போதைவஸ்து பயன்பாட்டை வேரறுக்க வேண்டும்

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் கடையடைப்புகளும் நடந்தவண்ணம் உள்ளன.
ஒரு மாணவிக்கு நடந்த வன்கொடுமையை மனித நேயமிக்க எவரும் ஜீரணிக்க மாட்டார்கள் என்பதை உணர்த்துவதாக சமூக நீதிக்கான மக்கள் போராட்டம் எழுகை பெற்றுள்ளது.
மக்களின் கொந்தளிப்புக்கு மதிப்பளித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு மாணவி வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்ததோடு, யாழ்ப்பாணத்துப் பாடசாலை மாணவிகளையும் சந்தித்து உரையாடினார்.
நாட்டின் ஜனாதிபதி வருகை தந்து ஆறுதல் கூறுகின்ற அளவில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கான எதிர்ப்பு அலை வேகம் எடுத்திருந்தது. இவை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களும் பாலியல் சார் தொந்தரவுகளும் வன்மங்களும் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் ஆச்சரியம் தரும் உண்மை.
வித்தியா படுகொலை செய்யப்பட்டதற்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி கண்டும் சிலர் திருந்தவில்லை எனில், இத்தகையவர்களிடம் திருத்தம் வரமுடியாது என்பது உறுதியாகின்றது.
இவ்வாறான ஒரு நிலைமை சுயத்தை இழக்கும் போதே ஏற்பட முடியும். ஒருவர் சுயத்தை இழந்துதகாத காரியங்களில் இடுபடுகிறார் எனில் அவர் மதுபோதைக்கு அல்லது போதைவஸ்து பாவனைக்கு ஆளாகியுள்ளார் என்றே பொருள்கொள்ள வேண்டும்.
மாணவி வித்தியாவுக்கு நடந்த வன்கொடுமையைப் பார்க்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் போதை பாவித்துள்ளனர் என்ற முடிவுக்கு நாம் வர முடியும். ஆக, பாலியல் சார்ந்த துஷ்பிரயோங்களின் பின்னணியில் போதைப் பாவனை இருப்பது உண்மையாகிறது.
பொதுவில் வடபுலத்தில் போதைவஸ்துக்களின் விற்பனை அதிகரித்துள்ளது. மனித இனத்திற்குத் துரோகம் இழைக்கும் கும்பல்கள் போதைவஸ்து கடத்தல்; விற்பனை என்பவற்றில் ஈடுபட்டுள்ளமை தெரியவருகிறது.
அதிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் போதைவஸ்து பாவனை ஏவிவிடப்பட்டுள்ளது. இதனால் எங்கள் மாணவ சமூகம் பாதிப்படையும் பேராபத்தை எங்கள் மண் விரைவில் அனுபவிக்க இருப்பது பேரதிர்ச்சிக்குரியது. எனவே தமிழர் தாயகத்திலிருந்து போதைவஸ்தை முற்றாக வேரறுக்க வேண்டும்.
இதற்காக மக்கள் சமூகம் ஒன்றுபடுவது அவசியம். அதேநேரம் போதைப் பொருட்கள் விற்பனை நடக்கின்ற இடங்கள், அதில் ஈடுபட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நீதிபரிபாலனம் நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.
வடபுலத்தில் போதைப்பொருள் பாவனை; மதுப் பயன்பாடு என்பவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாலியல் சார் துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்திகளே வடபுலத்திலிருந்து வெளிப்படும் தகவல்களாக இருப்பது தவிக்க முடியாததாகிவிடும்.
ஆகையால், நாம் அனைவரும் ஒன்றுபட்டு போதைப் பொருள் பாவனையை ஒழிக்கத் திடசங்கற்பம் பூணவேண்டும். அதேநேரம் போதைப்பொருள் ஒழிப்பில் பொலிஸாரின் நேர்மையான ஒத்துழைப்பும் கட்டாயமானதாகும்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila