இன்று 2016ஆம் ஆண்டின் முகிழ்ப்பு. நிர்வாக நடைமுறையில் ஆங்கில வருடப்பிறப்பே முதன்மை பெறுவதால், 2016ஆம் ஆண்டின் முகிழ்ப்பு என்பது புது வருடப்பிறப்பாக எவரும் கொள்ளக் கூடியது.
அந்த வகையில் 2016ஆம் ஆண்டில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தமிழ் மக்களுக்கு அளித்த உத்தரவாதத்தின்படி 2016இல் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்பது பற்றி இன்னமும் தெளிவில்லாத நிலைமை காணப்படுகிறது.
குறிப்பாக தமிழ் மக்களுக்குத் தெரியாத வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று சொல்லப்படுவது, தீர்வு தொடர்பில் பலத்த சந்தேகத்தைத் தருகிறது.
இத்தகையதோர் நிலையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இனப் பிரச்சினைக்கான தீர்வு என்னவாக இருக்கவேண்டும் என்பதை எழுத்து மூலம் தயாரிப்பதற்கான ஆயத்தங்களும் 2016ஆம் ஆண்டில் நடக்க இருப்பது 2016 தமிழ் மக்களுக்கு ஒரு காத்திரமான தீர் வைத் தரும் என நம்பலாம்.
எதுவாயினும் தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது தமிழ் அரசியல் தரப்புக்கள் இடையே இருக்கக் கூடிய ஒற்றுமை, ஒரே கருத்து என்பவற்றைப் பொறுத்தும் சர்வதேச சமூகத்தை எவ்வாறு தமிழ்த் தரப்புக்கள் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைப் பொறுத்துமே தங்கியுள்ளது.
எதுவாயினும் கடந்து போன ஆண்டுகள் நமக்கு தந்துபோன துன்ப துயரங்கள் நீங்கி தமிழ் மக்கள் நிம்மதியாக-சுதந்திரமாக வாழ்வதற்கான ஆண்டாக 2016அமைய வேண்டும் என நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
அதேநேரம் தமிழர் தாயகமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாகாண அரசுகள் 2016 ஆம் ஆண்டில் எழுச்சியுடன் தமது பணியை மேற்கொண்டு மக்களின் உன்னதமான வாழ்வுக்காக பாடுபட வேண்டும்.
அதிலும் குறிப்பாக வடக்கு மாகாண அரசு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஒற்றுமையோடு தமிழ் மக்களுக்கு சேவையாற்ற திடசங்கற்பம் கொள்ள வேண்டும்.
எனினும் வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய ஒரு சில உறுப்பினர்கள் தொடர்ந்தும் சபையைக் குழப்பும் நோக்கில் செயற்பட்டு வருவதான செய்திகள் வேதனை தருவன.
தமிழ் மக்கள் பெருநம்பிக்கையோடு வாக்களித்து அவர்களை மாகாண சபை உறுப்பினர்களாக ஆக்கிவிட, அவர்கள் வடக்கு மாகாண அரசைக் குழப்பி அதில் இலாபம் உழைக்க நினைக்கும் செயல் ஒருபோதும் ஏற்புடையதல்ல. ஆகையால் 2016ஆம் ஆண்டையும் சுயநல அரசியலுக்காக செலவிடாமல் எங்களை நம்பி வாக்களித்த தமிழ் உறவுகளுக்காக பாடுபட பயன்படுத்துவோம்.
எல்லோரும் ஒன்றுபட்டால் தமிழர் வாழ்வு நிச்சயம் எழுச்சி அடையும். இது உறுதி.