எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே என்பதையும் உலகில் எங்கு தமிழர்கள் துயருற்றாலும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் துடித்தெழுவார்கள் என்பதையும் கடந்த காலங்களில் உணர்வாகவும் செயலாகவும் நிரூபித்து காட்டியவர்கள் அன்னைத் தமிழக உறவுகள். ஈழ தமிழ் மக்களின் துயர் கண்டு துடி துடித்து உயிர் துறக்கும் ஈகைகள் வரை தமிழக உறவுகள் கை கொடுத்தாற்றிய கால கடன்களை மறவாமல் நன்றியுணர்வோடு அவர்கள் இடர் களைய கடனாற்ற உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் உறவுகள் முதன் முதலாக முன்வந்த நிகழ்வாக அண்மையில் வந்த வெள்ள இடர் களைவு பணி அமைந்தது. அந்த வகையில் அன்னை தமிழக வெள்ள இடர் களைவுப் பணிக்காக கனடிய மண்ணில் இருந்து தமிழகம் சென்று நேரடியாகவும் தமிழக அரசினூடாகவும் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடிய தமிழ் மக்களின் நிதி சேகரிப்பை ஒப்படைக்கும் வரலாற்று பணியினை கனடியத் தமிழர் தேசிய அவை(NCCT) உறுப்பினர்கள் ஆற்றிவிட்டு வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் இயற்கை அனர்த்தமான மழை வெள்ளத்தில் சிக்குண்டு தவித்த உறவுகளின் கண்ணீர் துடைக்கும் வகையில் கனடியத் தமிழர் தேசிய அவையால்(NCCT) டிசம்பர் மாதம் 4ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதிசேகரிப்பில் சேகரிக்கப்பட்ட 46,104 கனடிய டொலர்கள் பணத்தை கனடிய தமிழர் தேசிய அவையினர்(NCCT) பின்வருமாறு தமிழக மக்களைச் சென்றடையச் செய்துள்ளார்கள். 1) கனடியத் தமிழர்களின் கடமை உணர்வின் வெளிப்பாடாக சேகரிக்கப்பட்ட நிதியில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினுடாக 21,000 கனடிய டொலர்களை நேரடியாக அமைச்சர் செல்லூர் கே. இராஜு அவர்களிடம் தமிழக சட்ட சபை வளாகத்தில் நேரடியாக 15 நிமிட சந்திப்பின் பின் கனடிய தமிழர் தேசிய அவையின்(NCCT)உறுப்பினர்களான ஊடக பேச்சாளர் தேவா சபாபதி மற்றும் ரொனால்ட் அவர்களும் கையளித்தார்கள்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அ. தி. மு. க. கட்சியின் ஒரு அமைச்சரை புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் தேசிய அமைப்பு ஒன்று நேரில் சந்தித்து பேசியது இதுவே முதல் முறையாகும். இரு தேச தமிழர்கள் நிலை குறித்தும் பல்வேறு விடயங்களையும் பேசக் கிடைத்த ஒரு சந்திப்பாக இந்த குறுகிய கால சந்திப்பு அமைந்தது. 2) அதனைத் தொடர்ந்து , மிகுதி 25,104 கனடிய டொலர்களை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய இடங்களான போரூர், நெற்குன்றம், பெரும்பலூர், மூலைக்கடை, பொன்னேரி, பழம்தண்டலம்(2),ஆலந்துர்(2),திருவெற்றியூர் ஆகிய பகுதிகளுக்கு 10 கட்டங்களாக உதவிப்பொருட்கள் எடுத்து சென்று மக்களை சந்தித்து கையளித்து இருக்கிறார்கள்.
கனடியத் தமிழர் தேசிய அவையால்(NCCT) முன்னெடுக்கப்பட்ட எம் தமிழக உறவுகளின் துயர்களையும் காலப்பணியில் நேசக்கரம் நீட்டிய அனைத்து அமைப்புகளையும், சங்கங்களையும் ,தனிஉறவுகள் அனைவரையும் நன்றியுணர்வோடு இறுகப்பற்றிக் கொள்கின்றது கனடியத் தமிழர் தேசிய அவை(NCCT).
இவ்வேலைத்திட்டத்தில் உதவி வழங்கிய அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் ,மக்களுக்கும் ,ஊடகங்களுக்கும் நன்றி சொல்கின்றது கனடிய தமிழர் தேசிய அவை(NCCT). எதிர்காலத்திலும் கனடிய தமிழ் மக்களின் குரலகாவும் செயலாகவும் தொடர்ந்தும் பணியாற்றும் கனடிய தமிழர் தேசிய அவை என்பதையும் உறுதி கூறுகின்றோம். “இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எங்கள் பகைவர் என்றோ மறைந்தார்” என்ற பாவேந்தர் வரிகளுக்கு அமைய உலகத் தமிழ் உறவுகள் வலுப்பட வேண்டிய காலங்களை வசமாக்குவோம்.
நன்றிகளோடு
கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)
தொலைபேசி: 416-830-7703 - மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/ncctonline