உள்ளக விசாரணை இலங்கையில் சாத்தியம் இல்லை: ஐ.நா ஆணையாளருக்கு சிவில் அமைப்பு கடிதம்

சர்வதேச விசாரணையை முன்னெடுத்துக் செல்லுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை என்ற தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ள குறித்த கடிதத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளார் அலுவலகத்தின் இலங்கை மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கும் எதிர்வரும் மார்ச் மாத ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டதொடர் தொடர்பில் தங்களிற்கு தமிழ் சிவில் சமுக அமையம் சார்பில் இம்மடலை வரைகின்றோம். இலங்கையின் வடக்கு கிழக்கில் செயற்படுகின்ற 100க்கு மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகிய‌ தமிழ் சிவில் சமூக அமையமானது, இலங்கையில் நேர்மையான‌ சமாதானத்திற்காகவும் நீதிக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைப்பாகும். மனித உரிமை ஆணையாளார் அலுவலத்தினால் நடாத்தப்படும் இந்த விசாரணையில் எமது அமையத்தின் பங்களிப்பு தாங்கள் அறிந்ததே. அந்த வகையில் அவ்விசாரணையின் முடிவுகளை அறிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக உள்ளோம். இலங்கையில் அரசாங்கம் மாறியிருக்கின்ற போதிலும், இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மான‌த்தின் மூலமாக செயற்பாட்டிற்கு வந்திருக்கும் சர்வதேச பொறிமுறையானது தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு தாமதமின்றி நகர்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்குடன் இம்மடலை வரைகிறோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனவரி 9 2015 அன்று பொறுப்பெற்றுக்கொண்ட புதிய அரசாங்கம், யுத்ததின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்களை விசாரிக்க உள்நாட்டுப்பொறிமுறை ஒன்றை உருவாக்கும் தனது எண்ணத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருக்கிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவர இருக்கும் அறிக்கையை அல்லது அதன் தொடர்ச்சியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை பிற்போடும் நோக்குடனேயே, இந்த உள்நாட்டு விசாரணைபொறிமுறை என்ற கருத்துதிர்ப்பு வெளிவந்திருக்கின்றது என நாம் கருதுகிறோம்.
உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை சர்வதேச தரத்துடன் உருவாக்க இருக்கிறோம் என்கிற தோற்றபாட்டை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தரமாகவே, சர்வதேச பொறிமுறை ஒன்றிற்கான கோரிக்கையை செயலிழக்கச் செய்யலாம் என இந்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
ஆனால், இலங்கையில் உருவாக்கப்படும் எந்தவொரு உள்ளகப் பொறிமுறையும் தீர்க்கமான பொறுப்புக்கூறலை ஏற்படுத்துவதற்கு உதவப் போவதில்லை என்பதற்கு 2 பிரதான காரணங்களினை நாம் முன் வைக்க விரும்புகிறோம்.
தற்போதய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட, இன்றைய அரசின் முக்கிய பங்காளிகள் முன்னைய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகள் இலங்கை அரசாங்கம் “தூய்மையான ஒரு யுத்ததையே" நடாத்தியது என வலியுறுத்தி வருபவர்கள்.
அத்தோடு தற்போதைய மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் பங்காளிகளான சில மிக முக்கிய பிரமுகர்கள், இறுதிப் போரில் நேரடியாக முக்கியமான பங்கு வகித்தவர்கள்.
முன்னைய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியில் இருந்து தற்போது அரசாஙகத்தில் அங்கம் வகிப்போர் பொறுப்பக் கூறல் விடயத்தை வெறுமனே ஒரு வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்சனையாகப் பார்ப்பவர்கள். எனவே இவ்வரசாங்கத்திடமிருந்து பொறுப்புக் கூறலை எதிர்பார்க்க முடியாது.
தென்னிலங்கையில் உள்ள அனைத்து அரசியற்கட்சிகளும் சிங்கள பௌத்த தேசியவாத அரசியலுக்கான தங்களது கடப்பாட்டை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்ற நிலையிலும், அந்த சிங்கள பௌத்த தேசியவாத அரசியலை பாதுகாக்கும் பெருமைக்குரியவர்களாக இலங்கை இராணுவத்தை சிங்கள தேசியவாத அரசியல் போற்றுகின்ற நிலையிலும், இலங்கை இராணுவத்திற்கெதிரான நம்பத்தகுந்த உள்ளக விசாரணைப் பொறிமுறை இலங்கையில் ஒருபோதும் உருவாக்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை. 
மேற்கூறிய காரணங்களால், சிறில்ங்காவிற்கான உள்ளக விசாரணை சம்பந்தமான எந்தவொரு கோரிக்கையையும் மிகுந்த அவதானத்துடன் அணுகப்பட வேண்டும் எனத் தங்களை மிகுந்த வினயத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக இவ்விடயம் தொடர்பில் காத்திரமான முன்வைப்புக்கள் எவையுமற்ற நிலையில் கூடுதல் அவதானம் தேவையானது என நாம் கருதுகிறோம்.
வெறுமனே காலத்தை கடத்துவதற்கும் தமக்கான ஓர் அரசியல் வெளியை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளே இந்தக்கோரிக்கையின் ஒரே ஒரு நோக்கமாகும்.
எங்களைப் பொறுத்தவரையில், இலங்கை அராங்கத்துக்கு மேலும் காலாவகாசத்தை வழங்குவதானது, நீதியை தாமதிக்கச் செய்துவிடுவது மட்டுமல்லாது, நிரந்தரமாகவே மறுதலிக்கவும் செய்துவிடும்.
இந்தப் பின்னணியில், இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவானது எவ்வாறு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்தது என்பதையும் அது யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த பாரதூரமான குற்றங்களை வேண்டுமென்றே உதாசீனம் செய்தது என்பதையும் சர்வதேச முன்னெடுப்புக்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது என்பதையும் நாம் ஞாபகப்படுத்துகிறோம்.
இன்னுமொரு கற்றுக் கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவுக்கு நேரம் வழங்குவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை.
எனவே, தங்கள் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கையை வெளியிடுமாறும் அதன் வழி சர்வதேச செயன்முறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுமாறு தங்கள் அலுவலகத்தை மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்விசாரணை அறிக்கை மூலம் பாரதூரமான குற்றங்கள் இடம்பெற்றமை கண்டறியப்படுமிடத்து தக்க சர்வதேச குற்றவவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒழுங்குகளை ஆரம்பிக்குமாறு உரிய ஐநா அமைப்புகளையும் மற்றும் உறுப்பு நாடுகளையும் தங்கள் அலுவலகம் கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறோம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila