உண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர் யார? தினக்குரல்

வடமாகாண முதலமைச்சரும் இலங்கை
தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற அதே கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கூறியிருப்பது தமிழர் அரசியல் கழத்தில் புதிய போர்முனை ஒன்றை திறந்து விட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென சுமந்திரன் கூறியுள்ள நிலையில் சுமந்திரனையே கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கருத்துக்களும் கண்டனக்குரல்களும் பெருவாரியாக வெளிவரத்தொடங்கியுள்ளன. வடமாகாண முதலமைச்சரை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தும் சுமந்திரன் அதற்கு முன்வைக்கும் காரணங்கள் குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா? அவ்வாறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்குமளவிற்கு சுமந்திரன் எம்பி நியாயமானவரா? என்பது தொடர்பில் கேள்விக்கணைகள் தொடுக்கப்படுகின்றன.

இலங்கை தமிழரசு கட்சிக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாகவிருந்த முரண்பாடுகள் அண்மையில் அவுஸ்திரேலியா சென்ற சுமந்திரன் அங்குள்ள வானொலி ஒன்றிற்கு வழங்கிய பேட்டி மூலம் தீப்பிழம்பாகியுள்ளது. 

முதலமைச்சர்மீது சுமந்திரன் எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் இவைதான்

1. முதலமைச்சர் விக்கினேஸ்வரனை இந்த பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கியமான ஒருவன். அவருக்கு வடமாகாணசபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சி கொடுத்திருக்கின்றது. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில்போது கட்சிக்கு சார்பாக அவர் செயற்படாமையே எமக்கும் அவருக்கும் இடைவெளி உருவாகக்காரணம்.

2. தேர்தலுக்காக நிதிதேவை கனடா சென்ற அதனைப் பெற்றுவாருங்கள் என்று அவரிடம் கேட்டிருந்தோம். ஏனெனில் வடமாகாணசபைத் தேர்தலின்போது நானும் சம்பந்தனும் கனடா சென்று நிதி உதவிகளைப்பெற்று வந்தோம். இந்த தடவை நாங்கள் போகமுடியாது நீங்கள் அதனை செய்யுங்கள் என்று அவரிடம் கேட்டோம். அதற்கு அவர் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாது முழங்கால் வலி என்று தெரிவித்தார்.

3.ஆனால் அதே காலகட்டத்தில் அவர் அமெரிக்கா சென்றார் அப்போது அமெரிக்கா செல்கிறீர்கள் ஐயா ஒரு மணிநேரம் கனடாவிற்கு சென்று வாருங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் தனக்கு நேரமில்லை என்று சொல்லி தட்டிக்கழித்துவிட்டார். அதன் பின்னர்தான் தெரிந்தது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட மனமில்லாமல் கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தார். நடுநிலையாக இருக்கப்போகின்றேன்,ஊமையாக இருக்கப்போகின்றேன் என்றார். எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என அடையாளம் காட்டுகின்றபோது தெளிவாக மாற்று கட்சியை சுட்டிக்காட்டி அறிக்கை விட்டிருந்தார். எந்தகட்சியும் தனது உறுப்பினர் இவ்வாறு செய்வதற்கு அனுமதிக்காது. முதலமைச்சராக இருக்கலாம் இளைப்பாறிய நீதிபதியாக இருக்கலாம் இந்த விடயத்தில் கட்சியிலிருந்து நீக்குமாறு தனிப்பட்ட முறையில்நான் கேட்டிருக்கின்றேன்.

4. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எங்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் இருவர் மக்களை நடுநிலை வகிக்கச்சொன்னார்கள்.கட்சியின் மகளீரணிச்செயலாளரும் இளைஞரணிச் செயலாளரும் அப்படிச் செய்தமைக்காக அவர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தோம். எமது கட்சி போட்டியிடாத அந்த தேர்தலில் வேறொருவருக்கு வாக்களிக்குமாறு கட்சி எடுத்த தீர்மானத்திற்குஅவர்கள் நடுநிலை வகிக்கச்சொன்னதற்காக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அப்படியிருக்கும்போது எமது கட்சி போட்டியிட்ட பிரதானமான இந்தத் தேர்தலில் இவர் இந்தமாதிரிச் செயற்பட்டமை கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் கூட ஒரு நீதியில்லாத செயற்பாடு என்பது எனது நிலைப்பாடு. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுத்துக்கொண்டு பாரபட்சமாக இவருக்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கட்சி தங்களுடைய உறுப்பினர்களுக்கு செய்கின்ற மரியாதைக்குறைவு என்பது என் கருத்து. இதனை நான் கட்சியிடம் சொல்லியிருக்கின்றேன். ஆனால் கட்சி இதுவரை அதனை செய்யவில்லை. விரைவில் அதனை செய்தே ஆகவேண்டும்.


சுமந்திரனின் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் நியாயமானவையா?

சுமந்திரனின் இக்குற்றச் சாட்டுக்கள் நியாயமானவையா? முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தப் பொறுப்புக்கு அழைத்து வந்தவர்களில் நானும் முக்கிய ஒருவன் என்று சுமந்திரன் கூறுவது தவறு. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கருத்து பலம் பெற்ற நிலையிலும் அதற்கு பொருத்தமான ஒருவர் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளிடம் இல்லாத நிலையிலுமே விக்னேஸ்வரனை தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதிலும் இவ்விடயத்தை விக்னேஸ்வரனிடம் கொண்டு சென்ற போது அவர் கூறிய நிபந்தனை; ‘எனக்கு அரசியலுக்கு வர விருப்பமில்லை. அவ்வாறு வந்துதான் ஆக வேண்டுமென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் ஒன்றாக வந்து கேட்டால்தான் வருவேன்‘ இதனையடுத்து பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்த அழைப்பை ஏற்றே விக்னேஸ்வரன் வட மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நிற்க இணங்கினார். எனவே விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியதாக எவரும் தனித்து உரிமை கோரமுடியாது.

அத்துடன் விக்னேஸ்வரன் பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் பொதுவானவர். தசது கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டுமென் தற்காகவே தமிழரசுக் கட்சி தன்னுடன் விக்னேஸ்வரனை இணைத்தது. அடுத்ததாக நிதி உதவி பெற்றுத்தரவில்லையென்ற குற்றச்சாட்டு. புலம்பெயர் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயருக்கே நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான நிலையில் தமிழரசுக் கட்சி சார்பில் சென்று நிதிஉதவியைப் பெற்று அதனை தமது கட்சிக்கு மட்டும் பயன்படுத்த முதலமைச்சரின் மனம் ஒத்துழைத்திருக்காது.

ஏற்கனவே பெறப்பட்ட பணங்களுக்கு என்ன நடந்தது என்பது முதலமைச்சருக்கு தெரியாதிருந்திருக்கும். அதனால் கூட அவர் செல்ல மறுத்திருக்கலாம். அதுமட்டுமன்றி நிதி உதவி கோரி தான் சென்றால் தன்னை நம்பி புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு உதவி செய்வார்கள். ஆனால் அந்த நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படுமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்நிதி உதவுமா அல்லது தமிழரசுக் கட்சியின் நலன்களுக்கு மட்டும் உதவுமா என்ற சந்தேகம் முதலமைச்சருக்கு இருந்திருக்கலாம்.

ஏனெனில் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியிலேயே அனைத்து விடயங்களையும் முன்னெடுக்கிறார். கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டதான குற்றச்சாட்டு. முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் தமிழரசுக் கட்சிக்கு சார்பாக மட்டும் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்யுமாறு கட்சித் தலைமையால் கோரப்பட்டது. அதனால்தான் அவர் உடன்படவில்லையென முதலமைச்சரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பங்காளிக் கட்சிகளின் ஆதரவு மூலம் முதலமைச்சரான நான் எவ்வாறு இத்தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காது தமிழரசுக் கட்சிக்கு மட்டும் வாக்களிக்கக் கோருவது? இதுநான் பங்காளிக் கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என முதலமைச்சர் நினைத்திருக்கலாம். அத்துடன் அவர் இளைஞர்களுக்கும், படித்தவர்களுக்கும் மக்கள் சேவை செய்யக் கூடியவர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரியதில் என்ன தவறு? தமிழ் மக்களின் நன்மைக்காகத்தானே கேட்கிறார்.

