படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமோ? பணம் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமோ? என்ற பாடல் கவிஞர் கண்ணதாசனுடையது.
படித்தவர்கள் என்பதற்காக அவர்களுடைய கருத்துக்கள் எல்லாம் சபை ஏறிவிடாது. அதேநேரம் பணம் படைத்தவர் கருத்தாயின் அதனை ஒருபோதும் சபை மீறாது. இந்தக் கருத்தில் கவிஞர் கண்ணதாசன் கூறியவை கவனத்தில் கொள்ளத்தக்கது.
இது போலவே அதிகாரம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. அதிகாரத்தில் இருக்கும் போது செய்ய வேண்டிய நல்ல பணிகளைச் செய்தாக வேண்டும். அதிகாரத்தை இழந்த பின்பு பணி செய்ய நினைப்பது மகா மடமைத்தனம்.
எனினும் நடைமுறையில் அதிகாரம் படைத்தவர்கள்; அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய அதிகார வலுவைப் பயன்படுத்தி நல்ல பணிகளை செய்வதைத் தவிர்த்து தீயனவற்றையே செய்து முடிக்கின்றனர்.
இந்த யதார்த்த நிலையில்; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே என்று கூறியுள்ளார். இந்த நாட்டில் இரண்டு தடவைகள் ஜனாதிபதிப் பதவியை அலங்கரித்த அம்மையார், சமாதானத்துக்கான யுத்தம் என்று ஒரு புதுப்பதத்தை முன்வைத்து போரை முன்னெடுத்தவர் என்பது மறுக்க முடியாத உண்மை.
1995ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க அக்காலப் பகுதியில் தமிழர் தாயகத்தில் போர் தொடுத்தார். இதன்போதே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் இரா ணுவத்தின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டது.
ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையார் இருந்த போது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை அவர் முன்னெடுத்தார் என்ற உண்மையை கூறுகின்ற அதேவேளை பேரினவாத சக்திகளை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதேநேரம் பாதுகாப்புச் சார்ந்த அனைத்து விடயங்களையும் அவர் அனுருத்தரத்வத்தையிடம் கொடுத்துவிட, 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏகப்பட்ட தமிழ் இளைஞர்கள் காணாமல் போன துயரச் சம்பவம் நடந்தேறியது.
அதேவேளை 2009ஆம் ஆண்டு வன்னி இறு திப் போரின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெற்றி விழா கொண்டாடிய போது, நான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. ஆகையால் நானே யுத்த வெற்றிக்குக் காரணம் என்று சந்திரிகா அம்மையார் கூறியிருந்தார்.
இப்போது ஆட்சி அதிகாரங்களை இழந்து கருத்துரைக்கும் அதிகாரம் மட்டுமே என்னிடம் உள்ளது என்ற நிலையில், யுத்தத்தில் வென்றாலும் சமாதானம் தோல்வியே என்று சந்திரிகா குமாரதுங்க கூறுவது யாருக்கான அறிவுரையாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
இருந்தும் போர்க்குற்றம் புரிந்த படையினர் மீது 2016ஆம் ஆண்டில் விசாரணை நடத்தப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறிய கருத்தை அதிகாரத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் ஏற்றுக் கொள்வார்களா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
எது எப்படியாயினும் அண்மையில் நடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரின் பின்னர், கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் வன்னிப் போரின் போது சுமத்தப்பட்ட போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீதோ படையினர் மீதோ எந்த விசாரணையும் நடத்தப்பட மாட்டாது என்று கூறியிருந்தார்.
அப்படியானால் படையினர் மீது விசாரணை நடத்தப்படும் என்று சந்திரிகா கூறுவது சாத்திரப்படிக்கானது என்றே கருதவேண்டும்.