புங்குடுதீவு மாணவி
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்
மாணவிக்கு நீதி கோரியும் பருத்தித்துறை நகரசபை ஏற்பாட்டில் அமைதிப்பேரணியும்,
ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்று வருகின்றது.
பருத்தித்துறை காந்தி
சிலையடியிலிருந்து ஆரம்பமாகும் அமைதிப் பேரணி பருத்தித்துறை கோட்டுவாசல் அம்மன்
கோயிலை சென்றடைந்து அங்கு மாணவியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் அஞ்சலி
நிகழ்வும் இடம்பெறுகின்றது.
இதேவேளை. குறித்த பேரணியையும்
மௌனப்பிரார்த்தனையையும் தடை செய்யுமாறும் இதனால் அசம்பாவிதங்கள் இடம்பெறக் கூடிய
வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவித்து பருத்தித்துறை பொலிஸாரால் தாக்கல்
செய்யப்பட்ட அறிக்கையினையும் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தால்
நிராகரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஜனநாயக ரீதியான போராட்டங்களை நடாத்துவது
மக்களின் ஜனநாயக உரிமை என்றும் அதனை நீதிமன்றம் ஒருபோதும் தடை செய்யாது என்றும்
நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இத்தகைய போராட்டங்கள் இடம்பெறும் போது
பொதுச் சொத்துக்களையும் பொது மக்களையும் பாதுகாப்பதே பொலிஸாரின் கடமை .
அதில் ஏதாவது தவறுகள் இடம்பெற்றால்
சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரங்கள் இருக்கின்றது எனவும்
சுட்டிக்காட்டிய நீதிவான் பொலிஸ் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் போது பொதுமக்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறும்
பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாணவியின் கொலைக்கு நீதி கோரி இடம்பெறும்
அமைதிப் பேரணியுடன் கடையடைப்பு போராட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் இவ்வாறான பாலியல் வன்முறை இனிமேல்
எங்கும் இடம்பெறாத வண்ணமும் அதனை தடுக்கும் முகமாக மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க
வேண்டும் என்று தெரிவித்து பருத்தித்துறை மாவட்ட நீதிபதி,இலங்கை பொலிஸ்மா
அதிபர்,பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கும் மகஜர் ஒன்றும்
கையளிக்கப்பட்டதாக பருத்தித்துறை நகர சபைத் தலைவர் சபாரவீந்திரன்
தெரிவித்தார்.
|
வித்தியாவின் கொலைக்கு நீதிகோரி பருத்தித்துறையில் அமைதிப்பேரணி
Add Comments