ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் நடந்து வருகிறது. இதன்போது காணாமல் போன தமது பிள்ளைகள், குடும்பத் தலைவர்கள், சகோதரர்கள் தொடர்பில் உறவுகள் அழு கண்ணீருடன் சாட்சியமளிக்கும் சோகத்தைக் காணும் போது இதயம் கருகிப் போகிறது.
யுத்தம் முடிந்து விட்டது. நாட்டில் அமைதி நிலவுகிறது என்று கூறுகிறவர்கள் அழு கண்ணீருடன் தங்கள் பிள்ளைகளைத் தேடும் தாய்மாரின் அவலம் போக்க முன்வருவது கட்டாயமானது. எங்கள் தமிழ் அன்னையர்கள் விடுகின்ற கண்ணீர், அடைகின்ற துன்பம் பற்றி சிங்கள மக்கள் எந்தளவு தூரம் அறிந்துள்ளனர் என்பது தெரியவில்லை.
உண்மையில் காணாமல்போன தங்கள் உறவுகளைத் தேடி கண்ணீரும் கம்பலையுமாக அலை கின்றவர்களின் அவலத்தை ஒட்டுமொத்த சிங்கள மக்களும் அறிவார்களாக இருந்தால், சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்குச் செய்த அநியாயம் எவ்வளவு கொடூரமானது என்பதை உணர்ந்து கொள்வர்.
ஜனாதிபதி ஆணைக்குழு முன்சாட்சியமளிக்க பருத்தித்துறையில் தந்தையார் ஒருவர் வந்திருந்தார். தனது மகனும் மகனின் குடும்பத்தினரும் காணாமல் போனதன் துன்பத்தைச் சொல்ல வந்த அந்தத் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பரணகமவிடம் ஐயா! புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நான் விரைவில் இறந்து விடுவேன். என் இறப்புக்கு முன்பாக என் மகனையும் அவரின் குடும்பத்தையும் ஒரு தடவையேனும் நான் பார்ப்பதற்கு உதவி செய்யமாட்டீர்களா? என்று கெஞ்சிய வார்த்தை இந்த உலகத்தில் கல் மனதையும் கரைய வைக்கக் கூடியது.
ஆம், ஈழத் தமிழர்கள் என்பதால் இந்த நாட்டில் எங்கள் தந்தையரும் அன்னையரும் அழு கண்ணீ ரோடு தங்கள் காலத்தை முடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இப்பெரும் துன்பம் என்றுதான் முடிவுக்கு வருமோ என்ற ஏக்கம் தொடருகின்ற அதேநேரம், ஜனாதிபதி ஆணைக்குழுக்கு முன் அழு கண்ணீருடன் சாட்சியம் அளிக்கின்றவர்களின் துன்பத்தை தீர்ப்பதற்கு ஆணைக்குழு-அரசு நடவடிக்கை எடுக்குமா? என் பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
என் மகனை இராணுவம் பிடித்து வைத்திருந்ததை கண்டேன்; என் மகனை இராணுவத்திடம் நானே ஒப்படைத்தேன்; வீட்டுக்கு வந்த படையினர் என் மகனை இழுத்துச் சென்றனர் என்ற நீண்டதொரு துன்பப் பட்டியலின் சாட்சியத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த உலகில் மிகப்பெரிய படைக்கலம் அல்லல்பட்டு ஆற்றாது அழுகின்ற கண்ணீர் என்பது வள்ளுவரின் முடிவு.
ஆகையால் தமிழ் அன்னையர்களின் அழு கண்ணீரை ஆற்றுப்படுத்த வேண்டும். காணாமல் போன வர்களுக்கு நடந்தது என்ன? குற்றம் செய்தவர்கள் யார்? அவர்களுக்கான தண்டனை என்ன? என்ப வற்றுக்கான பதில் ஏதுமில்லாமல் போகுமாயின் அது மிகப்பெரும் கொடுமையாக இருக்கும் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழு உணர்ந்து கொள்வது அவசியம்.