மகிந்தவின் தோல்வியில் தமிழர்கள் மகிழ்ந்தது ஏன்?

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மென்மையான போக்குடையவர் என்பதை அவரின் செயற்பாடுகளில் இருந்து உணர முடிகின்றது.
இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி அறிவித்தமை ஒரு தலைவனுக்கு இருக்கக் கூடிய சிறப்பைக் காட்டுவதாகும்.
இரண்டாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மைத்திரி அறிவித்த நேரம், காலம் என்பன மிகவும் பொருத்தமானவை. இந்த அறிவிப்பு அவர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.
அதேநேரம் கண்டி தலதா மாளிகையின் எண்கோண மண்டபத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் சாந்தமும், நிதானமும் தெரிகிறது.
எனினும் அதீத நல்ல குணம் பலவீனமாகக் கருதப்படும் என்பதன் அடிப்படையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாகவும் தீர்மானங்களை எடுப்பதில் மிகத் தெளிவாகவும் இருப்பது அவசியம்.
பொதுவாக கூட்டுக்கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்கின்றவர்கள் உறுதியான தீர்மானங்களை எடுக்க முடியாத சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.
ஆட்சிக்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் தத்தம் செல்வாக்கினைப் பிரயோகிக்க முற்படுவர். இதனால் ஆட்சித் தலைவர் எதுவும் செய்ய முடியாத இழுபறி நிலைக்கு ஆட்படுவது வழக்கம்.
இத்தகையதொரு சூழ்நிலை, புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உண்டு.
அதாவது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி என்பது மைத்திரி என்ற தனிமனித செல்வாக்கினால் ஏற்பட்டதன்று.
மாறாக சந்திரிகா குமாரதுங்கவின் ஆதரவு; ரணிலினதும் அவரது கட்சியினதும் ஆதரவு; முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் மகிந்தவை விட்டு மைத்திரியின் பக்கம் வந்து சேர்ந்த அமைச்சர்கள்; தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஆதரவு என அனைத்தும் சேர்ந்தே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கியது.
இந்நிலையில் மைத்திரி ஜனாதிபதிப் பதவியை பெறுவதற்கு நாங்களே காரணம் என்று கூட்டுச் சேர்ந்தவர்கள் உரிமை கோரும் போது எல்லாம் குழம்பி விடும்.
எனவே யாருடைய ஆதரவில் பதவியைப் பெற்றிருந்தாலும் மைத்திரிபால தனது சொந்தப் புத்தியில் செயற்படுவது அவசியமானதாகும்.
அதேநேரம் நூறு நாள் வேலை திட்டத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியின் அதிகாரத்தை குறைக்கின்ற திட்டங்களும் உண்டு.
குறித்த திட்டம் நல்லதாயினும் அந்தத் திட்டம் முன்னாள் ஜனாதிபதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாத வகையிலும் நிலைமையைப் பார்த்துக் கொள்வது காலத்தின் கட்டாய தேவையாகும்.
எதுவாயினும் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவாகியதில் அதிகூடிய மகிழ்ச்சி அடைபவர்கள் தமிழர்களாகவே இருக்க முடியும்.
அதற்குப் போதுமான நியாயமும் உண்டு. வன்னிப் போரை நடத்தி முடித்த மகிந்த ராஜபக்ச, தமது பிரச்சினைக்குத் தீர்வு காணுவார் எனத் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற மகத்தான பலமும் அவரிடமிருந்தது. அதேநேரம் தமிழர்களின் உரிமைகளை மகிந்த ராஜபக்ச வழங்கும் போது பேரினவாதத்தைச் சேர்ந்த எந்தக் கொம்பனும் எதிர்க்க முடியாது. அவ்வாறு எதிர்த்தால் மகிந்த பதிலடி கொடுப்பார் என்றும் நம்பப்பட்டது.
ஆனால், மகிந்த ராஜபக்ச போர் வெற்றிக்கு விழா எடுத்தாரே தவிர, தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்க எதுவும் செய்யவில்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிய மகிந்த அப்பாவித் தமிழ் மக்களை காப்பாற்றத் தவறியதும், வெற்றிக்குப்பின் உங்களுக்கு என்ன தீர்வு என்று கேட்பது போல நடந்து கொண்டதுமே அவரின் தோல்வியில், உங்களின் வெற்றியில் தமிழர்களுக்கு மகிழ்வு.
இந்த உண்மையை புதிய ஜனாதிபதி அறிந்து அதற்கேற்றால் போல் செயற்பட வேண்டும் என்பதே நம் விருப்பம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila