"இனிய பாரதியின் காரியாலயத்தை தோண்டுங்கள் - புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை மீளுங்கள் விசாரியுங்கள்"

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டமும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றுள்ளது:-
"இனிய பாரதியின் காரியாலயத்தை தோண்டுங்கள் - புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை மீளுங்கள் விசாரியுங்கள்"
 முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஷ்பகுமார் என்றழைக்கப்படும் இனிய பாரதியின் காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப் பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து விசாரணைகள் நடத்துமாறு கோரி மஜகர் கையளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச மக்கள்   திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை கட்டத் தொகுதிக்கு முன்பாக புதன்கிழமை (18.02.15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின அம்பாறை மாவட்ட முன்னாள்; நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் ஆகியோரின் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்டவிடம் மகஜரொன்றை கையளித்தார்.

இம்மகஜரிலே மேற்படி விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  'மட்டக்களப்பு பிரதேசத்தில் பிறந்தவரும் தற்போது திருக்கோவில் வசிப்பவரும் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.புஸ்பகுமார் என்ற இனியபாரதி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இயக்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர், முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த காலத்திலும்

விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் கடத்திச் செல்லப்பட்ட எங்களது உறவுகளை மீட்டுத்தருங்கள்,

அவரால் பலவந்தமாக ஏழைகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட உடமைகள், சொத்துக்களை மீட்டுத்தாருங்கள்,

அவர் இருந்த காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து நீதி விசாரணைகள் நடத்துங்கள்,

தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு அருகிலுள்ள வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் நகைகள் பற்றிய விசாரணைகளை நடத்துங்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

'இப்போராட்டம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்பகட்ட போராட்டமாக இருப்பதுடன் தொடர்ந்து நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்” என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இதன்போது தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டகாரர்கள் மாகாணசபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை முற்றுகையிட்டு கோஸம் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இனியபாரதி என்றழைக்கப்படும் புஸ்பகுமார் - இராணுவப் புலனாய்வுக் கட்டமைப்புகளில் இணைந்து செயற்பட்ட போது “புஸ்பகுமார” “குமார” “குமார மாத்தையா” “மேஜர் குமார” என அழைக்கப்பட்டு இருந்தமையும் கொழும்பிலும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் இடம்பெற்ற பல வெள்ளைவான் கடத்தல்கள் கொலைகளோடு தொடர்பு பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila