நடந்தது இனப்படுகொலை இல்லையாம் சுமந்திரன் பதில்!!!

எம்.ஏ.சுமந்திரன்திரு.சுமந்திரனின் இன்றய பேச்சு அதிர்ச்சியை அளித்தது.
இன்று சுவிஸ்  அமைதி அமைப்பினால் நடத்தப்பட்ட கலந்துரையாடலில்  திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர், மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க விவாதத்தில் கேள்விகளுக்கு சுமந்திரன், சுரேன், நிரன் ஆகியோர் பதிலளித்தனர்.
இதில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான, வடக்குமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான “இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ‘ குறித்தும் அது பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் விவாதிப்பார்களா என்பது பற்றிய கேள்வி திரு.லதன் எனும் தோழரால் கேட்கப்பட்டது.
திரு.சுமந்திரன் இதற்கு பதிலளிக்கும் பொழுது,
”…‘இனப்படுகொலை’ என்று பேசியதால் பல்வேறு விடயங்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறோம். இங்கு நடந்தது இனப்படுகொலை என்று முடிவு செய்வது அரசியல் அரங்கு அல்ல, மாறாக அது நீதிவிசாரணையிலேயே முடிவு செய்யப்படவேண்டும். மனித உரிமை ஆணையாளர் கூட அதை இனப்படுகொலை என்று ஏற்றுக்கொள்ளவில்லை.
நான் ஒரு வழக்கறிஞர் என்பதால் எனக்கும் இதை இனப்படுகொலை என்று நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதாக தோன்றவில்லை. இதை நாம் இனப்படுகொலை என்று சொல்லமுடியாது. இதை கவனத்தில் எடுக்காமல் இனப்படுகொலை என்று பேசுவதால் நாம் இன்று பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்… ”
இவரது பதில் அங்கிருந்த தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நான் பேசிய பொழுதில் “..
தமிழகத்தில் இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் இது பல்வேறு அரங்குகளில் இனப்படுகொலையா இல்லையா என்பதை விவாதித்தே இது இனப்படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் எனது இனப்படுகொலை பற்றிய விசாரணை கோரிக்கை என்பது குற்றச்சாட்டு வகைப்பட்டது.
மக்கள் சமூகம் இக்குற்றச்சாட்டை முன்வைக்கிறது, இதை குறித்து விசாரணை செய்வதை எது தடுக்கிறது. இது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படவேண்டும். மேலும் இலங்கையில் இருக்கும் (உங்களைப் போன்ற) வழக்கறிஞர்களைக் காட்டிலும் ஆழமான சட்ட அறிவு கொண்டவர்கள் தமிழகத்தில் இதை இனப்படுகொலை என உறுதி கூறுகிறார்கள்..” என்ற பொழுதில் அவரிடத்தில் பதில் இல்லை.
திரு. லதன் தொடர்ந்து பேசும் பொழுதில் ’ வடக்கு மாகாண முதல்வர்.
விக்கினேசுவரன் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்தவர், அவருக்கு புரிந்து தான் இனபடுகொலை என்று தீர்மானம் கொண்டுவந்தார்’ என்று பதிலளித்தார்.
தமிழர்களுக்குள் இருந்து ‘இனப்படுகொலை மறுப்பும், பொது வாக்கெடுப்பு மறுப்பு குரலும்’ வருகிறது என்பது மிக மோசமான அரசியல். ஒரு சிங்கள அதிகாரியின் குரலையே என்னால் திரு.சுமந்திரனிடம் காண முடிந்தது. இது மட்டுமல்லாமல் ‘பொதுவாக்கெடுப்பினைப் பற்றிய கேள்வியை எழுப்பிய பொழுதில், எங்கள் இருவருக்குமான விவாதம் அவரது விடுதலை எதிர்ப்பு நிலைப்பாட்டினை உணரமுடிகிறது.’… இது பற்றி அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
இனப்படுகொலை மறுப்பு அரசியல் மிக மோசமான அரசியல். இதை தமிழர்கள் வீழ்த்துவது அவசியம். ஐ.சி.ஜி எனும் தொண்டு நிறுவனமாக அறியப்படும், ‘கருத்துருவாக்க அடியாட்கள்’ முன்வைத்த அரசியலே ‘இனப்படுகொலை மறுப்பு, பொதுவாக்கெடுப்பு மறுப்பு’ அரசியல். மேற்குலக அரசின் நிலைப்பாட்டினை தமிழர்களிடத்தில் திணிக்கும் பணியை செய்யும் திரிபு சக்திகளை கண்டறிந்து எதிர்கொள்வது அவசியம்.
திரு.சுமந்திரனுக்கு எனது வலிமையான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன்.
 
மே 17 இயக்கம் திருமுருகன்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila