யாழ்.பல்கலைக்கழகத்தால் மதுபாவனையை ஒழிக்க முடியும்


இலங்கையில் மதுபான விற்பனையில் வட மாகாணமே முதல் இடம் என்று கூறப்படும் அளவில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

இதேவேளை மது விற்பனைக்கு அப்பால் போதைவஸ்து விற்பனையும் வடக்கில் அதிகரித்துள்ளது என்ற செய்தியையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் மதுபான விற்பனை நிலையங்களை வரையறுக்கவேண்டும் என வடக்கு மாகாணசபை நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு மாகாண சபை விடுத்த கோரிக்கையில் நியாயங்கள் இருந்தாலும் குடிப்பவர்களைத் திருத்துதல், மதுபாவனை உடல்நலத்துக்குக் கேடு என்ற உண்மையை எடுத்துரைத்தல், பஞ்சமா பாதகங்களில் மது அருந்துதலும் ஒன்று என்பதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை வழிப்படுத்தல் என்றவாறான நடவடிக்கைளையும் முன்னெடுக்க வேண்டும்.

மதுபானசாலை திறந்திருக்கிறது. அங்கு சாராயம் விற்பனைக்கு இருக்கிறது என்று மது அருந்தச் செல்பவர்கள் இருந்தால் மட்டுமே வடக்கு மாகாண சபையின் கோரிக்கை பொருத்தமானதாக இருக்கும்.

உதாரணத்திற்கு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி நிறைய மதுபான விற்பனை நிலையங்கள் உள்ளன. பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் கற்கின்ற பல்கலைக்கழக சூழலில் மதுபான நிலையங்கள் அமைக்கப்படும் போது, அதை அடித்துடைக்க வேண்டியவர்கள் யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மது பாவனையில் நாட்டம் கொண்டால், பாடசாலை மாணவர்கள் நிச்சயம் மதுபாவனையில் நாட்டம் கொள்வர் என்று ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இவ்விடத்தில் பிரஸ்தாபித்திருந்தோம். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூகப் பிரஞ்னையுடன்  நடந்து கொள்ளவில்லை.

இதனால் இன்று பிரபல்யமான கல்லூரி மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் கூடியிருந்து மது அருந்துதலிலும் போதைப் பாவனையிலும் ஈடுபடுகின்றனர்.

பல்கலைக்கழக அண்ணாக்கள் புத்திசாலிகள்-அவர்கள் செய்வது சரியானது- மரியாதையானது -ஆளுமையானது-சமூக அங்கீகாரத்தைக் கொண்டது என்ற நினைப்பு நிச்சயம் பாடசாலை மாணவர்களிடம் உள்ளது.

இதனால் அண்ணாக்களை தம்பிகள் பின்பற்றுகின்றனர். இங்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்று நாம் விழித்துரைப்பதற்குள் ஒட்டுமொத்த மாணவர்களும் அடங்க மாட்டார்கள். மிகத் தங்கமான மாணவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.

அதேநேரம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்று நாம் கூறுவதற்குள் பட்டம் முடித்து வெளியேறியவர்களும் அடங்குவர். நாம் கூறிய குற்றச்சாட்டுக்கு இவர்களும் மிகப்பெரிய பங்களிப்புச் செய்தனர்.

ஆக, அன்புமிகு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களே! நீங்கள் நினைத்தால் வடபுலத்தில் மதுப்பாவனையை ஒழிக்க முடியும். வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யுங்கள். பாடசாலைகள் தோறும் சென்று உங்கள் மாணவச் சகோதரர்களுக்கு புத்திமதி கூறுங்கள்.

இவற்றை எல்லாம் செய்வதோடு மது விற்பனை நிலையங்களுக்குச் சென்று அவர்களுக்கு அறத்தை -நம் இனம் சந்தித்த அழிவை எடுத்துரையுங்கள்.  எங்கள் தமிழ்ச் சமூகத்தைத் திருத்துவோம்.

இதைவிடுத்து மதுபான விற்பனை நிலையங்களை குறையுங்கள் என்றால் மறுபுறத்தில் கசிப்பு உற்பத்தி வேகம் எடுக்கும். எனவே எங்களை நாங்கள் திருத்துவதே ஒரேவழி. எங்கே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் இணைந்து வடபுலத்தில் மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்து மதுபாவனையை அடிஒட்டக் குறைப்போம். இதை எங்கள் பல்கலைக்கழக சாதனையாக நாடு அறியச் செய்து காட்டுவோம்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila