இலங்கையின் அரசியலில் அறிக்கைகளும் உரைகளும் மட்டும் அதிகமாக வெளிவரும் காலம் இது.
ஒரு வீட்டுக்குள்ளிருந்தே முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்படுகின்ற ஒருவகை அரசியல் இப்போது கடை விரித்து வியாபாரம் நடத்துகிறது.
ஜனாதிபதி ஒன்று சொல்வார்; பிரதமர் மற்றொன்று சொல்வார். அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் தம்பாட்டுக்கு வெவ்வேறாகச் சொல்வர்.
எதிர்க்கட்சிகள் இவ்விடயங்களில் எதிரானவர்கள் அல்ல. இவர்களுக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் மெதுவாக ஓடிக்கொண்டிருக்கும்.
இவ்வாறான அறிக்கைகளையும் உரைகளையும் உள்வாங்கி முடியும்போது ஒருவகை மயக்கம் வருவதும் உண்டு. இவைகளில் சிலவற்றை மட்டும் இவ்வாரம் பார்ப்போம்.
ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சி அமைப்புக்குள்தான் அதிகாரப் பரவலாக்கலுடனான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் ஜனவரி 21ல் நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில், சம~;டி முறையிலான அரசியல் தீர்வு முயற்சிகளை மேற்கொள்வதென முடிவெடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இவரது கூற்றில் கூர்ந்து அவதானிக்க வேண்டிய சொற்பதம், ஷமுயற்சி மேற்கொள்ளப்படும்| என்பது. இது மிகவும் பலவீனமான சொற்பதம். இதன் அர்த்தமானது ஷமுயற்சி மட்டுமே மேற்கொள்ளப்படும்| என்றவாறு அமைவது.
அப்படியானால் முயற்சி பயனளிக்காவிட்டால் அரசாங்கம் கூறும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வுதான் முடிவு என்பது இங்கு சொல்லாமல் சொல்லப்படுகிறதா?
இதனைக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ள மறுக்குமாயின், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று கேட்க இடமுண்டு.
இங்கு கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள இன்னொரு கருத்து யாதெனில், ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் கூட்டமைப்பு இவ்வருட இறுதிக்குள் இயன்றதைச் செய்யும்” என்பதாகும்.
இயன்றதைச் செய்யும் என்பதுகூட மட்டுப்படுத்தப்பட்ட ஒரு செயற்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்சொல்லப்பட்ட ஷமுயற்சி| மற்றும் ஷஇயன்ற| என்னும் இரு சொற்பதங்களும் இயலாமையின் காரணமாக வெளிப்படும் இரட்டைக் குழந்தைகள் என்பதை புரிந்து கொள்வது நல்லது.
இதனுடன் ஒத்துப்போகும் வகையிலான இன்னொரு அறிவிப்பையும் பார்ப்போமா?
‘இவ்வருட இறுதிக்குள் தமிழரின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று சம்பந்தன் நம்புகிறார்” என்று கடந்த வார இறுதியில் கனடா வந்த சுமந்திரன் ஒரு நிகழ்வில் பேசுகையில் குறிப்பிட்டதாக, தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இவ்வருடத்தில் (2016) தமிழரின் பிரச்சனைக்கு நிச்சயமாகத் தீர்வு காணப்படுமென்று பல இடங்களில் சம்பந்தன் பகிரங்கமாகக் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். எந்தத் துணிவில் சிங்கள தேசத்தை நம்பி இவர் இவ்வாறு கூறுகின்றார் என்ற கேள்வி பலரிடம் உண்டு.
சிலவேளை அவருக்கான துணிகர சக்தி அவர் வணங்கும் காளி அம்மனின் சிங்கக் கொடியாக இருக்கலாமெனவும் பலர் நினைப்பதுண்டு. ஆனால் கூட்டமைப்பின் மற்றைய முக்கியஸ்தர்களிடம் அதில் நம்பிக்கை இல்லையென்பதையே சுமந்திரனின், ‘சம்பந்தன் நம்புகிறார்” என்ற கூற்று அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
ஷஅரசியலில் இதுவெல்லாம் சாதாரணமப்பா| என்று சினிமாப் பாணியில் சொல்லிவிடக்கூடிய காரியமல்ல இது.
தைப்பொங்கல் விழாவுக்கு யாழ்ப்பாணம் போன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்களின் பாற்சோறை (சிங்களத்தில் கிரிபத்) விட, தமிழரின் பொங்கல் நல்லாயிருந்தது என்று ஒரு இனிப்பான செய்தியை அவிட்டுவிட்டார்.
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல, அடுத்துக் கூறப்போகும் கசப்பான அறிவித்தலுக்கு சீனி பூசுவதுபோல இந்தச் செய்தி அமைந்தது.
‘காணாமற் போனவர்களில் பலர் இப்போது உயிருடன் இருக்கும் வாய்ப்பில்லை” என்பது இவரது விசேட பொங்கல் செய்தி.
மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ரணில், இப்போது திடீரென கரணமடித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சாதாரணமான ஒருவரல்ல. நாட்டின் பிரதமர். ஒவ்வொரு கூற்றுக்கும் பொறுப்புக் கூறவேண்டிய பதவியில் உள்ளவர். எனவே ஏனோ தானோவென்று எதனையும் கூறித் தப்பிக்க முடியாது.
தாம் கூறியதை அவர் தெளிவுபடுத்த வேண்டுமென்றும், தெரிந்த உண்மைகளை நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென்றும் காணாமற் போனவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர். ரணிலின் காதுக்கு இது எட்டினாலும் அவர் செய்வாரா என்பது சந்தேகம்.
மகிந்த அரசாங்கத்தில் மனித உரிமைகள் விவகார அமைச்சராகவிருந்த (இப்போதும் அமைச்சராகவுள்ள) மகிந்த சமரசிங்க இது தொடர்பாக வேறொரு கருத்தைக் கூறியுள்ளார்.
‘காணாமற் போனதாகச் சொல்லப்பட்ட பலரும் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் பற்றிய விபரங்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்களிடம் கேட்டும் அவர்கள் தர மறுத்துவிட்டனர்” என்பது இவரது கூற்று.
ஒரே அரசாங்கத்தின் பிரதமரும் அவரது மந்திரியும் காணாமற் போனவர்கள் விடயத்தில் கொண்டிருக்கும் கரிசனை விசித்திரமானது.
இந்த விடயத்தின் ஷகிளைமாக்ஸ்| என்னவெனில் கூட்டமைப்பின் சம்பந்தன் தெரிவித்திருக்கும் கருத்து.
‘ரணில் விக்கிரமசிங்க கூறியது காணாமற் போனோர் பிரச்சனைக்கு முடிவாக அமையாது” என்று தெரிவித்துள்ள இவர், இந்தக் கருத்தால் தாம் மிகவும் வருத்தமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 15ம் திகதி ரணில் கூறிய கருத்துக்கு உடனடியாக விளக்கம் கேட்டிருக்க வேண்டிய பொறுப்பான பதவியில் (எதிர்க்கட்சித் தலைவர்) இருக்கும் சம்பந்தன், ஜனவரி 21ம் திகதி கிளிநொச்சியில் கூட்டமைப்பின் கூட்டத்தில்தான் மௌனம் கலைத்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இவர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் மண்டப வாசலில் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால்தான் சம்பந்தன் இப்போதாவது வாய் திறக்க நேர்ந்தது என்பது யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரின் கருத்து.
இவ்வாறு இன்னும் பல அதிரடிக் கருத்துகள் அடிக்கடி வெளிவரும் சாத்தியங்கள் இல்லாமலில்லை.
சொல்வதும், சொல்லாதிருப்பதும், சொன்னதைப் பின்னே மறுப்பதும், இன்றைய அரசியலில் நவீனமயப்படுத்தப்பட்ட செயற்பாடாகிவிட்டது.