(புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் - காத்தான்குடி)
தனது கைகள் கறை படியாதவை என்றும். கடந்த 25 வருடங்களில் ஒரு சதத்தையேனும் தான் ஊழல் மோசடி செய்யவில்லை என்றும் மேடைக்கு மேடை கூறி வருகின்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடமிருந்து பெற்றுக் கொண்ட 25 இலட்சம் ரூபாவில் 23,30,000 ரூபாவுக்கு காணிகளைக் கொள்வனவு செய்தார்.
அக்காணிகளுக்காக எஸ்.எச். அப்துர் றஹீம் என்பவரின் பெயரில் 3 கோடியே 06 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவுக்கு 03.04.2012ம் திகதி மற்றும் 26.04.2012ம் திகதிகளில் இரண்டு காசோலைகள் மூலம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக பணம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள காத்தான்குடிப் பிரமுகர்களும், வர்த்தகர்களும் சுனாமி நிவாரண நிதியாகச் சேகரித்து சம்மேளனத்திற்கு அனுப்பியிருந்த இந்தப் பணத்தில் வாங்கப்பட்ட காணிகளுக்காக, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேற்படி 3,06,72,000 ரூபாவை எஸ்.எச்.அப்துர் றஹீம் என்பவரின் பெயரிலான இரண்டு காசோலைகள் மூலம் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வும், எஸ்.எச் அப்துர் றஹீம் என்பவரும் பணம் பெறவில்லை என்றால், எதிர்வரும் 31ம் திகதி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நடைபெறவுள்ள ஜும்ஆத் தொழுகையின் பின்னர் இதனை மறுத்து என்னுடன் பகிரங்கமாகச் சத்தியம் செய்வதற்கு அவாகள்; முன்வருவார்களா? என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி சவால் விடுத்துள்ளார்.
காத்தான்குடி முதலாம் குறிச்சி ஊர் வீதியில் நேற்று (27.07.2015) திங்கட்கிழமை இரவு ளுடுஆஊ 10 Nகுபுபு கூட்டணியின் 4வது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், அக்கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடும் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானை ஆதரித்து மௌலவி எம். உவைஸ் தலைமையில் நடைபெற்றது.
இப்பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி மேற்கண்டவாறு சவால் விடுத்து பகிரங்கச் சத்தியம் செய்ய வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், சம்பந்தப்பட்ட நபருக்கும் அழைப்பு விடுத்தார்.
இதன்போது, சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடிழந்த மக்களுக்காக வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டியுள்ள அவசியத்தை வலியுறுத்தி நிதியுதவி வழங்குமாறு கொழும்பில் இயங்கிய 'சுனாமியால் பாதிப்புக்குள்ளான காத்தான்குடி மக்களின் புனர் வாழ்வுக்கான சங்கம்' எனும் அமைப்பின் நிர்வாகத்தினருக்கு சம்மேளனத்தினால் 23.03.2005ல் எழுதப்பட்ட கடிதம், அதற்கு அச்சங்கத்தினர் அவசரமாக 24.03.2005ல் அனுப்பி வைத்த பதில் கடிதம், அச்சங்கத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட 25,00,000 ரூபாவுக்காக சம்மேளனத்தினால் 04.04.2005ம் திகதியிட்டு வழங்கப்பட்ட 2339ம் இலக்க பற்றுச்சீட்டு, இத்தொகையில் 23,30,000 ரூபாவுக்கு வாங்கப்பட்ட 11 காணிகள் பற்றிய விபரத்துடன், மேலும் காணிகள் வாங்குவதற்கு 25,00,000 ரூபா அளவில் பணம் தேவைப்படுவதாகக் கோரி அப்போது ஸ்ரீலங்கா விமான நிலைய சேவைகள் லிமிட்டெட்டின் தலைவராக இருந்த எம்எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சம்மேளனத்திற்கு கையளித்திருந்த (திகதியிடப்படாத) கடிதம் போன்ற ஆவணங்களையும் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி சமூகமளித்திருந்த ஆயிரக்கணக்கான மக்களின் முன்பாக எடுத்துக்காட்டி முழுவதுமாக வாசித்தும் காட்டினார்.