இந்தத் தகுதிகள் தமது கட்சியில் இல்லையென நினைத்து முதலமைச்சர் மாற்றுக் கட்சியை அடையாளம் காட்டிவிட்டாரென சுமந்திரன் தொப்பியைப் போட்டுக் கொள்வதற்கு முதலமைச்சர் எப்படி பொறுப்பாகமுடியும்? இதேவேளை முதலமைச்சர் இந்த அறிக்கை தொடர்பாக அப்போது கருத்து வெளியிட்ட சுமந்திரன், மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தாம் அனைவருக்கும் பொதுவானவர் எனவும் தாம் தமிழரசுக் கட்சியை சார்ந்தவர் என்றபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளமையினால் தனியே எந்தவொரு வேட்பாளருக்கும் இயங்க முடியாத நிலையில் தாம் அனைவருக்கும் முதலமைச்சர் என்ற வகையில் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது அவருடைய நிலைப்பாடு. இதற்கு அவரே பொறுப்பானவர். அவரின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கின்றோம் அவரின் இந்த நிலைப்பாடு மற்றைய கட்சிகளுக்கான வெற்றிவாய்ப்பை அதிகரிக்கின்றதென்றோ கூட்டமைப்பின் வெற்றியை அந்த நிலைப்பாடு பாதிக்கும் என்றோ நாங்கள் கருத முடியாது. அவரின் நிலைப்பாடு கூட்டமைப்பின் வெற்றியை பாதிக்காது. தமிழ் மக்கள் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திற்கே வாக்களிப்பார்களே தவிர தனிநபர்களுக்கு வாக்களிப்பது கிடையாது. முதலமைச்சரின் நிலைப்பாட்டை வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்த முடியும்.

அதற்காக முதலமைச்சரின் நிலைப்பாடு பிழை என்றோ முதலமைச்சர் பிழையானவர் என்றே அர்த்தம் கொள்ள முடியாது. அத்துடன் அவர் கட்சியை மீறி நடக்கவும் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானவர் என்பதால் பிரசாரமேடைகளில் ஏறவில்லை. அதேபோன்று விக்னேஸ்வரனும் எல்லோருக்கும் பொதுவானவர். இதில் பிழை இல்லை. என்று கூறியதும் அது ஊடகங்களில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மகளிர் அணிச் செயலருக்கும் இளைஞர் அணிச் செயலருக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துவிட்டு முதலமைச்சருக்கு மட்டும் எடுக்காமல் இருக்க முடியாதென சுமந்திரன் எப்படி வாதிடமுடியும்? மேற்குறிப்பிட்ட இரு செயல்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையில் நியாயம் இருக்கின்றதா இல்லையா என்பதை யாரிடம் கேட்பது? இரு தவறுகளை செய்து விட்டோம் என்பதற்காக மூன்றாவது தவறையும் செய்ய வேண்டும் என்பது போன்றே சுமந்திரனின் வாதம் உள்ளது.

ஏனெனில் தமிழரசுக் கட்சியில் சர்வாதிகாரம் தானே உள்ளது. அடுத்ததாக கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன். அதாவது விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கவேண்டும். அவரிடம் விளக்கம் கேட்க வேண்டுமென நான் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கின்றேன். கட்சி அதைச் செய்தே ஆகவேண்டும் என்றும் சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவோ வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்திருக்கின்றேன். முதலமைச்சரை நீக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சி எந்தவித தீர்மானத்தையும் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான கருத்து வந்தால் அது தொடர்பில் கட்சி ஆராயும். அவ்வாறான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் நாம் சிந்திக்கவே இல்லை. சுமந்திரனின் இக்கருத்து தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்கிறார்.

