தமிழர் தரப்புடன் அன்றே இணங்கியிருந்தால் இன்று அத்தனை இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது (கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண சுட்டிக்காட்டு)


'தமிழர் தரப்புடன் அன்று நாம் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால், இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அதற்கு தெற்கின் சிங்களத் தலைவர்கள் அனைவரும் பொறுப்புகூற வேண்டும்.\\\'

கொழும்பில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் குறிப்பிடுகையில், \\\'தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். சட்டம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

நவீனத்துவ போக்கை கருத்தில் கொண்டும், மக்களின் அடிப்படை பிச்சினையை கவனத்தில் கொண்டும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக அதிகார பரவலாக்கல் முறைமை ஆணித்தரமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

உலகிலேயே மிகவும் பலமான ஜனாதிபதி ஆட்சி முறைமை இலங்கையில் தான் இருந்தது. இது மாகாண அதிகாரங்களை முழுமையாக பாதித்தது. அதேபோல் தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பிலும் முன்னைய அரசியலமைப்பிலும் நாட்டுக்கு பொருந்தாத பல காரணிகள் உள்ளன. இது தொடர்பில் மக்கள் ஆணை சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதுவே தமிழ் மக்கள் ஆயுதத்தின் பக்கம் தள்ளப்படவும் தமது உரிமைக்காக போராடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

கடந்த காலத்தில் தனிக்கட்சி அரசாங்கம் அமைத்தும் நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிப்பட்டன. எனினும் இந்த தேர்தலின் போது எந்தவொரு கட்சிக்கும் மக்கள் முழுமையான ஆணையினை கொடுக்கவில்லை. ஆகவே பிரதான கட்சிகள் ஒன்றிணைந்தே இந்த அரசாங்கத்தை பலப்படுத்தியுள்ளன.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் மிகவும் பொருத்தமான வகையில் அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை ஒன்றிணைத்து மிகவும் உயரிய வகையில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் அரசியலமைப்பை உருவாக்க சந்தப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசித்து உருப்படியான ஒரு தீர்மானத்தை எட்டவேண்டும்.

ஒற்றையாட்சி என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது அன்று பல குழப்பங்கள் ஏற்பட்டன. சமஷ்டிக்கு அன்று பல்வேறு முரண்பாடுகள் எழுந்தன. அன்று நாம் தமிழர் தரப்புடன் இணக்கப்பாட்டுடன் பயணித்திருந்தால் இன்று இத்தனை இழப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. அதற்கு தெற்கின் சிங்கள தலைவர்கள் அனைவரும் பொறுப்புகூற வேண்டும்.

அதேபோல் தேசிய பிரச்சினை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. ஆனால் கட்சி மட்டத்தில் அதிகாபூர்வமாக எந்த கலந்துரையாடலும் இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை. உடனடியாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

இப்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், பௌத்த மதம் பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் பலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நாட்டில் பெரும்பான்மை மக்களின் உரிமைகள் தொடர்பில் அக்கறை கொள்ள வேண்டும். அதேபோல் பௌத்தம் முன்னுரிமை பெற்றாலும் ஏனைய மத உரிமைகளையும் அவர்களின் பண்புகளையும் பாதிக்கக் கூடாது. அவர்களின் மத சுதந்திரம் எந்தவித தடைகளும் இன்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறிலங்கா என்ற பொதுப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும், கட்சி பெயர்களில் தமது இன அடையாளம் இருக்கக் கூடாது, பிறப்புச்சான்றிதழில் இலங்கையர் என்ற பொது அடையாளம் இருக்க வேண்டும் என கூறுவது எந்த வகையிலும் பிரச்சினைகளை தீர்க்க உதவாது. இந்த விடயங்களில் தடைகளை விதிப்பது அந்த இனத்தவரின் உரிமைகளை தடுக்கும் வகையில் அமையும். இன அடையாளத்தை தடுப்பது மிகப்பெரிய தவறாகும்.

ஆகவே முரண்பாடுகள் உள்ள விடயங்கள் தொடர்பில் ஆழமாக ஒவ்வொரு காரணங்களையும் ஆராயவும் ஏனைய விடயங்களில் ஒத்துழைக்கவும் மிகவும் தகுதியான அரசியலமைப்பு ஒன்றை இந்த ஆட்சியில் உருவாக்க முடியும்.

இந்த விடயத்தில் காலத்தை கடத்துவது எந்த வகையிலும் நன்மையளிக்காது. முடிந்தவரையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அரசியல் அமைப்பை உருவாக்கி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்\\\' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila