தமிழ் மக்களுக்கு நல்லாட்சி தரக்கூடிய தீர்வு என்ன என்பது இந்த ஆண்டுக்குள் தெரிந்துவிடும்.
2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் பரிபூரண நம்பிக்கையோடு உள்ளார்.
இவை எல்லாம் நடந்தேறுமா? என்பதைப் பார்ப்பதற்கு இன்னமும் பத்து மாதங்கள் போதுமானவை.
நம்மை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் எதனையும் தரப்போவதில்லை என்பதே உண்மை.
காலகாலமாக எங்களை ஏமாற்றி வந்த ஆட்சியாளர்கள் இப்போது கூட்டுச் சேர்ந்து ஏமாற்றப் போகி ன்றனர். ஜனாதிபதி மைத்திரி - பிரதமர் ரணில் என்ற தேசிய அரசாங்க சாயல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சாதகமானதாக இருந்த போதிலும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் எவ்வாறு காலம் கழிப்பது என்பது பற்றியே தேசிய அரசு கூடி ஆராயும் என்பது தான் உண்மை.
இலங்கை அரசாங்கத்தை நம்பி எங்கள் பிரச்சினை தீரும் என்று யாரேனும் நம்பினால் அதைவிட மடமைத் தனம் வேறு எதுவுமாக இருக்க முடியாது. இதை நாம் கூறும்போது, அப்படியானால் இனப்பிரச்சினைக்கு தீர்வே இல்லையா? என்ற கேள்வி உங்களிடம் எழுவது நியாயமானதே.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரேவழி இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதாகும்.
சர்வதேச அழுத்தம் என்பது இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதன் ஊடாக அமைய வேண்டும்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடக்குமாக இருந்தால், இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு தானாக முன்வரும்.
அதேநேரம், இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படக் கூடாது என கோமிடும் பேரினவாதிகளும் தங்கள் கொக்கரிப்பை கைவிட்டு பெட்டிப்பாம்பாகி விடுவர்.
எனினும் சர்வதேச விசாரணை என்பதை எங்கள் தமிழ்த் தலைமை இலங்கை அரசுக்காக விட்டுக்கொ டுத்து விட்டமைதான் எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு.
சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் மெத்தனப்போக்கை கொண்டிருந்த போது, இலங்கை ஆட்சியாளர்கள் கூறிய முதல் வாசகம் மின்சார நாற்காலியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை காப்பாற்றினோம் என்பதுதான்.
அப்படியானால், சர்வதேச விசாரணை நடந்திருந்தால் முன்னாள் ஜனாதிபதிக்கு மின்சார நாற்காலியில் இருத்தி தண்டனை வழங்கப்படும் என்பது இன்றைய ஆட்சியாளர்களின் கூற்றில் இருந்து நிரூபண மாகிறது.
எனினும், இதுபற்றி எங்கள் தமிழ்த் தலைமை அலட்டிக்கொள்ளாமல் இருப்பதுதான் தமிழ் மக்கள் செய்த பாவச்சுமை எனலாம்.
எது எப்படியாயினும் இன்று இருக்கக் கூடிய சூழ் நிலையில் தமிழ் மக்களின் ஒற்றுமை ஒன்றுதான் எங்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய சக்தியாக உள்ளது.
இருந்தும் தமிழ் மக்களின் ஒற்றுமை, அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கினால் அடிபட்டுப் போகிறது. இத்தகைய அரசியல்வாதிகளின் துரோகத்தனத்தை அரங்கேற்றி வைப்பதில் அரசியலில் நுழைந்து பதவி பெறத்துடிக்கும் சிலர் கடுமையாகப் பாடுபடுவதுதான் மிகப்பெரும் கொடுமைத்தனம்.
இத்தகைய கொடுமைத்தனத்தை வேரறுக்க தமிழ் மக்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்பட திடசங் கற்பம் பூணவேண்டும். அப்போதுதான் கயமைத்தனங்கள் அடிபட்டு உரிமை கிடைக்க வழியேற்படும்.