அப்படியானால் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியது யாரிடம்? தமிழரசுக் கட்சியின் தலைவரே விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்ற விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகக் கூறுகின்றார். ஆனால் சுமந்திரனோ கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியதாகக் கூறுகின்றார். அப்படியானால் சுமந்திரனின் கட்சித் தலைமை யார்? இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனும் வடக்கு முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

அவ்வாறு எவரேனும் கூறியிருந்தால் அதுதவறு. கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் தொடர்பான சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அது தொடர்பில் நாம் இன்னும் அவருடன் பேசவில்லை. ஆனால் பேச இருக்கின்றோம் என்கிறார். பொதுத் தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களாகின்ற நிலையிலும் அது தொடர்பில் இன்றுவரை தமிழரசுக் கட்சியால் ஏன் விக்னேஸ்வரனுடன் பேசமுடியவில்லை? நேரமின்மையா? நியாயமின்மையா? தயக்கமா என்பதை சம்பந்தன்தான் வெளியிட வேண்டும். 

இதேவேளை விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கக்கோரும் அதிகாரம் சுமந்திரனுக்கு கிடையாது. விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து கேட்கலாமே தவிர சுமந்திரனுக்கு உரிமை கிடையாதென பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

அத்துடன் சுமந்திரன் இவ்வாறு கூறியமை தொடர்பில் சுமந்திரன் மீது தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். இக்கருத்தையே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியும் முன்வைத்துள்ளார். விக்னேஸ்வரன் தொடர்பான சுமந்திரனின் கருத்தை கவனத்தில் எடுத்தால் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென்ற சுமந்திரனின் வலியுறுத்தல் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் பொது அமைப்புக்களையும் சினம் கொள்ள வைத்துள்ளது. தான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் என்று கூறிக் கொண்டு சுமந்திரன் தான்தோன்றித்தனமாக வெளியிடும் கருத்துக்களால் ஏற்கனவே கொதித்துப் போயுள்ள மக்களை விக்னேஸ்வரன் மீதான சுமந்திரனின் குற்றச்சாட்டுக்கள் மேலும் சீண்டியுள்ளன.

எனவே தற்போது வெளிநாடுகளில் சுமந்திரனுக்கு சுதந்திரமாக நடமாடமுடியதா நிலை ஏற்பட்டது போல் இங்கும் வட, கிழக்கில் ஏற்படலாமென அவரின் கட்சிக்காரர்களே கூறுகின்றனர். வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆப்பு வைக்க வேண்டுமென துடியாய் துடிக்கும் சுமந்திரன்தான் தற்போது அதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் உள்ளார்.

இதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தாய் கட்சிக்கே முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவதால், அதில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களை அவர் மதிப்பதால் சுமந்திரனின் கருத்துத் தொடர்பில் பங்காளிக் கட்சித் தலைவர்கள் வாளாதிருக்கக் கூடாது என்பதுடன் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அதேவேளை விக்னேஸ்வரன் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிவிட்டார் எனக் கொதிக்கும் சுமந்திரன் தனது தமிழரசுக்கட்சியின் தலைமையை ஒரு பொருட்டாகவே கருதாது தமிழரசுக் கட்சி சார்பாக தான்தோன்றித்தனமாகவும் விஷமத்தனமாகவும் தமிழினத்தை கேவலப்படுத்தும் வகையிலும், தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சித் தலைமை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதுடன் அவரின் இவ்வாறான கட்சிக்கும்,

கட்சிக் கொள்கைக்கும் கட்டுப்படாத செயல்கள் முடிவுக்கு கொண்டுவரப்படுவது அவசியம். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகள் வெளியேறி புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். எனவே தமிழரசுக் கட்சி தலைமை சுமந்திரனா, தமிழ் மக்களின் பலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பா என்பதை தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் தமிழரசுக் கட்சி தனிமைப்படுத்தப்பட்டுவிடும்.

தொடர்புடைய செய்தி
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila