கனடிய தேர்தலில் நெருங்கிவந்த தமிழர்களின் இரு ஆசனம் மறைந்த மர்மம்!

நடந்து முடிந்த கனடிய தேர்தலில் வரலாற்று வெற்றிப் பதிவினை செய்திருக்கிறது லிபரல் கட்சி. இவ் வெற்றியானது கடந்த ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் ஸ்திரமற்ற நிலையில் அக் கட்சி மீது மக்களுக்கிருந்த சலிப்புத் தன்மையே லிபரல் கட்சியின் அபார வெற்றிக்கு அதிமுக்கிய காரணம் ஆகும்.

இம்முறை தேர்தலில் வழமைக்கு மாறாக ஆறு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர்.

இவர்களுள் ஒரு சிலரையேனும் பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்ற இலக்கில் கனடிய ஈழத் தமிழர்களிடம் ஒருமித்த கருத்து இல்லாமையும் குரோத மனப்பான்மையுமே தேர்தலில் ஈழத் தமிழர்களின் பின்னடைவாக பதிவாகியமைக்கு காரணம் என கூறலாம்..

கரி ஆனந்தசங்கரி தான் போட்டியிட்ட தொகுதியில் 29906 வாக்குகளைப் பெற்று லிபரல் கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ளதுடன் என்டி.பி. கட்சி சார்பாக போட்டியிட்ட சாந்திகுமார் 5164 வாக்குகளை மாத்திரமே பெற்று தோலிவியுற்றிருந்தார்.

இங்கு கரி சங்கரிக்கும் சாந்தி குமாருக்கும் இடையில் பலமான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கரி சங்கரி அபார வெற்றி பெற்றுள்ளமை ஆச்சரியத்துக்குரியதாயினும், இத் தொகுதி லிபரல் கட்சியின் கோட்டையாகவே இன்றுவரை கருதப்படுகிறது.

அடுத்து ராதிகா போட்டியிட்ட தொகுதியில் என்.டி.பி கட்சி சார்பில் 8647 வாக்குகளைப் பெற்றதுடன் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்ட Shaun chen 18903 வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார்.

தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த தொகுதியில் 2ம் நிலையைக் கூட பெறமுடியாத ராதிகா 3ம் நிலைக்கு பின்தள்ளப்பட்டமை அவரது அரசியற் செயற்பாடுகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

காரணம் இவர் சார்ந்த தொகுதியில் ராதிகாவின் தோல்விக்கு அவரது செயற்பாடுகள் போதுமானதாக இல்லையா அல்லது Scarborough Rouge North தொகுதிகள் பிரிக்கப்பட்டமையை காரணம் என எண்ணினாலும் ராதிகா தன்னுடைய எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் சற்றுக் கவனக்குறைவாக இருந்தமையே அவரது தோல்விக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிட்ட ரொஷான் அத்தொகுதியில் 10376 வாக்குகளைப் பெற்று தோல்வியடைய ஜோன் மக்குலம் 23843 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

அதேபோன்றே செந்தி செல்லையா போட்டியிட்ட தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற செந்தியோ 4595 வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.
அடுத்து பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட மற்றைய பெண் வேட்பாளர்களரான கார்த்திகா 684 வாக்குகளை மாத்திரமே பெற்று அவரும் தோல்வியைடைந்துள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் என்.டி.பி கட்சியைச் சேர்ந்த 3 தமிழ் வேட்பாளர்களும் கன்சர்வேட்டிவ் மற்றும் பசுமைக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவரும் தோல்வியுற்று லிபரல் கட்சி வேட்பாளர் கரி சங்கரி மட்டும் வெற்றி பெற்றமை ஈழத்தமிழருக்கு பெருமை எனினும், இன்றைய நிலையில் கனடிய ஈழத்தமிழருக்கு வரலாற்றுப் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றது.

சென்ற பாராளுமன்ற தேர்தலில் ஒருவரை அனுப்பிய ஈழத்தமிழர்கள் இம்முறை இரண்டு அல்லது 3பேரை பாராளுமன்றம் அனுப்பியிருக்க வேன்டும். சனத்தொகைக்கு ஏற்றாற்போல பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் பெறத் தவறிவிட்டனர். ஏனெனில் ஒரு கொள்கைக்காக பல்வேறு திசைகளில் ஓடுகின்ற குணமே ஈழத்தமிழருடைய பொதுவான கொள்கை.

அதனை சூழ்நிலைக்கேற்றாற்போல மாற்றியமைக்கும் திறனோ ஆற்றலோ இன்றுவரை தமிழரிடம் வளராமல் உள்ளமை மிகவும் வேதனையான விடயம். புலம்பெயர்ந்த நாடுகளில் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறும் ஈழத்தமிழரால் அரசியலுக்குள் உள்நுழைய முடியாமல் இருப்பது ஆரோக்கியமான போட்டித்தன்மை இன்மையும் காழ்ப்புணர்ச்சியுமே முக்கிய காரணங்களாகும்.

இம்முறை நடந்த பாராளுமன்ற தேர்தலில் குறைந்தது 3 வேட்பாளர்களையாவது பாராளுமன்றம் அனுப்பியிருக்கலாம். அந்தக் கடமையில் கனடிய ஈழத்தமிழர்கள் தவறவிட்டுள்ளார்கள்.

இதற்கு காரணம் யார்? ஆரோக்கியமான விமர்சனம் என்றால் அதை வெள்ளையரிடத்தில் தான் கற்றுக்கொள்ளவேண்டும். அநாகரிகமான விமர்சனங்களே கனடாவில் இரண்டு பாராளுமன்ற தமிழர்களின் பிரநிதித்துவத்தை இழந்தது.

என்.டி.பி. மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் ஆகக்குறைந்தது இருவரை பாராளுமன்றம் அனுப்பியிருக்க முடியும். இது இவ்விடத்தில் கூறும் கூற்றல்ல. கனடாவின் ஒரு கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டதொன்று.

ஒருவரை பழிவாங்குவதும் பழிதீர்ப்பதும் கனடாவின் தமிழர் அரசியலில் கட்சிதமாக அரங்கேறியுள்ளது.

எனவே வரலாறுகள் ஒரு இனத்தின் விடுதலையை அந்த இனம் குழுக்கள் குழுக்களாக உள்ள நாடுகளில் ஏற்படுத்தியமை வரலாற்றுப் பதிவுகளாகும்.

இதற்கு யூத இனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் தேசம் விட்டு தேசம் சென்றாலும் தேசத்தை இழந்தாலும் அவர்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் மிகவும் கச்சிதமாகவும் தூரநோக்கோடும் தமது இனத்தின் எதிர்காலம் பற்றி பிளவுகள் இன்றி சிந்தித்தார்கள் செயற்பட்டார்கள்.

இந்த இடத்தில் ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக நானும் நீங்களும் ஒருவருக்கொருவர் வினா எழுப்பிப் பார்த்தால் அதற்குரிய முழுமையான பதில்கள் தென்படும்.

இப்படியாக மிகவும் ஒரு இக்கட்டான சூழலில் ஈழத்தமிழர் அரசியலில் தாயகத்தில் பயணிக்கின்றபோது அதற்கு உரமூட்டி உயிர்கொடுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழருக்கு கிடைத்தும் அதனை கைநழுவ விடுவது வரலாற்று ரீதியில் நாம் செய்த தவறாக மாறிவிடாதா?


காரணம்,கனடிய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த பலமிக்க மனிதர்கள் இருந்தும் அரசியல் ரீதியில் தூரநோக்கற்ர சிந்தனையும் ஒருவரையொருவர் தயவு தாட்சணியங்களின்றி அவமதித்ததும் இம்முறை கனடிய தேர்தலில் ஈழத் தமிழர்கள் மதிப்புடன் இருந்தும் மதிப்புமிக்க பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தமை கொழும்பு அரசியலுக்கு உரமூட்டியதாகவே தென்படுகிறது.

காரணம் மேற்குறிப்பிட்ட 3 பிரதான கட்சிகளிலும் ஒருவருக்கும் பதிலாக 3 தமிழர்கள் வெற்றிபெற்றவர்களாக இருந்திருந்தால் இராஜதந்திர ரீதியில்கூட ஈழத்தமிழருக்கு பாரிய பலம் சேர்ந்திருக்கும்.

ஒருவாறாக எல்லாமே முடிந்துவிட்டது இனியாவது ஒற்றுமையாக சிந்தித்து செயற்படுமா புலம்பெயர் அரசியல்.... அப்படி இல்லையாயின் கனடிய தேர்தலில் ஒளிமயமான இரண்டு ஆசனங்கள் கடைசிநேரத்தில் கானல் நீரான கதையை மாற்றி எழுத முற்படுமா ஈழத்தமிழினம்.


கே. ராக்கி
rhakkey@gmail.com
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila