கணவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார், அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் அனந்தி தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.
இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட அனந்தியை தமிழரசுக் கட்சி தனது உறுப்பினராக இணைத்து வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடச் செய்திருந்தது.
வடமாகாண சபைத் தேர்தலில் முதலசை;சர் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரனுக்கு அடுத்ததாக 87 ஆயிரத்து 870 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.