குறித்த நீச்சல் தடாகத்தில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வரும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை கண்டறியவும் அது தொடர்பில் ஏ.எஸ்.பி.லியனகே பொலிஸ் மா அதிபரிடம் முன் வைத்த முறைப்பாட்டுக்கும் அமைவாகவுமே இந்த உத்தரவினை பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு(சி.சி.டி) ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மஹிந்த குடும்பம் அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லியனகே 73 கோடி ரூபா மதிப்பிலான தனது பீகொக் மாளிகையினை மஹிந்தவிற்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் தனது பீகொக் மாளிகையினை வழங்க முடியாது என அறிவித்திருந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் குறித்த மாளிகையின் நீச்சல் தடாகத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அங்கு மண் போட்டு நிரப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அங்கு மஹிந்தவின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வடக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான தங்கமே பீகொக் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.