பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்க பொதுக்குழு ஆழ்ந்த விசனமடைந்துள்ளது.
ஊழல்களை மறைப்பதற்கான சில பீடாதிபதிகளின் திரைமறைவிலான கூட்டுமுயற்சி பல பீடாதிபதிகளாலும், விஞ்ஞான பீடாதிபதியுட்பட, இரகசியமான முறையில் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்க பொதுக்குழு ஆழ்ந்த விசனமடைந்துள்ளது. December 2013 இல் இருந்து JUSTA வெளியிட்டு வரும் அறிக்கைகள் பல்கலைகழக கல்விசார் மற்றும் கல்விசாரா நியமன முறைகேடுகளை ஆவணப்படுத்தியுள்ளது. ஒரு தொகுதி பீடாதிபதிகளின் மேற்படி கடிதமானது மேற்படியான எமது முறைப்பாடுகளை மூடிமறைப்பதற்கானதொரு முயற்சி என அறிகின்றோம். கலைப்பீடாதிபதியின் வீடு தேடி வந்த பீடாதிபதிகள் சிலர் மேற்படி கடிதத்தில் இரகசியமானதொரு சதி முயற்சி போன்ற பாணியில் கையொழுத்திட அவசரப்படுத்தியதாகஇ மேற்படி விடயம் ஆசிரியர் சங்கப் பொதுக்குழுவில் 06 - 02 - 2015 இல் விவாதிக்கப்பட்ட போது தெரியவந்தது. மேற்படி பீடாதிபதிகள் வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளவேண்டிய தலைமைத்துவப் பதவிக்கான தகுதிகளை இழந்துவிட்டனர்.
எமது அறிக்கைகள் பல இடங்களிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவை பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருந்தன என்பதை நாம் பீடாதிபதிகளுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். எமது குற்றச்சாட்டுக்கள் எவராலும் மறுக்கப்படவுமில்லை அவற்றிற்கான பதில்களும் எவராலும் எமக்குத் தரப்படவுமில்லை. பல்கலைக் கழகத்திற்கெதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று முக்கியமானதொரு குற்றச்சாட்டாக மேன்முறையீடு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி வழக்கானது எமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
மேற்படி கடிதத்தில் கையெழுத்திட்ட பீடாதிபதிகள் அனைவரும் தத்தமது பீட அங்கத்தவர்களுக்கு தமது செயற்பாடு குறித்து இதற்கென விசேடமாகக்கூட்டப்படும் பீடச்சபையில் விளக்கமளிக்க வேண்டியது அவசியம் என நாம் கருதுகின்றோம். குறிப்பாக எமது விஞ்ஞான பீடாதிபதியிடம் மேற்படி செயற்பாட்டை வேண்டிநிற்கின்றோம். பீடாதிபதிகள் கல்வி மற்றும் நிர்வாகம் சார் விடயமங்களில் தமது பீட சபைகளைக் கலந்தாலோசித்துதான் நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். மேற்படி விடயங்களில் பீடாதிபதிகளாக அவர்கள் தனிப்பட்ட முடிவுகளை எடுக்க முடியாது. ஆனாலும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பீடாதிபதிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தமது பீட சபைகளுடன் அவை குறித்து ஆராயவில்லை என்பது ஒரு கவலையான உண்மையாகும். ஊழல்களைக் கூட்டாகப் புரிந்த பீடாதிபதிகள் அதனை மறைப்பதற்கான முயற்சிகளிலும் கூட்டாக ஈடுபட்டிருப்பது பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் திட்டமிட்ட வகையில் கூட்டாகப் புரியப்பட்டன என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்க பொதுக்குழு:
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்கும்பட்சத்தில் முழுமையாக பிரசுரிக்கப்படும்...
00447769686764