இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும்” பிரித்தானிய பிரதமர் - மைத்திரிபால சிறிசேன டேவிட் கமரூனை சந்தித்தார்

உத்தியோகபூர்வ பயணமாக பிரிட்டன் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமரூனை அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்தார்.
பிரிட்டிஷ் எலிசபெத் மகாராணியின் அழைப்பை ஏற்று பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகளையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசினார்.
இன்று பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் குறித்து பேசினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கை அரசின் சொற்கள் செயல்களாக மாறவேண்டும்” (BBC)
இலங்கையின் புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண சமிக்ஞைகளை வரவேற்றிருக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதியின் அறிவிப்புக்கள் அனைத்தும் வாய்வார்த்தைகள் என்பதைத் தாண்டி செயல்களாக மாறுவதைக் காணவே பிரிட்டன் விரும்புகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
காமன்வெல்த் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய டேவிட் கமரூன், புதிய அதிபர் மீது பிரிட்டன் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார். இலங்கைக்குள் இருக்கும் தமிழர்கள் தொடர்பாக புதிய ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தமக்கு அந்த நம்பிக்கையை அளிப்பதாக கூறினார்.
மறுசீரமைப்பு தொடர்பான புதிய ஜனாதிபதியின் முன்முயற்சிகளை பிரிட்டன் ஆதரிப்பதாக தெரிவித்த கமரூன், மறுசீரமைப்பு, ஊழல் ஒழிப்பு, பிரிந்துகிடந்த இலங்கையை ஒன்றாக்குவதற்கான முயற்சிகள் என புதிய அரசின் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார்.
இலங்கையின் வடக்கே இராணுவத்தின் பயன்பாட்டுக்கு எடுக்கப்பட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி தமிழர்களுக்கு திருப்பித் தரப்படுவது, சிவில் நிர்வாகத்தில் இருந்து இராணுவமயமாக்கலை அகற்றும் நோக்கில் ஆளுநர்களாக இருந்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்திருப்பது, மீள்குடியேற்றத்துறைக்கு தமிழர் ஒருவரையே அமைச்சராக நியமித்திருப்பது போன்ற நவடிக்கைகளை இணைத்துப் பார்க்கும்போது இவை நல்ல ஆரம்பம் என்று தாம் கருதுவதாக கமரூன் தெரிவித்தார்.
இலங்கையின் மீள் குடியேற்றம் மற்றும் இணக்கப்பாடு தொடர்பிலான இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் புதிய ஜனாதிபதி முன்னெடுக்கவேண்டும் என்று கூறிய கமரூன், அதற்குத்தேவையான ஒத்துழைப்பை பிரிட்டன் வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையுடன் பிரிட்டனுக்கு வரலாற்று ரீதியாக வலுவான உறவு நீடிப்பதாக தெரிவித்த கமரூன், புதிய ஜனாதிபதி தனது மறுசீரமைப்பு நடவடிக்கைகள், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்துவது போன்ற தனது முன்னெடுப்புக்களை தொடர்வார் என்று நம்பிக்கை வெளியிட்டார். அதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக லண்டனில் இருந்து வெளியாகும் தமிழ் கார்டியன் பத்திரிக்கையில் தனிக்கட்டுரை ஒன்றை எழுதியிருந்த கமரூன், இலங்கையின் போர்குற்றங்கள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை ஏற்கவைப்பதிலும், தற்கால மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்துவதிலும் பிரிட்டன் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை திட்டமிட்டபடி இந்த மாதம் வெளியிடப்படாமை தொடர்பில் தமிழர்களின் கோபத்தை தாமும் பகிந்துகொள்வதாகவும் கமரூன் கூறியிருந்தார்.
அதேசமயம், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் வரை ஒத்திப்போடப்பட்டிருப்பதன் விளைவாக, இலங்கையின் புதிய அரசாங்கம் ஐநா மன்றத்துடன் பேசவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நம்பகத்தன்மை மிக்க உள்ளக விசாரணையை ஏற்படுத்தவும் இலங்கை அரசுக்கு வாய்ப்பு கிட்டியிருப்பதகாவும் தெரிவித்தார்.
ஐநா மன்றத்தின் மனித உரிமைக்கவுன்சிலில் செப்டம்பர் மாதம் இலங்கை தொடர்பான ஆய்வறிக்கை கண்டிப்பாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்ட கமரூன், அடுத்த ஆறுமாதங்கள் கழித்து மீண்டும் உலகின் கவனம் இலங்கைமீது படியும் என்றும் அப்போது இலங்கையானது தனது கடந்தகாலத்தை எதிர்கொள்ளக்கூடிய நாடாகவும், தனது மாறுபாடுகளை மறந்து தன்னை மறுசீரமைத்துக்கொள்வதன் மூலம் வளமான எதிர்காலத்தை உறுதி செய்யக்கூடிய நாடாகவும் இருக்கவேண்டும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆறு மாத காலத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் வெளிச்சத்துக்கு வரும்!- டேவிட் கமரூன் நம்பிக்கை
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் 6 மாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள 6 மாத காலப்பகுதி அவகாசத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2013ம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது அங்கு பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலுக்கான தேவையுள்ளமையை தாம் வலியுறுத்தியதாக கமரூன் தெரிவித்துள்ளார்.
தமிழ் காடியனுக்கு அனுப்பியுள்ள எழுத்துமூல அறிக்கை ஒன்றில் கெமரோன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பதை 6 மாதங்களுக்கு பிற்போட்டமையை இலங்கையின் எதிர்காலம் கருதிய ஒவ்வொருவரும் வரவேற்கவில்லை.
குறிப்பாக தமக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறும் வடக்கு கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கமரூன் சுட்டிக்காட்டியுள்ளார்
எனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் குறித்த மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கையிலேயே மேலதிக காலம் வழங்கப்பட்டுள்ளது
எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு தாம் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக கமரூன் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்கள் மத்தியில் புதிய அரசாங்கம் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இராணுவ சூன்ய நிலை ஏற்படுத்தப்படவேண்டும். இராணுவம் பிடித்து வைத்திருக்கும் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்
இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை தாம் 2013ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சந்தித்த முகங்களை தம்மால் மறக்க முடியாது என்றும் கமரூன் குறிப்பிட்டுள்ளார்
எனவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிடவுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல்கள் அடங்கியிருக்கும் என்று கமரூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
இதன்போது இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான உறவும் விருத்தியடையும் என்று கமரூன் தெரிவித்துள்ளார்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila