இராணுவத்தால் சூழப்பட்ட கனகாம்பிகை அம்மன் ஆலய கிழக்கு வீதியை மட்டும் விடுவித்தால் போதுமா?

இராணுவத்தால் சூழப்பட்ட கனகாம்பிகை அம்மன் ஆலய கிழக்கு வீதியை மட்டும் விடுவித்தால் போதுமா?
வடக்கில் மக்களின் குடிநிலங்களில் மாத்திரமின்றி பொது இடங்கள் பலவற்றிலும் இராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். அதனால் பொது இடங்களின் செயற்பாடுகளுக்கு பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ ஆதிக்கத்தை தளர்த்த முடியாத நிலைமை தொடர்கின்றது.

கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் பெரும் படைத்தளங்களை அமைத்து குடியேறியுள்ளனர். இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பின் புறமாகவும் ஆலய வலது புறமாகவும் பாரிய பிரதேசங்கள் இராணுவமுகாமாக காணப்படுகின்றது.

இந்த பகுதிகள் ஆலயத்தின் செயற்பாடுகளுக்கு தேவையானவை. அன்னதான மடங்கள், நிகழ்வு மைதானங்கள் என்பவற்றுடன் ஆலயத்தின் பின்புறமாக மக்கள் குடிநிலங்களும் இராணுவத்தின் வசம் காணப்படுகின்றது. குறித்த நீலத்தை சேர்ந்த மக்கள் குறித்த பகுதிக்கு அண்மித்த பகுதியில் தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.


இரணைடுக்குளம் கிளிநொச்சி மக்களின் வாழ்வில் வாழ்வாதாரத்திற்கான மையம். கனகாம்பிகை அம்மன் ஆலயம் வன்னிப் பிரதேச மக்களின் வாழ்வில் நம்பிக்கையூட்டும் வல்லமை தரும் வழிபாட்டிடம். இந்த இரண்டு இடங்களையும் குறித்து இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பது ஏன்?

இரணைமடுகுளத்தில் மீன்பிடித்து தமது வாழ்வை நடத்தும் மீனவக் குடும்பங்களும் குளத்து நீரை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும் இராணுவத்தினரின் இரணைமடு ஆதிக்கத்தால் கடும் பாடுகளை கடந்த காலத்தில் சந்தித்துள்ளளனர்.

இராணுவத்தினர் மீனவர்களை மின்பிடிக்க அனுமதிப்பதில்லை. அத்துடன் குளத்தில் போதுமான நீரை சேமிக்கவும் அனுமதிப்பதில்லை. இவைகளுக்கு காரணம் இரணைமடுப் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுவேயாகும். கோயில் நிர்வாகத்திடம் கோயில் காணிகளும் இல்லை. மீன் பிடி அமைப்பிடம் குளத்தின் கட்டுப்பாடும் இல்லை
 
குளத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளையும் வலைகளையும் இராணுவத்தினர் சேதப்படுத்திய பல கதைகளை கடந்த காலத்தில் நாம் அறிந்துள்ளோம். இவ்வாற ஒரு சூழல் இரணைமடுவில் நிலவுகின்ற நிலையில்தான் மீள்குடியேற்ற அமைச்சர் நேற்று ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார்.

இராணுவத்தால் முற்று முழுதாக சூழப்பட்ட ஆலயத்தின் கிழக்கு வீதியை மீட்டுத்தருவதாக அமைச்சர் ஆலய நிர்வாகத்திற்கு வாக்குறுத்தியளித்துள்ளார். ஆனைப் பசிக்கு சோளப் பொறி என்னும் விதத்திலேயே அமைச்சரின் முயற்சி அமைந்துள்ளது. இப்போதைய நிலையில் கிழக்கு வீதியாவது திறக்கப்பட்டும் என்பதுதான் ஆலய நிர்வாகத்தின் அங்கலாய்ப்பு.


வடக்கில் இராணுவத்தின் அபகரிப்பில் உள்ள சிவில் இடங்கள் பலவற்றையும் விடுவிப்பதில் ஆளும் அரசின் சம்பந்தபடப்ட அமைச்சுகளின் முடிவுகளைக்காட்டிலும் இராணுவத்தின் முடிவுதான் செல்வாக்கு செலுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
 
அண்மையில் ஒரு நிகழ்வில் பேசிய ஜனாதிபதி இராணுவத்தினர் தமக்கு தேவையற்ற நிலங்களை கையளிக்க அனுமதி தந்துள்ளதாக கூறினார். நாட்டின் ஜனாதிபதி எனப்படுபவர் இராணுவத்தின் அனுமதியின் அடிப்படையில்தான் செயல்படுகிறாரா?

இங்கும் மக்களுக்குத் தேவையான நிலங்கள் என்பதைக் காட்டிலும் இராணுவத்திற்குத் தேவையற்ற நிலங்கள் என்பதே கணக்கில் எடுக்கப்படுகின்றன. இராணுவத்திற்குத் தேவையற்ற நிலங்கள்தான் வலி வடக்கிலும் விடுவிக்கப்பட்டதா?

அந்த மக்கள் அவ்வாறுதான் குறிப்பிட்டனர். தாம் முன்பு வசித்த இடங்கள் வீடுகள் அமைந்த பகுதிகளை எடுத்துக் கொண்டு மக்கள் வசிக்க உவப்பற்ற இடங்களே விடுவிக்கப்பட்டதாக அவர்கள் கூறினார்கள். புதிய அரசின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் நடவடிக்கை ஒரு நாடகமா?

உண்மையில் இந்த அரசு பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு குறித்து இருதயசுத்தியுடன் அணுகவில்லை என்பதை இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்துகின்றன. முழுக்க முழுக்க சர்வதேச அழுத்தத்திலிருந்து தப்பிக்கொள்ளவும் நிலங்களை விடுவிப்பதாக காட்டிக் கொள்கிறது. மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீள அவர்களுக்கு வழங்க  வேண்டும்.
 
அது மாத்திரமல்ல அவர்களின் நிலத்தை இந்தனை ஆண்டுகள் அபகரித்து வைத்திருந்தன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் இருண்ட யுகத்திற்குள் தள்ளிய அரசு அவர்களுக்கு இழப்பீட்டை கொடுக்க வேண்டும். பறிக்கப்பட்ட நிலத்தையும் இழந்த வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தையும் வாழ்வியல் கட்டமைப்புக்களையும் ஏற்படுத்துவதுதே மீள்குடியேற்றமும் மறுவாழ்வும்.

எனவே இரணைமடுக்குளத்தை அண்டிய பகுதியில் உள்ள அனைத்து இராணுவமுகாங்களும் அகற்றப்பட வேண்டும். அதன் ஊடாகவே அந்த ஆலயத்தின் வழிபாட்டுச் செயற்பாடுகளும் குளத்தை நம்பி வாழும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நலன்பெற முடியும். முக்கியமாக அப்பகுதியில் பறிக்கப்பட்ட காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும்.

அதுவே நேர்மையான காணிவிடுவித்தலாக அமையும். மாறாக இராணுவத்தால் சூழப்பட்டுள்ள இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் கிழக்கு வாசலை விடுவித்துவிட்டு ஏனைய முகாங்களை தொடர்ந்து வைத்திருப்பதன் ஊடாக அங்கு எந்த மாற்றமும் ஏற்படாது. ஒரு ஆலயம் இராணுவ சூழலற்ற வழிபாட்டிடமாகவும் ஒரு குளம் இராணுவமற்ற இயற்கையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுகோளும் வழிபாடும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila