முல்லைதீவில் பொலிஸார் குவிப்பு! தடைதாண்டி நினைவேந்தலிற்கு ஏற்பாடு!!

முள்ளிவாய்க்கால் படுகொலயை நினைவுகூர்ந்து நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த சுமார் 600 வரையிலான பொலிஸார் முல்லைதீவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல்சமய வழிபாடுகளிற்கு சிவில் சமூகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாளை மாலை 4 மணியளவில் முள்ளிவாய்க்கால் புனித.பவுல் தேவாலய முன்றலில் நடைபெறுமென சிவில் சமூக அமைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் மதத்தலைவர்கள் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்ததே. இத்தகய அவலம் மானுட வரலாற்றில் மீண்டும் ஒருமுறை இடம்பெறக்கூடாதென்பதே எமது பெருவிருப்பு.
காலாதிகாலத்துக்கும் வருடாந்தம் நாம் இந்த நினைவுகூரலில் ஈடுபட கடமைப்பட்டுள்ளோம். இந்நினைவு கூரல் இறந்தோருக்கான அஞ்சலியாகவும் இருப்போருக்கு இனி எப்போதும் நடைபெற அனுமதிக்கப்பட முடியாதது என்ற உணர்வையும் தரும்.
ஆகவே இதனை முன்னிட்டு 18 மே மாலை 4 மணிக்கு முள்ளிவாய்க்கால் புனித பவுல் ஆலய முன்றலில் ஒழுங்கு செய்யப்படும் பல்சமய வழிபாட்டில் பங்குபற்ற அனைவரையும் அழைக்கின்றோமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிமன்ற தடையினையடுத்து வடமராட்சி கிழக்கின் தாளையடியில் தமது நினைவேந்தல் நிகழ்வினை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாகத் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே நாளை திட்டமிட்டபடி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் மாவை.சேனாதிராசா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று மாகாணசபையால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் இது தொடர்பான அறிவிப்பினை ஊடககங்களிற்கு இன்றிரவு முதலமைச்சர் அலுவலகம் விடுக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி வளாகம், மற்றும் மருதனார்மட வளாகங்களில் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila