ஐக்கிய இலங்கைக்குள் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் இடையில் இறைமையை பகிர்ந்து கொள்ளும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டதாக உத்தேச புதிய அரசியலமைப்பு அமைய வேண்டுமென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
யாழ்ப்பாணப் பொது நூலக கேட்போர் கூடத்தில் பல்லின சமூகங்கள் மத்தியில் அரசி யலமைப்பை உருவாக்குதல் தொடர்பான கருத் தரங்கொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்நாட்டிலுள்ள பிரிபோர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து அரசியலமைப்புக் கற்கைகளுக்கான நிறுவனம் "பல்லின சமூகங்கள் மத்தியில் அதிகாரப்பகிர்வு, சவால்கள், மனக்காட்சிகளின் அரசியலமைப்பு முன்மாதிரிகள்' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய இலங்கைக்குள் இறைமையை பகிர்ந்து கொள்வதற்கான அழைப்பை வடக்கு முதல்வர் விடுத்திருக்கிறார்.
"தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்கு திட்டமிட்ட நேர்மையான எண்ணப்பாடுகளும் அரசியலமைப்பு ரீதியான விசேட ஏற்பாடுகளும் அதி முக்கியமானவை'யென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. இந்தத் தீவில் வாழும் மக்கள் மத்தியில் இறைமையை பகிர்ந்து கொள்வதனூடாக ஆட்சி அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதுடன் தொடர்புபட்டதாக தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளது.
"பகிர்ந்து கொள்ளப்பட்ட இறைமையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு காணி, சட்டம், ஒழுங்கு, சுகாதாரம், கல்வி, வளங்கள், நிதி அதிகாரங்கள் உட்பட சமூக, பொருளாதார, அபிவிருத்தி என்பன பற்றியதாக இருப்பது அவசியமானதாகும்' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
"தமிழர்கள் சுய நிர்ணய உரிமையைக் கொண்டவர்களெனவும் ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ்பேசும் முஸ்லிம் சமூகத்திற்கான போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனி தமிழ்பேசும் மாகாணமாக அமைக்கப்படவேண்டும்' என்றும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த யோசனைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நிராகரித்திருந்தனர்.
உத்தியோகபூர்வ அறிக்கையில், சமஷ்டி அரசியலமைப்பை விக்கிரமசிங்க நிராகரித்திருந்தார்.
மத்தியும் மாகாணங்களும் பகிர்ந்து கொள்வதாக இறைமை பற்றிய கருத்தீட்டை ஏற்றுக் கொள்ளுதலை சமஷ்டி முறைமையை அங்கீகரிக்கிறது. நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை கிடையாதென பிரதமர் ரணில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
"பௌத்தனாக, சிங்களவனாக, இலங்கையனாக நாட்டை பிளவுபடுத்த மாட்டேன்' என்று பிரதமர் தெரிவித்திருந்தார். இதேவேளை கூட்டு எதிரணிக் குழுவுக்கு இப்போது தலைமைதாங்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, 13 ஆவது திருத்தத்தில் கொண்டிருக்கும் அதிகாரப்பகிர்வுப் பொதியைக் கூட புதிய அரசியலமைப்பு கொண்டிருக்கக்கூடாதென தெரிவித்திருந்தார்.
மாகாணங்களுக்கு காணி, சட்டம், ஒழுங்கு தொடர்பான அதிகாரங்களை வழங்குவதையும் அவர் எதிர்த்திருந்தார்.
மிகச் சிறிய நாடான இலங்கை ஒன்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் படையை கொண்டிருக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டதுடன் இலங்கையிலும் பார்க்க பெரியதான தமிழ் நாடே ஒரேயொரு பொலிஸ் படையையே கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.