குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துவாரகா கலைக்கண்ணன்:-
பான் கீ மூனின் பருவ நிலை மாற்றம்
“இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றமை குறித்து அறியக்கிடைத்துள்ளது, எனினும் இவ் விசாரணைப் பொறிமுறை சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் இருக்க வேண்டியது அவசியம்” என ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் எரிக் கனாகோ தெரிவித்துள்ளார்.
ஐ.நா வின் சர்வதேச விசாரணைக்காக காத்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு மேற்குறித்த கருத்தானது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விசாரணை மூலம் தமக்கு ஏதோ நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு “போர்க்குற்றம் தொடர்பாக உள்ள விசாரணை இடம் பெறும்” என்ற கருத்து நூறு நாள் கனவு கலைந்து நிஜயத்துக்கு திரும்பியுள்ளனர்.
குறிப்பாக சர்வதேச தர நிர்ணயத்துக்கு உட்பட்ட வகையில் அமையும் என பான் கீ மூனின் பேச்சாளர் கூறியமை ஈழத்தமிழரின் உயிரை உலுப்பியுள்ளது. அதாவது சர்வதேசவிசாரணை அல்ல சர்வதேச தரமான “உள்ளக விசாரணைபொறிமுறை” ஒன்றை உருவாக்கி பொறிக்குள் தமிழர்களை தள்ளப்போகின்றார்கள்.
காலம் காலமாக ஈழத் தமிழினம் ஏமாந்து போய்யுள்ளதாகவே வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இந்தியாவின் நேசக்கரத்துக்கு அகப்பட்டதிலிருந்து நோர்வேயின் சமாதான கதவுகள் மூடப்பட்டது வரை கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.
ஐ.நா வின் செயலாளராக 2007 ஜனவரில் 01 பதவி ஏற்ற பான் கீ மூன் வன்னியில் 2009 ஆம் ஆண்டு மனிதப்பேரவலம் நடந்தபோதும் மௌனவிரதம் இருந்தார். வன்னி நிலமெல்லாம் இரத்தமான போது ஐ.நா பணியாளர்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊழியர்களும் அம் மக்கள் கதறக்கதற அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா எடுத்த நடவடிக்கைகள் குறித்த உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை சார்லஸ் பெட்சி தலைமையில் ஐ.நா பொதுச் செயலர் அமைத்தார். அக் குழு எட்டுமாத காலம் ஆய்வு செய்து ஐ.நா வின் எட்டாவது பொதுச்செயலர் பான் கீ மூனிடம் கையளித்தது. அவ்வறிக்கையில் பல உண்மைகள் முழுமையாக வெளி வரவில்லை. குறிப்பாக இரசாயனக்குண்டு தாக்குதல்கள், போர் ஆயுதங்களால் இறந்த மக்களின் விபரங்கள், பாலியல் வன் கொடுமையால் கொல்லப்பட்ட பெண்கள், பட்டினிசாவுகள், மருத்துவ வசதியின்றி சாவத் தழுவியோர்,காணாமல் போணோர் என ஏராளமான தகவல்கள் பதிவாக்கப்படவில்லை.
பின்னர் மார்சுகி தாருஸ்மர் தலைமையில் மூவர் கொண்ட குழு தமது அறிக்கையில் வன்னியில் தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டது தொடர்பாக பல்வேறு சம்பவங்களை தகுந்த ஆதாரத்துடன் வெளிகொணர்ந்து ,சுகந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது.
சர்வதேச விசாரணைக்கு காத்திருத்த வேளையில் உள்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் “வலியை தந்தவனுக்கே வலியை திருப்பி கொடு” என அன்னத்துக்கு புள்ளியிட்டு ஒரு சுகந்திர ஒளிக் கீற்றை எதிர்பார்திருந்தவர்களுக்கு எரிக் கனாகோ சொன்னது எரிமலையானது.
ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் 1994 ஏப்பிரல்08 இல் டிட்ஸி இனத்தைச் சேர்ந்த 08 இலட்சம் மக்களை ஹட்டு இனவாத அரசுடன் இராணுவமும் காவல்துறையும் இணைந்து இனப்படுகொலை செய்தது. உலகை உலுப்பிய இப் படுகொலையின் 20 வது ஆண்டு நினைவு தினம் 2014 ஏப்பிரல் 08 ருவாண்டாவில் நடை பெற்ற வேளை அந் நாட்டின் ஜனாதிபதி போல் ககாமே வுடன் இணைந்து ஐ.நா வின் பொதுச்செயலர் பாங் கீ மூன் நினைவுத் தீபத்தை ஏற்றி வைத்தார்.
இப் படுகொலை பற்றி பான் கீ மூன் உரையாற்றிய போது “ இந்தப் படுகொலைகளை தடுக்க தவறியதற்கு ஐ.நா வின் மீதே இன்னும் வெட்கக்கேடு ஒட்டிக்கொண்டிருக்கிறது” என்றார். இதே வெட்கக்கேட்டை மீண்டும் ஒரு முறை ஈழத்தமிழர் விடயத்தில் ஜ.நா செய்யாமல் இருக்க பான் கீ மூன் பாத்துக் கொள்ள வேண்டும்.
துவாரகா கலைக்கண்ணன்